பாரம்பரியம் நவீனம் இரண்டும் இருக்கலாமே

‘திமுக முற்போக்கு சிந்தனையுள்ள கட்சி. அறிவியல் அல்லாத இந்த சித்தமருந்து வேலைகளில் நேரத்தை வீண்டிப்பதை விட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும்!’ எனும் பொருள்பட பேசியிருக்கிறார் தருமபுரி திமுக எம்பி

எவரும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுள்ளவர்களே. அது தவறென்றால் அதைச் சுட்டிக்காட்டி சரியான கருத்தை சொல்வதும் நம் உரிமையே என்பதால் இந்தப்பதிவு.

தமிழகம் முழுவதிலும் 12 இடங்களில் கொரோனா சித்தமருத்துவ மையங்கள் என அறிவித்து அரசு இயங்கும் வேளையில், மருத்துவ அமைச்சர் 2 இடங்களை ஏற்கனவே திறந்து செயல்பாட்டுக்கு வைத்துள்ள வேளையில், அதே அரசின் உறுப்பினர் இப்படி சொல்வது, அவர் அங்கம் வகிக்கும் ஸ்டாலின் அவர்களின் அரசிற்கே எதிராக உள்ளது.

‘கீழாநெல்லியை கடிச்சி மென்று துப்பினா கொரோனா வராது’, ‘சாம்பிராணி இருக்கே அதோட புகை போட்டா மாயிஸ்ட் என்கிற ஈரப்பதமே இருக்காது. அப்புறம் எப்படி கொரோனா இருக்கும்?’ என்ற வகையில் சில நவீன ‘குரு’மார்கள் கருத்துக்களை அள்ளி விட, அந்த வகை காணொளிப் பதிவுகள் வாட்ஸ்ஆப்பில் பெருமளவில் பகிரப்பட்டதும், இப்படி அறிவியலாளர்கள் வெறுப்பதற்கு ஒரு காரணம்.  ‘சாம்பிராணி போட்டால் கொரோனா வராது!’ ‘கீழா நெல்லி மென்றால் வராது’ என்று துவக்கத்தில் சொன்னவர்களை அதன் பிறகு காணோம். அதற்குப் பிறகே கொரோனா தாண்டவமும் ஊரடங்கும் தொற்றுப் பாதிப்புக்களும் வந்தன.

‘நம்ம முன்னோர் ஒண்ணும் முட்டாளுங்க இல்ல!’ என்ற வகையில் ‘வேப்பிலை சாப்பிடு, மஞ்சளைத் தெளி சாம்பிராணி அடி கொரோனா போயிடும் பாரு!’ என்று ஆதாரமில்லாமல் அடித்து விடுவதும் தவறு. மூன்று வேளையும் வெறும் வயிற்றில் கபசுர குடிநீர் குடிப்பதும் தவறு. ஆவி பிடிச்சாலே கொரோனா செத்துவிடும் என்று நினைப்பதும் மடமை. சித்த மருத்துவமே தவறு என்று அடுத்த எல்லையில் நின்று பேசுவதும் தவறு.

அறிவியல் அறிக்கைதான் வேண்டுமென்றால், கடந்த கொரோனா அலை 1ன் போது, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டு ஆராய்ச்சி முடிவுகளை படித்துப் பார்க்கலாம். ‘கபசுர குடிநீர் எதிர்ப்பாற்றலை கூட்டி நோயின் தாக்கத்தை குறைத்து குணமளிக்க உதவுகிறது’ என்று ஆராய்ச்சி முடிகளையே உலகிற்கு உரக்க வெளியிட்டார் அவர்.

கோரோனா நோய்த்தொற்றாளர்களுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகளைத் தந்து குணமளித்துக் காட்டியவர்கள் சென்னையில் மருத்துவர் வீரபாபுவும், திருப்பத்தூரில் மருத்துவர் விக்ரம் குமாரும். இதற்குப் பாராட்டியே ‘தமிழகத்தின் டாப் 10 இளைஞர்கள்’ என்று ‘விகடன் விருது’ கொடுக்கப்பட்டது விக்ரம் குமாருக்கு.

கோவிட்டிலிருந்து மீண்டவர்களை மறுபடியும் தேற்றி உறுதியும் தெம்பும் அளிப்பவை நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம், அம்லிக்யூர் சிரப், அமிரான் சிரப் ஆகியவைதானே! இதற்கு ஈடாக ஆங்கில மருந்துகள் எதுவும் பலன்தரவில்லையே ‘போஸ்ட் கோவிட்’ நபர்களுக்கு.

எனக்கு ஆங்கில மருந்தின் மீது எதிர்ப்பும் இல்லை, சித்த மருந்து மட்டும்தான் என்ற பிடிவாதமும் இல்லை.  மக்களுக்கு குணமாக வேண்டும், நலம் வேண்டும். அவ்வளவே.

அறிவியலை சொல்லி ஆராய்ச்சி முடிவுகள் காட்ட சித்த மருந்தாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இப்போதுதான் அபெக்ஸ் ஃபார்மாவின் வழியே ‘க்ளெவிரா’ மாத்திரைகள் வந்துள்ளன.

ஆங்கில மருத்துவத்தை எதிர்க்கவும் வேண்டாம், பாரம்பரிய மருத்துவத்தை புறந்தள்ளவும் வேண்டாம். இரண்டும் இருக்கலாமே!

நிறைய புதிய மாற்றங்களை செய்ய நிறைய முன்னெடுப்புகளை எடுக்கிறது ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு. அது தொடரட்டும்.

வாழ்க! வளர்க!

– மணக்குடி மண்டு
19.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *