தாமிர பரணி தந்த அனுபவம்

wp-16294351639235545552684397536543.jpg

‘சார் மொறப்ப நாட்டுக்கா? இவ்ளோ இருட்டிட்டு. ஒண்ணும் தெரியாது சார் பாத்துக்கோங்க!’

‘தாமிரபரணியில எறங்கனுமே! ராத்திரின்னாலும் பரவாயில்லை. இருட்டாருந்தாலும் பரவாயில்ல. செல்ஃபோன்ல லைட் போட்டுக்கலாம்! கூட்டிட்டுப் போங்க!’

‘அதில்லை சார், இருட்டுல வழியில பாம்பு பல்லி பூச்சி பொட்டு இருக்கும்’

‘அதெல்லாம் நண்பர்கள் நமக்கு, அக்ரிமெண்ட் உண்டு கிட்டயே வராதுங்க. போங்க!’

‘மொறப்பநாடு தூரம் சார். தூத்துக்குடி போற வழியில ஏரல்ல நிறுத்தி எறங்கிடலாமா?’

‘மொறப்ப நாடு இல்லையா!? சரி, போங்க!’

ஏரலுக்கு அருகில் மங்களகுறிச்சியில் வண்டியை நிறுத்தி விட்டு, சாலையை விட்டு பெரும் சரிவில் இறங்கி சில நிமிடங்கள் நடந்தால், தாமிரபரணியில் தடுப்பணை கட்டப்பட்டு தூரத்தில் நீர் மேகம் மறைக்கும் மங்கிய நிலவொளியில் தெரிகிறது. ‘இங்கேருந்துல்லாம் பாக்க முடியாது. அங்க போகனும்!’

சில நிமிடங்கள் நடந்தால் தடுப்பணையின் கீழ்ப்பக்கம் நாம் நிற்கிறோம் என்பதும், தாமிரபரணி நிரம்பி சில இடங்களில் வழிந்து ஒரு சிற்றருவி போல விழுவதும் மங்கிய ஒளியில் தெரிகிறது. போகும் வழியில் கிடந்த நீத்தார் கடன் கருமாதி காரியங்களில் வைக்கப்பட்ட மண்கலசங்களை கடந்து, மயான அமைதியில் கூடவே ஒலிக்கும் தவளைகளின் ‘ச்சான்டிங்’ இரவுப் பூச்சிகளின் ரீங்காரத்தோடு மங்கிய ஒளியில், உடன் வந்த நண்பரின் கையைப் பிடித்து பாதுகாப்பாக வழிநடத்தி் நீர் வழியும் இடத்திற்குப் போனோம்.

சிற்றருவியாய் வழியும் தாமிர பரணியில் நின்றதும் எல்லாம் மறந்தது. மேலே நிலவு, சிதறிய நட்சத்திரங்கள், காலை அடித்து பாய்ந்தோடும் பரணி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவருமில்லாத் தனிமை… ஆகா! நிறைய வானம், நிறைய தாமிரபரணி!

அடங்க மறுக்கும் நம்மால் அதோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பாய்ந்து எக்கி மேலேறி தடுப்பனையின் விளிம்பில் ஏறி் நின்றோம். அணையின் விளிம்பில் நான், முன்புறம் ஆழம் அதிகம் கொண்ட நிறை நீர், பின்னே வழிந்து ஓடும் கணுக்காளவு நீர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தாமிரபரணி. வீராணத்தைப் பார்க்கும் போது வந்தியத்தேவனுக்கு எழுந்த உணர்வை கல்கி குறிப்பிடுவாரே அதே உணர்வு. காலின் வழியே தாமிரபரணி

‘பரணி பரணி பாடி வரும் தாமிர பரணி…’ இளையராஜா மண்டைக்குள்.

அரை மணி நேரத்திற்கும் மேல் அதே இடத்தில் நீரில் நின்றதால், மீன்கள் வந்து விட்டன, காலை கொத்தி ‘சுருக்’கென கொஞ்சம் காட்டமாகவே வருட. தலைக்கு மேலே வானிலும், காலுக்கு கீழே நீரிலும் மீன்கள். நடுவிலே நான்.

‘அந்தப் பக்கம் விழுந்தால் ஆழம், இருட்டு!’ என்ற எண்ணத்தோடு வியந்த கீழே நிற்கும் நண்பர் மேலே டைக்டானிக் ஜாக் போல கைகளை விரித்து நிற்கும், நீரை அள்ளி முகத்திலடித்துக் குடிக்கும் என்னைப் பார்த்து, ‘உங்களுக்கு பயமே இல்லை சார்!’

‘அதைப் பத்தி யோசிக்கவே நேரம் இல்லை சார்!’ எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன்.

‘இப்படி ஒரு ராத்திரியில மேல நிலவு நட்சத்திரம், இப்படி ஒரு ஆத்துல கால்ல அருவி மாதிரி தண்ணில இவ்ளோ நேரம்… இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல சார் எனக்கு. இதெல்லாமே நெனைச்சே பாக்காத அனுபவம் பரமன் சார்!’

நகரிலேயே பிறந்து வளர்ந்த (‘நகரத்தார்!’) சென்னையின் பிரபல மருத்துவருக்கு ஒரு பேரணுபவம் என்பது நமக்கும் நிறைவு.

யாருமில்லா நிலவொளியில் நட்சத்திரங்கள் சிதறிய வானோடு தாமிரபரணியை கண்களால் விழுங்கிய தருணங்களை தவமென உணர்ந்தேன்.

ஒரு சங்கதி மறுபடியும் வலியுறுத்தப்பட்டது எனக்கு. ‘மொறப்ப நாடுதான் வேண்டும்!’ என்று முன்முடிவு வைத்துக் கொண்டு இயங்கியிருந்தால், மங்களகுறிச்சியின் இந்த பொருநையில் கரைந்த அனுபவம் தவற விடப்பட்டிருக்கும். எல்லா நேரங்களிலும் இதுதான் வேண்டும் என்று பயணிக்கும் போது, வாழ்க்கை தர இருந்த உயர் நல்லனுபவங்கள் தவறவிடப்படலாம். வாழ்வின் போக்கில் விட்டு அது கொடுப்பதை ஏற்று இயைந்து போகும் போது இன்னும் சிறந்தது கிடைக்கிறது.

நீரிலிருந்து மேலேறி சாலையை நோக்கி நடக்கிறோம். நிலவு இப்போது இன்னும் வெளிச்சமாய்.

இப்போது அனிருத், ரஜினி பாடல் வருகிறது

‘எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேல! நீ மனசு வச்சுப்புட்டா ரசிக்க முடியும் உன்னால!’

  • பரமன் பச்சைமுத்து
    தூத்துக்குடி
    19.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *