எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

நாம் சிலரை உற்றுக் கவனிக்கும் போது, நாம் அழைக்காமலேயே உள்ளுணர்வு எழுப்ப சடக்கென்று நம்மை நோக்கி திரும்புவார்கள், கவனித்திருக்கிறீர்களா? அப்படித்தான் எழுந்தாரவர்.

நாகேஸ்வரராவ் பூங்காவின் ஓரமுள்ள கல் இருக்கையில், கைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி இறங்குகிறோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின் முன்னெடுப்பான ‘உதவலாமே!’ செயல்களுக்காக).

பூங்காவிலிருந்து இறங்கி சரிந்து பிரியும் சாலையில் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ‘குடுத்தேயாகனும், இன்னொன்னு வேணும்!’ என்று கார் கண்ணாடியைத் தட்டி அடாவடி பண்ணும் அந்த கும்பலால் சேர்க்கப்படாமல் தனித்து கிடக்கும் இவர் மீது சில நொடிகள் கவனம் வரவே அவரை நோக்கி நடக்கிறேன்.

ஓரளவு நல்ல சட்டையும் அதிகம் அழுக்கில்லாத வேட்டியும் உடுத்திக் கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், அருகில் எவரோ வருகிறார்கள் என்ற உள்ளுணர்வால் எழுந்து பார்க்கிறார். பார்க்கிறேன்.

‘சாப்படறீங்களா? சரி, அங்கயே இருங்க. நான் வர்றேன்.’

‘இந்தாங்க!’

கும்பிடுகிறார். வெள்ளை தாடி. ஒடிசலான உடல். அழகாக மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டி. சில நாட்களாக தொடர்ந்து அணிந்திருக்கிறார் என உணர்த்தும் வேட்டி. கீழே தரையில் கழட்டி விடப்பட்ட ஹவாய் செப்பல். இவரது உடுப்பும் தோற்றமும் குறிப்பாய் அவர் அணிந்திருக்கும் நல்ல வெள்ளெழுத்துக் கண்ணாடி, ‘இவர் இரந்துண்டு வாழ்பவரைப் போலத் தெரியவில்லையே!’ என்ற எண்ணத்தைக் கொடுத்தன.

‘என்ன ஊர் நீங்க? வீடு எங்க? ஏன் இங்க படுத்திருக்கீங்க?’

‘விருத்தாசலம்’

‘விருத்தாசலமா! இங்க ஏன் இருக்கீங்க?’

‘பெயிண்ட் வேலை செய்யறங்க. நீலாங்கரையில சைட். பஸ் இல்ல. நீலாங்கரைக்கும் போக முடியல. இங்கயே கழியுது பொழுது’ என்றபடியே தன் தலைமாட்டிலிருந்த சாக்குப் பையை காட்டுகிறார்.

சில துணிகள் இருக்கும் போல. எங்கே குளிக்கிறார் எங்கே கழிக்கிறார் தெரியவில்லை.

‘சரிங்க, சாப்பிடுங்க!’

ஒரு கையில் உணவுப் பொட்டலத்தை வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் மரியாதை வணக்கம் செய்து விடை தருகிறார்.

இவர் பரம்பரை ஆண்டியில்லை, ஊரடங்கு பஞ்சத்திற்கு ஆண்டி.

‘எல்லாமும் இருந்தும் சில நேரங்களில் எதுவுமில்லை என்று செய்து விடுகிறது வாழ்க்கை.’

காரில் ஏறி தள்ளு கதவை தள்ளி அடைத்து விட்டு, கண்ணாடியின் வழியே தூரத்திலிருக்கும் அவரை திரும்பிப் பார்க்கிறேன்.

இரு கைகளும் உணவுப் பொட்டலத்தை ஏந்தி நிற்க, உணவையே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘எதுவுமில்லை என்று இருக்கும் நிலையில் எல்லாமும் கொடுத்தும் விடுகிறது வாழ்க்கை.’

அடுத்த மனிதனைத் தேடி நகர்கிறோம், நாம்.

  • பரமன் பச்சைமுத்து
    02.06.2021

Facebook.com/ParamanPage

Udhavalaamey

MakarchiMaanavargal

FoodForPeople

LockDownTime

LetsHelp

Malarchi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *