கவனிக்க தக்கது

*Disclaimer:*

இது ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய அரசியல் பார்வை.  ‘நோ பாலிட்டிக்ஸ்’ ‘தனிப்பட்ட முறையில் தலைவர்களை தாக்கிப் பேச மாட்டேன்’ என்னும் தகைமை கொண்ட ‘நடுநிலை நியாயமார்கள்’ இந்தப் பதிவிற்கு கமெண்ட் கூட போட வேண்டாம், இது Politics பற்றியது, அரசு – பாலிசி – நிர்வாகம் பற்றியது இல்லை என்பதால்.

என்ன எழுதியிருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ளாமல், ‘பாஜக என்ற பெயரை மட்டும் பார்த்து பாஜகவைப் பத்தி எழுதிட்டியா?’ என்று பொங்குபவர்களும் இந்தப் பதிவை தவிர்க்கவும்.

நன்றி!
…….

இளம் தலைமுறையினர் அதிகம் பேர் இருக்கும் அமைச்சரவை, பிற்படுத்தப் பட்டவர்கள் 27 பேர், பட்டியலினத்தவர் 17 பேர், ஆதிவாசிகள் 8 பேர், பௌத்தர்கள் 2,  முஸ்லீம் – கிறிஸ்தவர் – சீக்கியர் என தலா 1,  இப்போது இருக்கும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்களில் ஒரே ஒருவர் மட்டுமே பிராமணர்…  என அரசியலாளர்கள் சொல்லும் புள்ளி விவரங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

வேறொரு சங்கதியைப் பார்க்கிறேன். 12 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.

தமிழிசை, எல் முருகன், வானதி சீனிவாசன், அண்ணாமலை… ஒரு தலைவரின் வாரிசாக இல்லாத சாமானிய தொண்டர், கட்சியில் உழைத்தே ஆளுநராக, கட்சியின் மாநிலத்தலைவராக, மத்திய இணையமைச்சராக, தேசிய மகளிரணித்தலைவராக உயர முடியும் என்பது பாஜகவில் சாத்தியம் தொடர்ந்து நிகழ்கிறது.

பேரறிஞர் அண்ணா முன் மொழிந்த சுழற்சி முறையில் தலைமைப் பதவி என்பது உண்மையில் பாஜகவில் இயல்பான நடவடிக்கையில் இருக்கிறது. (இதை செய்ய ஆசைப்படுவதாக முன்பு ராமதாஸ் அவர்கள் சொல்லியதுண்டு)

‘இவர்தான் கட்சியின் தலைவர். இவர் செத்தால் இவருக்குப் பிறகு அவர் பிள்ளை, பொண்ணு..’ என்ற முறைகளே இல்லை.

அடல் பிகாரி வாஜ்பாயி,
எல் கே அத்வானி,
முரளி மனோகர் ஜோஷி,
பங்காரு லட்சுமன்,
ஜனா கிருஷ்ண மூர்த்தி,
வெங்கைய்யா நாயுடு,
எல் கே அத்வானி,
ராஜ்நாத் சிங்,
நித்தின் கட்காரி,
ராஜ்நாத் சிங்,
அமித் ஷா,
ஜே பி நாட்டா

இது என் நினைவிலிருந்து நான் சொல்லும் அடுத்தடுத்து கட்சியின் தலைமை ஏற்று நடத்திய தலைவர்களின் பட்டியல்.

ஒரு தலைவர் இவ்வளவு நாள்தான் பொறுப்பில் இருக்க முடியும், அதிகபட்சம் இரண்டு சுற்றுகள் என ஒரு முறைமையில் இயங்குகிறது இவர்களின் விதி.  பெரிதும் எதிர்க்கப்படும் சிலாகிப்படும் என இரண்டும் கலந்த மோடியின் பதவிக்காலம் கூட அதிக பட்சம் இன்னும் ஒரு சுற்றாக இருக்கலாம். உயிருள்ளவரை மம்தா, இருக்கும் வரை ஸ்டாலின், இருந்த வரை ஜெயலலிதா என்ற முறைமை மோடிக்கு தரப்படாது. அடுத்த நிலையில் இருப்பவருக்கு வாய்ப்புத் தரப்படும்.

அன்பில் பொய்யாமொழி மறைவினால் அவரது மகன் மகேஷ், பிடிஆர் பழனிவேல் ராஜன் மறைவிற்குப் பிறகு அவரது மகன் தியாகராஜன், உயர் பொறுப்பில் இருப்பதால் ஓபிஎஸ் மகனுக்கு எம்பி சீட், வசந்த் இறந்ததால் விஜய் வசந்துக்கு சீட் என்ற அரசியல் பாஜகவில் இல்லை.

பங்காரு லட்சுமண், எடியூரப்பா போன்ற தவறான எச்சரிக்கை உதாரணங்களும் உண்டு என்றாலும், சாமானிய தொண்டன் உழைத்தால் உயர் பதவிக்கு வர முடியும் என்பது பெருவாரியான உண்மை.

பழைய ஆட்களுக்கு வாய்ப்பு இல்லை, புதியவர்களுக்கே அமைச்சரவையில் வாய்ப்பு என்ற புரட்சிகரமான முன்னுதாரனத்தை கேரள முதல்வர் சமீபத்தில் நிகழ்த்தினார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நிறைய சங்கதிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக இதை நான் எண்ணுகிறேன். ‘எவ்ளோ நாளு ஒழைச்சாலும், கட்சிக்காக உசுரையே வுட்டாலும், சீனியர் நிலையிலுள்ளவங்களோட புள்ளைங்க குடும்பம்தான் மேலிடப் பதவிக்கு வரும். நாம தொண்டனாகவேதான் இருப்போம். ஒண்ணு ரெண்டு பேரு மட்டும்தான் அடியிலேருந்து மேல வர முடியும்!’ என்ற ஓர் எண்ணம் தொண்டனுக்கு வந்தால் அது நல்லதல்ல.

கட்சிப்பணியாற்றிய லியோனி போன்றவர்களை கவனித்து பதவி தந்து அரவணைக்கும் ஸ்டாலின் அவர்கள் இதை கவனிப்பது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது. திமுக அதிமுக பலமாகவே இருப்பது தமிழகத்திற்கு நல்லது.

– மணக்குடி மண்டு
09.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *