அந்தப் பாடல்களை அவர்கள் இசைப்பதைக் காண்கையில் வருவது ஓர் அனுபவம்

“….  திரையிசைப் பாடல்களை திரைப்படங்களில் காட்சிகளோடு காண்பது ஓர் அனுபவம். அதே பாடல்களை அதன் இசையமைப்பாளர், பாடகர்கள் மேடைகளில் நிகழ்த்தும் போது கண்டு ரசிப்பது வேறொரு அனுபவம். சில பாடல்களை சிலர் இசைப்பதை காண்பது பேரனுபவமாக இருக்கும். மேடைகளில் அதே பாடல்களை மறு உருவாக்கம் செய்து அவர்கள் இசைப்பதை பார்க்கையில், அந்த மூல பாடலின் மீது ஒரு மரியாதையும் விருப்பமும் வந்துவிடும். ஏற்கனவே கேட்ட பார்த்த பாடல்தான் என்றாலும் சிலரது மறுஉருவாக்கம் அந்தப் பாடலை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிப் போட்டுவிடும்.

ஒரு மேடை நிகழ்ச்சியொன்றில் இயக்குனர் ஆர் வி உதயகுமாரை மேடைக்கு அழைப்பதற்காக அவரது பாடலில் ஒன்றான ‘என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை…’ பாடலை பாடகர் எஸ்பிபி பாடுவதை நீங்கள் காண நேர்ந்திருந்தால், இனி அந்தப் பாடலின் மீது நீங்கள் கொண்ட மொத்த உணர்வும் மாறிவிடும்.

‘தையா தையா’ பாடலை ஏ ஆர் ரஹ்மான் தன் குழுவினரோடு மேடையில் இசைப்பதை பார்த்தால், ‘வளையோசை கலகலவென…’ பாடலின் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழலிசை முதலில் எப்படி இருந்தது இளையராஜா அதை எப்படி மாற்றினார் என்பதை அவரே உருவாக்கிகாட்டும் அந்த மேடை நிகழ்ச்சியை அல்லது அதன் காணொளித்துண்டை நீங்கள் கண்டிருந்தால் அந்தப் பாடல்களின் மீது நீங்கள் கொண்டிருக்கும் உணர்வே மாறிப்போகும்.

எத்தனையோ இசைக்குழுக்கள் இப்படி எத்தனையோ பாடல்களை நாம் போகும் எத்தனையோ இடங்களில் இசைத்துக் கொண்டேதானே இருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் இப்படி நம் உணர்வுகளை மாற்றிப்போடுவதில்லையே. இசைப்பதில் மட்டுமில்லை. எப்படி இசைக்கிறார்கள் என்பதில் இருக்கிறது மேதமை.

எப்போதாவது ஒரு திரையிசையை கேட்கலாம் என எண்ணம் வரும்போது என் முதல் தேடல் ‘பெர்க்லி ஸ்கூல் ஆஃப் ம்யூசிக்’ குழுவினர் அந்தப் பாடலை ஏற்கனவே இசைத்திருக்கிறார்களா என்பதே.

உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு திரையிசைப் பாடலை ஒரேயொரு முறை பெர்க்லி குழுவினர் இசைக்க பார்த்தீர்களானால் தீர்ந்தது. இனி அந்தப் பாடலை அதன் நடுவில் வரும் வாத்திய ஓசைகளை, இசை குறிப்புகளை நீங்கள் விரும்பத் தொடங்குவீர்கள். கீ போர்டை வாசிப்பவர், கையில் சதங்கையை வைத்துக்கொண்டு ஒலி எழுப்புபவர், பின்னணிக்கு கோரஸ் பாடுபவர்கள், பாடலை பாடுபவர் என ஒவ்வொருவரும் அவ்வளவு மகிழ்ச்சியாய் உருகி மலர்ந்து ஒரு தவம் போல செய்வார்கள். குறிப்பாய் நீண்ட சிகையை வாரி அள்ளி முடித்துக்கொண்டு வாயைக் குவித்து புல்லாங்குழலில் வைத்து இசைக்கும் அந்த சீனர், சிறிது, பெரிது, குட்டை, நீண்டது என பல புல்லாங்குழல்களை அருகில் வைத்துகொண்டு அவர் வாசிக்கும் விதம், வாசிக்கும்போது அதில் தன்னையே தரும் விதம் உங்களை மயக்கியே விடும். 

இணையத்தில் போய் ‘பெர்க்லி மீட்ஸ் ஏ ஆர் ரஹ்மான்’ என்று தேடி அதில் ‘ஜியா ஜாலே (தில் சே)’ என்ற பாடலை தேர்வு செய்து பாருங்கள். அவர்கள் மகிழ்ச்சியாய் தவமாய் அதை செய்வது புரியும்.  ….”

(‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் ,
ஜூலை 2021 இதழிலிருந்து)

– பரமன் பச்சைமுத்து
28.06.2021

#Valarchi
#ValarchiTamilMonthly
#BerkeleyMusic
#BerkeleySchoolOfMusic
#Spb
#Ilaiyaraja
#ARRahman
#MalarchiPublications

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *