‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1627152148127.jpg

8000 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணித்து, விலங்குகளை வேட்டையாடி அப்படியே கடித்து பச்சை மாமிசத்தை உண்ட குகை மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, கிபி 1942ல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ஃபாஸிஸ்ட் போர் விமானங்களை குறி வைக்கும் பாட்னாவின் மனிதன் ஒருவனின் காலம் வரையிலான நிகழ்வுகளை 20 புனைவுக் கதைகளின் வழியே விவரித்துப் போகிறது இந்நூல்.

‘இது உண்மையல்ல’ என்று கூறுவோறும், ‘இதெல்லாம் உண்மைதான், ஆராய்ச்சி பண்ணிருக்காரு!’ என்று பதில் கூறி அதை மறுப்போரும் என இரு பக்க விமர்சனங்களையும் காலகாலமாகக் கொண்டிருக்கிறது இந்நூல்.

‘நானே எழுதியுள்ள ஒவ்வொரு கதையின் பின்னணியிலும் அதற்குரிய காலத்துடன் தொடர்புடைய நிறைய ஆதாரங்கள் உள்ளன. உலகின் பல மொழிகளில், மொழியியல் ஒப்பீட்டு ஆய்வில், களிமண் – பாறை – தாமிரம் – பித்தளை – இரும்புப் பொருட்களின் மீது சங்கேதமாகக் குறிப்பிட்ட அல்லது வரி வடிவத்தில் எழுதப்பட்ட விவரங்களில், நாட்டுப் பாடல்கள், கதைகள், பழக்க வழக்கங்கள் மந்திர தந்திரச் சடங்குகளில் காணக் கிடைக்கின்றன. சான்றுகளையெல்லாம் பட்டியலிட்டு பின்னிணைப்பாகச் சேர்க்க விரும்பியதுண்டு. ஆனால் அதுவே ஒரு வேலையாகப் போய்விடும், அதுவே பெரிய நூலாக ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்’ என்று நூலின் ஆசிரியரே 1943ஆம் ஆண்டு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதையும்,
‘நான் இந்தோ ஐரோப்பிய சமூகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டேன். எகிப்திய, மெஸபடோமியா அல்லது சிந்து சமவெளி இனங்கள், இந்தோ ஐரோப்பிய இனங்களை விட வெகுகாலம் முன்பே வளர்ச்சி அடைந்திருந்தன’ என்ற நாலாசிரியரின் குறிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வால்கா நதிக்கரை, சௌவீரபுரம்(கராச்சி), காந்தாரம்(ஆப்கான்), குரு பாஞ்சாலம், மத்ரபுரி, வசிஸ்டர், விஸ்வாமித்ரர், ரிக் வேதம், உபநிடதம், பிரம்மஞானம். கோசலம், சிராவஸ்தி, ஜம்புகத்தீவு, தட்சசீலம், நாகதத்தன், விஷ்ணுகுப்தன்(சாணக்கியன்), அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில், பாஹியான், உஜ்ஜயினி, சந்திரகுப்தன், சமுத்திரகுப்தன், ஹூணர்கள், ஹர்ஷர், கன்னோஜ், ராஜா சேத்சிங், கிழக்கிந்திய கம்பெனி, வாரன் ஹேஸ்டிங் பிரபு, ஹிட்லர், கிலாபத் இயக்கம், காந்தி, சுயராஜ்ஜியம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், உலகப் போர், ஜப்பான்… என பல நூற்றாண்டுகளின் நிகழ்வுகளை பக்கங்களின் வழியே கடத்திப் போகிறது இந் நூல். அசுரத்தனமான பெரும் உழைப்பு!

ஆதியில் நெருப்பை வணங்கிய பிராமணர்கள் குதிரைக் கன்று, பசுவின் இளங்கன்று இறைச்சியையே உண்டனர் என்று கதையின் ஊடே, சமஸ்கிருத சுலோகங்களை மேற்கோள் காட்டி சொல்லுவது, ஆரியர்களே சத்திரியர்களாகவும் புரோகிதர்களாகவும் பிரிந்தனர், பிழைப்புக்காகவே கர்மா, மறுபிறவி் நம்பிக்கைகள் உருவாக்கினர், காந்தி முதலாளித்துவத்தைதான் உருவாக்கினார், பொதுவுடைமையே சிறந்தது, சோவியத் ரஷியாவின் விதிகளே மக்களுக்கானவை என இடது சாரிகள் கொண்டாடும் நிரம்பிக் கிடக்கும் சங்கதிகளைத் தாண்டி புனைவுகளின் வழியே நமக்கு கிடைப்பது ஒரு வரலாற்றுப் பயணம்.

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புனைவுகளின் வழியே காலப் பயணம். வியப்பு, வித்தியாச அனுபவம்.

நூல்: ‘வால்காவிலிருந்து கங்கை வரை’
மூல ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
பதிப்பகம்: புலம்

– நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#ParamanBookReview
#VolgavilirundhuGangaiVarai
#VolgaGanges
#VolgaGangai
#RahulaSankrityayan
#Pulam
#ValarchiTamilMonthly

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *