‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ – ‘என் எண்காலி ஆசான்’ : திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து:

wp-1625402343370.jpg

ஆழ்கடலுக்குள் நீந்தித் திரியப் போன க்ரெய்க் ஃபோஸ்டரின் கண்ணில், சரேலென நகர்ந்து மறையும் வித்தியாசமான எதுவோ ஒன்று தென்படுகிறது. அது ஓர் ஆக்டோபஸ்(‘எண்காலி’) என்பதை அறிந்து கொள்ளும் அவர், எலும்பில்லா மெல்லுடல் கொண்ட அந்த ‘லிக்விட் அனிமல்’ மீது ஓர் ஆர்வம் கொள்கிறார்.

அடுத்த நாளும் கடலின் அடியாழத்தில் கடற்பூண்டுகள் செழித்துக் கிடக்கும் அதே பகுதிக்குத் திரும்பப் போகிறார், அந்த ஆக்டோபசைத் தேடி. இவரைப் பார்த்ததும் மின்னலென விலகி ஓடும் அந்த ஆக்டோபஸ் அவரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நீர்மூழ்கிக் கவசமும், காலுக்கு துடுப்பும் அணிந்துகொண்டு தினமும் ஆக்டோபசைக் காணப் போகிறார் அவர். தூரத்தில் நின்று கொண்டு தன் இருப்பைக் காட்டி நெருங்கி வந்தால் முகம் காட்ட மறுக்கும் ’மெல்ல திறந்தது கதவு’ படத்து அமலாவைப் போல தூரத்திலிருந்தே விலகியோடும் ஆக்டோபஸ் திடீரென ஒரு நாள் காணமல் போகிறது.

எப்படியும் அதை கண்டுவிடவேண்டும் என்ற தேடலில், அவற்றின் வாழ்வு, உண்ணும் உணவு, வசிக்கும் பாங்கு, வாழ்விடங்கள் என ஆக்டோபஸ் பற்றி நிறைய அறிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்டோபஸின் உலகத்திற்குள் நுழைகிறார். கடலின் அடியாழத்தில் பகுதி பகுதியாக அலைந்து திரிந்து, படித்தறிந்ததைக் கொண்டும் தடங்களைக் கொண்டும் தடம் பிடித்து ‘இங்கதான் எங்கயோ இருக்கா இவ!’ என்று அடியாழ கடற்பாறையின் முன்னே போய் நிற்கும் போது அது நடக்கிறது.

க்ரெய்க்கின் எதிரே அவள், அந்த ஆக்டோபஸ், கற்பாறைகள் நிறைந்த தனது புது இடத்தில். நகரை விட்டு பல மைல்கள் பயணித்து எங்கோவொரு தூரத்து கடற்பிரதேசத்து ஊரில் மெடிக்கல் கேம்ப்பில் இருக்கும் தன்னை புயலிலும் மழையிலும் தேடி அலைந்து கண்டு எதிரே வந்து மொத்த உருவமாக நிற்கும் (‘அலைபாயுதே’ படத்து) கார்த்திக்கை(மாதவன்) கண்டு உருகி ஓடி வரும் சக்தியை(ஷாலினி)யைப் போல, பாய்ந்து முன்னேறி வருகிறது அது. தான் பின்னடைந்தாலும் ‘என்னை தேடி தேடி வந்த இல்ல. இதோ நான் வர்றேன் உன்கிட்ட!’ என்பது போல முன்னேறி வருகிறது அது. கை நீட்டி தொட்டுக் கொள்ளும் அந்த காட்சி, க்ரெய்க்கு மட்டுமல்ல நமக்கும் வித்தியாச அனுபவம்தான்.

கண் பார்வையில்லாமல் வெறும் நுகர்தலின் மூலமே இரையைக் கண்டு வேட்டையாடும் ‘பைஜாமா சார்க்’ எனப்படும் ‘வரி சுறாக்கள்’ளின் வேட்டையிலிருந்து தப்புவது, சுறாவின் கடிக்கு ஒரு கையை இழப்பது, கை திரும்பவும் முளைக்கும் வரை பதுங்கி தவமாய் ஓய்வெடுப்பது, திரும்பவும் வரி சுறாக்கள் வரும்போது மிக மிக சாதுர்யமான நகர்வுகளை செய்து தப்பிப்பது, ஒரு கால்பந்தைப் போல தன்னை மாற்றிக்கொண்டு சுறாவின் முதுகில் உட்கார்ந்துகொண்டு அதை கையறு நிலைக்கு தள்ளுவது என ஆழ் கடலுக்குள் இறங்கி ஒவ்வொன்றையும் பதிவு செய்து நம்மை ஆழ்கடலுக்குள் இருக்கும் அந்த உலகதிற்குள்ளேயே கூட்டிச் செல்கிறது படம்.

‘நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு’ என்ற பாடல் வரிகள் போல ஆக்டோபஸ் போன பின்னும் நினைவுகளை விட முடியாமல், ஆக்டோபஸ்ஸிடமிருந்து கற்றதை நினைவு கூர்ந்து கொண்டு வாழும் க்ரெய்க் ஃபோஸ்டரின் மகன் ஆழ்கடலுக்குள் நீந்தும்போது அவனது கைகளில் வந்து அமர்கிறது, முட்டையிலிருந்து வெளிவந்த இளம் ஆக்டோபஸ் குஞ்சு (குட்டி?)

காடுகளில் பல்லுயிர்கள் இருப்பது நமக்குத் தெரியும். கடலுக்குள்ளே ஒரு காடும், எண்ணற்ற கானுயிர்களும் உள்ளன என்பதை நம்மை கைபிடித்துக் கூட்டிப்போய் காட்டுகிறது படம்.

கடலின் அடியில் எங்கேயோ வாழ்ந்துவிட்டு சில ஆண்டுகளில் இறந்து போகும் ஓர் எண்காலியோடு ஒரு மனிதனுக்கு அன்பும் பிணைப்பும் சாத்தியமா? அவனை அது தெரிந்து கொள்ளுமா? நெடுகிலும் வியப்புகள் தரும் ஆகச் சிறந்த ஆவணப்படம். அதனால்தானே ஆஸ்கார் தந்திருக்கிறார்கள்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ – சிறந்த ஆவணப்படம். குழந்தைகளோடு பாருங்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் காட்டுங்கள். (நெட்ஃபிலிக்ஸ் தளத்தில்)

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

MyOctopusTeacher

Octopus

MyOctopusTeacherReview

ParamanReview

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *