நெல்லி மோர் – அடிச்சி குடிங்க!

images-18.jpeg

‘இங்க பாரு! சென்னை 37 டிகிரி, வேலூர் 39 டிகிரி… ஆனா ஊட்டி 21 டிகிரி’

‘அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் இந்த வெய்ய கொறையுதா பாரேன்!’

…..

கோடை அலாதியான பழங்களை கொடையாகத் தருகிறது என்ற போதும் உடற்சூடு, அதீத வியர்வை வெளியேற்றம், வியர்க்குரு, சிறுநீர் சுருக்கம், கண் எரிச்சல், பார்வை மங்கிய உணர்வு என பல கோடை நோய்களையும் கூடவே கூட்டி வரத்தான் செய்கிறது.

கோடை நோய்களைத் தவிர்க்கும் முக்கிய சங்கதியான வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி நெல்லிக்கனி (சரி, நெல்லிக்காய்ன்னே வச்சிக்கோங்க, போங்க!). ‘கோடையில தினமும் பெரு நெல்லிக்காயை கடிச்சி சாப்பிடுங்க!’ என்று நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் எழுதியிருக்கிறார் பிரபல தோல் மருத்துவர் முருகுசுந்தரம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அருமையாக கூட்டும் நெல்லி என்கிறது சித்த மருத்துவம். தோலை பளபளப்பாக்கி பொலிவாக்க நெல்லியை சாப்பிடுங்கள் என்கிறது ஆயுர்வேதம்.

‘கடிச்சி சாப்டனுமா? பல்லு கூசாதா?’ என்று அஞ்சுபவர்களுக்கு, இதோ எளிய வழி – நெல்லிக்காய் மோர்!

நல்ல நெல்லிக்காய் ஒன்றை வெட்டி மிக்ஸியில் போட்டு, கொஞ்சம் பொதினா, கொத்தமல்லி, ஒரேயொரு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். (இஞ்சி வேண்டாம்) (சிலர் இதில் கறிவேப்பிலையையும் சேர்ப்பர். அவரவர் விருப்பம் அது. சுவை மாறும்). ஒரு தம்ளர் மோர் விட்டு் அடிக்கவும்.

வடிகட்டி தம்ளரில் ஊற்றினால்…
கோடையில் உடலின் தன்மையை காக்கும் ‘நெல்லி மோர்’ தயார்.

(நமக்கு புளிப்பு, வைட்டமின் சி அதிகமாக வேண்டும் என்பதால், நாம் 2 நெல்லிக்காய் சேர்த்து அடித்தோம். உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தீர்மானியுங்கள்)

நெல்லி மோர் பருகுங்கள், கோடை உபாதைகளை தவிரத்து உடல் நலம் கொள்ளுங்கள்!

வாழ்க! வளர்க!

(Receipe courtesy : Priya Paraman)

– பரமன் பச்சைமுத்து
31.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *