ஊரடங்கு நேரத்தில் ஒருவர்

wp-16224785173645093509496326166161.jpg

உறக்கம் என்பது உடலின் இயல்புத் தேவை என்பதைத் தாண்டி அது மனிதனுக்கும் இன்னும் சில உயிர்களுக்கும் இறைவன் கொடுத்த கொடை என்றே கருதுபவன் நான்.

இன்று ஒரு மனிதன் உறக்கத்தில் அமிழ்த்து கிடப்பதைப் பார்க்க நேரிட்ட போது, இந்தக் கருத்து கூடுதல் உறுதி பெற்றது.

ஊரடங்கு காலத்தில் வீதியோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கலாமே என்று மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கத்தின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட ‘உதவலாமே!’ செயல்பாட்டின் பொருட்டு, இன்று மயிலாப்பூர் – ஆர் ஏ புரம் – மந்தவெளி – நுங்கம்பாக்கம் – ஷெனாய் நகர் பகுதிகளில் மதிய உணவு விநியோகித்தோம்.

தேவநாதன் தெருவில் போய்க்கொண்டிருக்கும் போது, ‘ஏய், ஒருத்தரு அங்க தூங்கிட்டு் இருக்காரு. வண்டிய நிறுத்தி சாப்பாடு குடுத்துடுவோம்!’ என்று நிறுத்தி, ஒரு பிரிஞ்சி / பிரியாணி பொட்டலத்தை எடுத்துக் கொண்டு அவரை நோக்கிப் போகிறேன்.

தேவநாதன் தெருவில் இடப்புற பேருந்து நிறுத்த நீள் இருக்கையில் உடம்பைக் கிடத்தி உறங்கிக் கொண்டிருக்கிறார்.  உடைகளில் உடலில் ஏறியுள்ள அழுக்கின் அளவும் அது கூட்டியுள்ள வண்ணமும், அவர் குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதை சொல்லின.

ஊரடங்கு என்றாலும் ‘கொரோனா சிகிச்சை அவசரம்’ என்ற பதாகை ஒட்டிய வாகனங்கள், ஸொமோட்டா, டன்ஸு ஊழியர்களின் இரு சக்கர வாகனங்கள், மாநகராட்சி ஏற்பாட்டில் பழம் காய்கறி விற்கும் வாகனங்கள் என வாகனங்கள் செல்லும் முக்கிய தெருவில், வாகன இறைச்சல்களிடையே  தெருவையொட்டிய பேருந்து நிறுத்தத்தில் எதையும் சன்டை செய்யாமல் எதுவும் சட்டை செய்ய விட்டுவிடாமல் உறங்குகிறார் அவர்.

கோடையின் உச்சமான மே மாதத்தில்(38 டிகிரி), வெயில் கொளுத்தும் உச்சிப் பொழுதில், மின் விசிறி சுழன்றாலே போதாமல் உடல் தவிக்கும் நிதர்சனத்தில் காற்றோ மின்விசிறியோ இல்லாத ஒரு பேருந்து நிறுத்தத்தின் சொற்ப நிழலில், அங்கிருக்கும் நீள் இருக்கையில் அந்த மனிதன் அயர்ந்து தூங்குகிறான்.

‘இந்தாங்க உங்களுக்கு சாப்பாடு!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, அவரது இடுப்புக்கும் கைகளுக்கும் இடைப்பட்ட பகுதியினருகே வெளியே தெரிந்த கொஞ்சம் பென்ச்சின் மீது உணவுப் பொட்டலத்தை வைத்தேன்.  ‘சரி உடலில் பட்டால், விழித்து எழுவார். சாப்பிடுவார்!’ என்ற நினைப்பில் பொட்டலத்தை நகர்த்தி உடலில் படுமாறு தள்ளுகிறேன். உடலில் நன்றாகப் படுகிறது. ஆனால், உறக்கம் கலையவில்லை.

மறுபடியும் தள்ளி, ஒருக்கலித்து தூங்குபவரின் விலாவில் படுமாறு வைக்கிறேன். உடலில் படுகிறது. ஆனால் அவர் உணரவில்லை. அயர்ந்து ஆழ்ந்து  உறங்குகிறார்.  
இவை மொத்தமும் ஒரு நிமிடத்தில் முடிந்து விட, ஒரு நிறைவோடு காரை நோக்கி நடக்கிறேன்.

காரில் ஏறும் முன் திரும்பிப் பார்க்கிறேன். சூழல், சுற்றி நடப்பது என எதையுமறியாமல் உறக்கம் ஆட்கொள்ளக் கிடக்கிறான் அம் மனிதன்.

காரில் ஏறி அடுத்த மனிதனைத் தேடி நகர்ந்தாலும், மனதில் அவரைப் பற்றியே எண்ணம் ஓடுகிறது ஓரிரு நிமிடங்களுக்கு.

‘விழித்தெழும் போது தன்னருகில் ஓர் உணவுப் பொட்டலம் இருப்பதைக் காண்பார். எப்படி இருக்கும் அப்போது அவருக்கு? எப்படி எதிர்கொள்வானர் அவர் அதை!’

– பரமன் பச்சைமுத்து
31.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *