நன்றி எலந்தங்குடியாரே!

wp-16227322188062523304432770968332.jpg

வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, செய்யும் வேலையில் தன்னையே மறந்து தற்காலிக சோதனைகளை கடந்து விடும் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகளை எப்போதும் எனக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.

அடையாறு மலர் மருத்துவமனையிருக்கும் பிரதான சாலையையொட்டிய உள்வட்டச் சாலையில், ‘அடுத்தது யாருக்கு கொடுக்கலாம் உணவு!?’ என்ற தேடலோடு போய்க் கொண்டிருந்த நம் கண்களுக்கு அவர் தெரியவேயில்லை (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின் முன்னெடுப்பான ‘உதவலாமே!’ செயல்களுக்காக).

‘ஏன் ரிவர்ஸ்ல வர்றீங்க?’

‘சார், அங்க ஒரு வண்டிக்கு அடியில ஒருத்தர் இருக்காரு. நீங்க தேடற மாதிரி ஆளு போல தெரியுது!’

லோட் ஏத்திப் போகப் பயன்படும் ‘மீன் பாடி’ போன்ற அமைப்பிலிருந்த ஒரு மூன்று சக்கர வண்டி, அதன் பின் வலது மூலையில் இடுப்பும் கொஞ்சம் முதுகும் தெரிய தலையை வண்டிக்கு அடியில் உள்ளே விட்டபடி ஒரு மனிதர்.  அருகில் சென்று அழைத்த போதும், கவனிக்கவில்லை, வேலையில் தன்னை மும்முரமாய்க் கொடுத்திருக்கிறார்.  அவரைச் சுற்றி தரையில் கிடக்கும் நட்டுகள், ‘தின்னர்’ கிண்ணம், எண்ணெய், ப்ரஷ் ஆகிய பொருட்கள் அவர் ஏதோ பழுதுபார்த்து வண்டியை சீர் செய்கிறார் என உணர்த்தின.
‘வண்டி மெக்கானிக் போல!’ என்ற எண்ணத்துடன் குரல் கொடுக்கிறோம்.

தலையும் முதுகும் வெளியே வர வெள்ளைத் தாடி மனிதர் தோன்றுகிறார்.

‘சாப்டறீங்களா?’

வேலையில் மூழ்கி வேறு உலகத்தில் இருந்ததாலோ மூப்பினாலோ, உடனடியாக வெளிவர முடியவில்லை போல, விழிக்கிறார். புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

‘சாப்டறீங்களா?’

புரிந்து கொண்ட உடனே கும்பிட்டு கை நீட்டுகிறார். 

‘இந்தாங்க இது சாப்பாடு. இது உங்களுக்கு மாஸ்க்!’

‘மாஸ்க்’ என்று நாம் சொன்னதும் ஏதோ நினைவுக்கு வந்தவராய், மோவாயில் இருந்த மாஸ்க்கை மேலேற்றி மூக்கு வாயை மூடி சரியாக அணிந்து கொள்கிறார். தாடி மறைந்து போனது.

‘வண்டி மெக்கானிக் வேலையில அவ்ளோ ஈடுபாடு போல. மத்ததயெல்லாம் மறந்திடறாரு’ என்று நினைத்துக் கொண்டே கால் மடக்கி குத்துக்காலிட்டு அமர்ந்து பேசுகிறோம்.

‘இங்க எங்க வீடு? எந்த ஊரு?’

‘மாயவரம்!’

‘மாயவரமா? மாயவரத்தில எங்க?’

‘பக்கத்துல கிராமம்’

‘என்ன ஊரு பேரு?’

‘எலந்தங்குடி’

‘அட… தெரியுமே. மன்னம்பந்தல்லதான் நான் படிச்சேன்.’

‘என் பேத்தி அந்த காலேஜ்லதான் படிக்குது’

‘ஓ… நீங்க வண்டி மெக்கானிக்கா?’

‘தோ… அந்த பில்டிங் கடை செக்யூரிட்டி. ஊரடங்கு. எல்லாம் மூடியாச்சு. வேலையில்ல. வேற எங்க போறது. இதே தெருவில இங்கயே இருக்கேன்’

‘இந்த வண்டி?’

‘ரிப்பேருன்னாங்க. அதான் பாக்கறேன்’

‘சரிங்க ஐயா. நீங்க பாருங்க. சாப்புடுங்க!’

காவிரி பாயும் மயிலாடுதுறைப் பகுதியில் செந்நெல் அடித்துக் குவித்திருப்பார் இவர் ஒரு காலத்தில். அடையாறு ஓடும் சென்னைப் பகுதியில் செக்யூரிட்டியாக, வண்டி பழுது பார்ப்பவராக இன்று.

‘எலந்தங்குடி, கீரங்குடி, நீர் புரளும் மஞ்சள் வாய்க்காய், கரையில்  வாழைத்தோப்புகள் நிறைந்த நீர் மிகு காவிரி, மாப்படுகை, மன்னம்பந்தல்.. இவர் எப்ப மாயவரம் போவாரு?’ என மனதில் பலவும் ஓட கார் நோக்கி வருகிறேன்.

காரில் ஏறி அவரைப் பார்க்கிறேன். அதே இடத்தில் அதே நிலையில் அதற்குள் பொட்டலத்தைப் பிரித்து உண்டு கொண்டிருக்கிறார். அடுத்த செயலுக்குள் மூழ்கி விட்டார்.

அடுத்தடுத்த வேலைகளுக்குள் தன்னை முழுதாக ஈடுபடுத்தி இறக்கிக் கொள்பவர்கள் எதையும் கடந்து விடுகிறார்கள். கவலைப் பட நேரத்திற்கு நேரம் கொடுப்பதில்லை அவர்கள்.  அடுத்தடுத்து எதிலாவது ஈடுபட்டு அந்தக் கணங்களில் வாழ்ந்துவிடுகிறார்கள் அவர்கள்.

‘நன்றி எலந்தங்குடியாரே!’

அடுத்த மனிதரைத் தேடி நகர்கிறோம்!

– பரமன் பச்சைமுத்து
03.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *