கண்ணப்பர் நிகழ்வு நடந்த ஊர்

சென்னைக்கு வந்திருந்த அந்நாட்களில் ஞாயிறு அல்லது தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை வந்தால் செந்தில் பாபு போன்ற நண்பர்களோடு சேர்ந்து மேக்ஸ் 100 ஆர் பைக்கில் நெடும்பயணம் செய்யக் கிளம்பிடுவது உண்டு.

ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி அந்நாளைய அடிக்கடி தேர்வுகளில் ஒன்று.  நெடும் பயணத்திற்கு தோதான தூரத்தில் ஓர் இலக்கு வேண்டும், குறைந்த செலவில் வெளிமாநிலத்திற்கு போய் பார்த்து அனுபவித்த உணர்வு தரும் என்பதோடு  சிறு வயதிலேயே கேட்ட வாசித்த பெரிய புராணத்தின் கண்ணப்ப நாயனாரின் கதை நடந்த இடம் காளகஸ்தி என்பதால் எழுந்த இயல்பான ஈர்ப்பும் முக்கிய காரணம்.  இந்தக் கோவிலின் கோபுரம் 11 ஆம் நூற்றாண்டில் தலைவன் ராஜேந்திர சோழன் எழுப்பினான் என்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்கான காரணம்.  (பயணம், ஆந்திர டீக்கடை, பரோட்டா சால்னா அனுபவங்கள் கூடுதல் இத்யாதிகள்)

பஞ்ச பூத தலங்களில் ஒன்று, ராகு கேது என பல இருந்தாலும், கோவிலுக்கு அருகில் குன்றின் மேலே பெரிதாய் யாரும் வராத கண்ணப்ப நாயனார் நிகழ்வு நடந்த இடத்தைப் பார்ப்பதற்கே வந்தவனைப் போல ஓடி நிற்பேன். ‘திண்ணப்பன்’ ‘இதான் அவன் சொன்ன குடுமித் தேவர்’ ‘இங்குதான் வில்வம் போட்டு பூசனைகள் புரியும் அந்த அந்தணர் நின்றிருக்க வேண்டும்’ ‘இங்கே நின்றுதான் வேடர் குல மகனின் கண்கள் தோண்டப்பட்டிருக்க வேண்டும்!’ என்று அங்கும் இங்கும் ஓடி உணர்வை அனுபவித்ததுண்டு. ( ‘நில்லு கண்ணப்ப’ என்று இறைவன் சொன்னதாக நாம் படித்த கதையை கழுத்தில் துண்டு போட்ட உள்ளூர் கைடு ‘@#&#@ கண்ணப்பா!’ என்று தெலுங்கில் வெளியூர் கும்பலுக்கு சொல்வது செம ரகளையாக இருக்கும்). அதன் பிறகே கீழே வந்து சிவலிங்க தரிசனம்.

உடனுறை தேவியின்(பார்வதி) பெயர் மட்டும் வித்தியாசமாக தென்பட்டு நிற்கும், இரண்டு மூன்று முறை படிக்கத் தோன்றும், வித்தியாசமாக இருப்பதாலேயே என்றும் மறக்காது அந்தப் பெயர் – ‘ஞானபிரசூனாம்பிகை’.

அருகிலோடும் ஸ்வர்ணமுகி நதியை ‘பொன்முகலி’ ஆறு என்று குறிப்பிட்ட வாரியார் அவர்களின் பெயர் நினைவுக்கு வர பைக்கை எடுத்துக் கொண்டு காப்பி குடிக்க நகர்வோம்.

பல ஆண்டுகளுக்கு பின்பு ‘தமிழ்மணி’யில் இன்று காலை இலங்கை ஜெயராஜ் அவர்களின் திருவிளையாடற்புராண கட்டுரையை படிக்க நேர்கையில், சிலீர் என்று ஒரு வியப்புணர்வு உடலில் பரவியது.

மதுரை பாண்டிய அவையில்  தருமியின் பாடலை நக்கீரர் குறை சொல்ல, அவைக்கு இறையனார் வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்பதை எதிர்கொள்ளும் காட்சியை தமிழால் விளக்கும் கட்டுரை அது.

‘தருமி பாடலை சொன்ன போது ஒன்றும் சொல்லாமல், பொற்கிழி தரும் நேரத்தில் தடுத்தது ஏன்? முன்பே சொல்ல வேண்டியதுதானே!’ ‘நக்கீரன் ஆணவத்தில் இருந்தார்!’ என பல மாற்று சிந்தனைகளை வைத்த கட்டுரையாசிரியர், திருவிளையாடற்புராணத்தின் வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.

‘தேவலோகப் பெண்களுக்கு?’ / ‘ஏன் நான் வணங்கும் உமையவளுக்குக் கூட கூந்தலில் இயற்கையான மணம் இருக்க முடியாது!’  என்று
திருவிளையாடல் படத்தில் காட்டப்படும் நிகழ்வின் அசல் திருவிளையாடற்புராண மூல வரிகளை விளக்கையில் ‘ ‘நீ வணங்கும் காளத்திநாதனின் தேவிக்குமா?’ என்று கேட்டு தேவி பெயரைக் குறிப்பிடுகிறாராம் இறையனார்.

‘ஞானபிரசூனாம்பிகை!’ என்று மனதில் பெயர் வரப் படிக்கிறேன். அதிர்கிறேன். நல்ல தமிழ்ப்பெயர்! அதுவும் ‘கூந்தல் மணம்’ என்ற இந்த சர்ச்சையில் ஏன் அந்த தேவியை மேற்கோள் காட்டினார் என்று புரிந்தது.

காளத்தியப்பனின் உடனுறை தேவியின் உண்மை பெயர், திஉவிளையாடற்புராணம் சொல்லும் பெயர்….

‘ஞான பூங்கோதை!’

– பரமன் பச்சைமுத்து
01.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *