முன்னுதாரணமாக இருக்கட்டும் தலைவர்கள்

ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் என 14 கட்சித்தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு என்பது நல்ல செய்தி. அதை விட நல்ல செய்தி அவர்கள் ஒற்றுமையாக வெளியே வந்து ஊடகங்களுக்கு முன் நின்றது. இதில் சில தலைவர்கள் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டவர்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கொள்கை ரீதியாக வேறு பாடுகள் கொண்டிருப்பினும், தேர்தல், வளர்ச்சிப் பணிகள் என்று காஷ்மீர் – லடாக் அடுத்த நிலைக்கு வளர இவர்கள் அனைவரும் கைகோர்த்திருப்பது பெரும் வரவேற்பிற்குரியது.

காஷ்மீர் பண்டிட்டுகள் மீள் குடியமர்வுக்கும், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்பதால் லடாக் நடுவனரசின் கட்டுப்பாட்டில் கூடுதலாக சில காலம் என்பதற்கும் அனைவரும் ஒப்புதல் என்பது வியப்புக்குரிய ஆனால் நற்செய்தி.

இந்த அமைதியும் இணக்கமும் மாற்றமும் பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் பிடிக்கவில்லை என்பதும் பதறுகிறார்கள் என்பதும் சமீபத்தில் வெடித்த ட்ரோன் குண்டிலும், ‘வேறு ஆட்சி இருந்திருந்தால் உறவு வலுப்பட்டிருக்கும்!’ என்ற பாகிஸ்தான் பிரதமர் பேச்சிலும் தெரிகிறது.

தேர்தல் அரசியலில் அடித்துக் கொள்ளட்டும், மாநில – நாட்டு நலனில் ஒன்றுபடட்டும் தலைவர்கள். அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும் இவர்கள்.

– மணக்குடி மண்டு
28.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *