முடி கொட்டுவதே இல்லை இவர்களுக்கு…

wp-1622818773027.jpg

ஒரு பள்ளிச் சுவரையொட்டிய நடைபாதை மேடையில் படியும் மர நிழலில் அமர்ந்து வெறுமனே சாலையை வெறித்துக் கொண்டு இருந்தவரை, ராயப்பேட்டையிலிருந்து திரும்பும் போது பார்த்தேன்.

‘யு டெர்ன்’ அடித்து எதிர்ப்புறம் வண்டியை நிறுத்தி விட்டு, தக்காளி சோறு பொட்டலமும் ‘மாஸ்க்’கும் எடுத்துக் கொண்டு இறங்கி அவரை நோக்கிப் போனோம் (ஊரடங்கு காலத்தில் வீதியோர மனிதர்களுக்கு உணவு விநியோகிக்கும், மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கங்கத்தின் முன்னெடுப்பான ‘உதவலாமே!’ செயல்களுக்காக).

‘சாப்பிடறீங்களா?’

ஆமோதித்து கும்பிடுகிறார்.

‘இந்தாங்க சாப்பாடு. இந்தாங்க மாஸ்க்’

வாங்கி வைத்துக் கொள்கிறார்.

‘வீடு எங்க?’

‘வூடுல்லாம் கெடையாது. முழுச் சென்னையும் நம்பூடுதான்!’

‘(திருவிளையாடல் சிவாஜி – நாகேஷ் மாதிரி பேசறாரே!’) அப்படீன்னா?’

‘வூடுல்லாம் இல்லீங்க. ஒரேயொரு அக்கா, அங்க ட்ரிப்லிக்கேணில இருக்கு. போறதில்ல. நமக்கு வூடுல்லாம் இல்ல’

‘குடும்பம்?’

‘யாரும் கெடையாது’

‘குழந்தைங்க, மனைவி?’

‘சின்ன வயசுலயே அப்பா அம்மா போயிட்டாங்க. கல்யாணமே பண்ணிக்கலை. இனிமே எங்க? வயசாயி பூட்டுதே’

‘என்ன வேலை செய்யறீங்க?’

‘(பழைய) பேப்பர் எடுக்கறது’

‘சரிங்க, சாப்பிடுங்க!’

காரில் ஏறி நகர்ந்த பின்னரும் அவர் சொன்னது ஓடுகிறது. 
‘வூடுல்லாம் கெடையாது. முழுச் சென்னையும் நம்பூடுதான்!’

வீடு உள்ளவனுக்கு அது மட்டுமே வீடு. வீடற்றவனுக்கு மொத்த ஊருமே வீடு. மொத்த உலகமும் ஊரு.

குடியிருக்க வீடில்லை. ஆனால் இருக்க இடமிருக்கிறது. நாளை பற்றித் தெரியாது, ஆனால் இன்றை வாழ்கிறார்கள்.  மன அழுத்தம் இல்லை. ஒரு முடி கூட உதிரவில்லை. (ஆமாம்… பெரும்பாலான வீதியோர மனிதர்களுக்கு முடி கொட்டுவதில்லையே!) நாளைய கவலையால் முடி கொட்டி வழுக்கை வந்து, வழுக்கை வந்ததால் கவலை வந்து முடி உதிர்வை தடுக்கும் மருந்துகள் தேடும் பிரச்சினைகள் இல்லை.

நாளையைப் பற்றியே அதிகம் அலட்டிக்கொண்டு அழுத்தம் கொள்பவர்களை விட, இன்றைய நாளை வாழ்பவர்கள் அழுத்தம் இன்றி வாழ்ந்து விடுகிறார்கள். என்ன ஆனாலும் உறங்கிவிடுகிறார்கள்.

அடுத்த மனிதரைத் தேடி நகர்கிறோம் நாம்.

– பரமன் பச்சைமுத்து
04.06.2021

#Udhavalaamey
#LockDown
#LockDiwnTimes
#FoodForPeople
#Food
#Malarchi
#MalarchiMaanavargal

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *