வல்லாரைத் துவையல் ஆசிய பண்ணலாமே

வல்லாரைத் துவையல் எளிதாக செய்யலாம், இதோ வழி! உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.

…..

பாப்பாக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வடமேற்குக் கண்ணியின் பெருவரப்பில்
சிறுவனாக அப்பாவோடு நடந்த போதெல்லாம் பாட்டையோரத்து கீரையைக் காட்டி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று குனிந்து கை நிறைய பறித்து, வலது பக்க கண்ணியின் நீர்முள்ளைக் கவனமாகக் கடந்து நீரில் கழுவி உடனே சாப்பிடத் தருவார். ஒரு வித கசப்பாகவே இருந்தாலும் அப்பா தருவதால் உண்பேன்.

அதன் பிறகு சரவணனோடோ ஆளவந்தாரோடோ போகும் போது நான் அப்பாவாக மாறி அவர்களுக்குப் பறித்து நீரில் கழுவி, ‘வல்லாரைக் கீரை பாரு, மூளைக்கு நல்லது’ என்று கொடுப்பதும், சில சமயங்களி்ல் வல்லாரை என்று நினைத்து உருவத்தில் கொஞ்சம் ஒத்த ‘எலிச்செவிக் கீரை’யை பறித்து மென்று ‘த்தூ’வென்று துப்பியதும் உண்டு.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வல்லாரை பறித்துக் கொண்டு வந்தார் மலரவர் ஆர் எம் ராஜேந்திரன். ‘ஒனக்கு ஏற்கனவே பயங்கர ஞாபக சக்தி. இதில வல்லாரை வேற தின்றயா, போன ஜென்மத்து ஞாபகம்ல்லாம் வந்துடபோவுது, பாத்துக்கோ!’ என்று கேலி செய்யும் முத்து ரகுபதியை பொருட்படுத்தாமல், வல்லாரையை கையிலெடுத்தோம்.
…..

வல்லாரையை நன்றாகக் கழுவி, உப்பு, புளி, வரமிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து நன்றாக வதக்கி, ஆறிய பின் அரைத்தால்… சத்து நிறைந்த வல்லாரைத் துவையல் தயார்!

சோற்றில் பிசைந்து, இட்லிக்கு, தோசைக்கு, கூழுக்கு என எதற்கும் தொட்டுக்கொள்ளலாம். ஆமாம் லேசாக கசக்கும். ஹீமோக்ளோபின் கூட்டும், மூளை நரம்புகளை உயிர்ப்பிக்கும், நினைவுத்திறன் கூடும், சீரண மண்டலத்துக்கு நல்லது, வெயில் கால பித்தத்தைக் குறைக்கும் என என்னென்னமோ சொல்கிறார்கள். இவற்றிற்காக சில கவளங்கள் லேசான கசப்பை அனுசரிக்க மாட்டீங்களா, என்ன?

நாங்கள் (பிரியாணி டைப் )தக்காளி சாதத்தோடு வல்லாரைத் துவையலை உண்டோம்.

(வல்லாரையை புளி சேர்க்காமல் சாம்பார் செய்பவர்களும் உண்டு)

செய்து பாருங்கள்.

Receipe Courtesy: வள்ளியம்மை ராஜேந்திரன் சொல்ல,
பிரியா பரமன் செய்ய,
பார்த்து ருசித்தவர் பரமன்.

  • பரமன் பச்சைமுத்து
    ஆர் ஏ புரம்
    16.05.2021

Vallarai

VallaraiThuvaiyal

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *