போலிப் பத்திரவுக்கு புதுச் சட்டம்: நன்று!

நம் நண்பரின் வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவர் நகரில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். மனை வெகுநாட்களாக சும்மாவே இருப்பதை கவனித்து, மெதுவாகத் திட்டமிட்டமிட்ட சில மோசடியாளர்கள், திடீரென்று ஒரு நாள் அதில் கொட்டகை போட்டதோடு நிலம் தோண்டி கடைக்கால் போடும் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டனர்.

நிலவரம் தெரிந்த நம் நண்பர் தமது உறவினரின் நிலத்தில் ஆக்ரமிப்பு செய்திள்ளது கண்டு பதறி ஓடினார். நேரடி பேச்சு, காவல்நிலையம் என எல்லா இடங்களுக்கும் ஓடினார். அதே நிலத்தை அவர்களுக்கு கிரயம் செய்துள்ளது போல ஒரு பத்திரத்தை அவர்கள் வைத்துள்ளனர் என்ற செய்தி கண்டு ஆடிப் போனார்.

‘இங்க பாருங்க! இதான் அசல் பத்திரம், மூல பத்திரம், அது போலி பத்திரம்!’ என காவல் நிலையம், துறை அதிகாரிகள் என சில ஆண்டுகளாக ஏறி ஏறி இறங்குகிறார். அந்த நிலத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு வம்பு செய்கிறார்கள் பணபலமும், தொடர்புகள் பலமும் கொண்ட ஆக்ரமிப்பாளர்கள்.

சில ஆண்டுகளாக இதில் சிக்கி நிலத்தை மீட்டெடுக்கப் போராடும் நண்பரின் தவிப்பை துயரை நேரடியாக நான் அறிவேன்.

ஓரளவு சில மனிதர்களைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பருக்கே இந்த நிலைமை என்றால், அதிகம் பேரைத் தெரியாத சிலரின் நிலம் இப்படி ஆக்கிரமிக்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்!

இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டம் ஒரு முக்கிய முன்னேற்றமாக மாறலாம் என எண்ணுகிறேன்.

எந்த சட்டம் வந்தாலும் அதில் ஓர் ஓட்டையைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆட்கள் உண்டுதான் என்றால், இந்த சட்டம் சரியாக அமல்படுத்தப்பட்டால் துயரங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்படலாம் என்று எண்ணுகிறேன்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப் பதிவாளருக்கு உண்டு, முறைகேடாகப் பதிவு செய்தால் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற இந்த சட்டம் நடைமுறைக்கு வரட்டும்.  ஆமாம், பல அரசியல்வாதிகளுக்கே எதிராக இந்த சட்டம் திரும்பலாம்.
செய்வதறியாது தவிக்கும் பலருக்கு இது உதவலாம்.

நல்லது நடக்கட்டுமே!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
03.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *