அணில்

அந்நாளைய அயோத்தி இளவரசன் ராமாயண ராமர் கதையிலிருந்து,   இந்நாளைய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி (‘அணில்’ பாலாஜி) கதை வரையில் அணில்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.  தமிழ் வழிக் கல்வி பயின்ற பலருக்கு ஒன்றாம் வகுப்பில் ‘அணில், ஆடு, இலை, ஈ…’ என்ற முதல் பாடத்தில் தொடக்கமே அணில்தான்.

சமீபத்தில் வடிவேலுவை ஓவர்டேக் செய்து அதிகமாக மீம்ஸில் வந்ததும் அணில்தான்.

அணில் ஒரு ரௌடி. பழம், கொட்டை, நீங்கள் வைத்த காரக்குழம்பு கலந்த சோறு, உங்கள் வீட்டு ஏசியின் அவுட்டர் யூனிட் வயர் என எதையும் கடிக்கும், எதையும் கொறிக்கும். வலை வேயாமல் விட்டிருந்தால் உங்கள் வீட்டு ஏசியின் அவுட்டர் யூனிட் ஃபேனின் அருகில் கூடு கட்டி வசிக்கவே தொடங்கி விடும். வாடகையெல்லாம் கிடையாது. ஃபேனின் கதையை முடித்து விடும்.

உண்டது போக மீதி பழங்களை கொட்டைகளை ‘அப்புறம் கொறிப்போம்!’ என்று மறைத்து புதைத்து வைத்துவிட்டு பிற்பாடு மறந்து போகும் அணில்களின் இயல்புகளும் பெருங்காடுகள் உருவாவதில் பங்களிக்கின்றன என்கிறார்கள் கானுயிர் ஆராய்ச்சியாளர்கள்.  நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் இதை வைத்து ஒரு சித்திரக்கதையே வெளியிட்டிருக்கிறோம்.

அணில்களை ‘கொறியுண்ணி’ என்று வகைப் படுத்துகிறது அறிவியல். 2லிருந்து 4 ஆண்டுகள் வாழும் குட்டி அணில், அந்த குட்டி உடலுக்குள்ளிலிருந்து எப்படிதான் இத்தனை டெசிபல் சத்தம் வருகிறதோ! இயற்கை ஏற்படுத்தும் வியப்பு.  ஒடிசலான தேகத்தை வைத்துக் கொண்டு பெருங்குரல் எழுப்பும் ‘அணில்’ மனிதர்களும் உண்டே.

கத்தி கூப்பாடு போட்டு பலத்த சத்தம் ஏற்படுத்தி, எதிரிகள் ‘ஐய்ய்ய ச்சே தாங்கலப்பா!’ என்று ஓடும்படி கவனத்தை திருப்பி விட்டுவிடுமாம். அணில் சத்தமெழுப்பும் போது கவனித்திருக்கிறீர்களா? வாலை தூக்கி தூக்கி அதிரடிக்கும். மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வால் என்பது ‘லோடு பேலன்சர்’. அணிலுக்கு மட்டும் வால் என்பது கூடுதலாக ‘சவுண்ட் ப்ரட்யூசர் அண்ட் சவுண்ட் பேலன்சர்’ போல.

அடுத்த முறை அணில் கத்திக் கூப்பாடு போடும் போது கவனித்துப் பாருங்களேன்.

இன்று காலை என் பால்கனிக்கு அருகில் வந்த ஓர் அணில் இது.

– பரமன் பச்சைமுத்து
02.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *