மொத்த மீடியாவும் காத்திருக்க…

நம் பத்திரிக்கையின் அஞ்சல் பதிவிற்கு விண்ணப்பித்து நீதிபதி முன் ஆஜராகியே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசு விதிப்படி இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழைகிறேன்.

இயல்புக்கு மாறாக ஏக கூட்டம்! மதிற்சுவருக்கே வெளியிலிருந்து உள்ளே குறிபார்த்து வரிசையாக தயாராக நிற்கும் ஆளுயர வீடியோ கேமராக்கள், ஊடகவியலாளர்கள் என பெருங்கூட்டம். இயல்புக்கு மாறாக விறைப்பாய் நிறைய  சீருடை காவலர்கள் வேறு வரிசையாய்.

‘நாம கோர்ட்டுக்கு நல்ல மேட்டருக்காகத்தானே, பத்திரிகை லைசன்ஸ் மேட்டராதானே போறோம்! நாம வர்றது அவ்ளோ பெரிய மேட்டரா? நியூஸாயிடுச்சோ!
இவ்வளவு ப்ரஸ், மீடியா வந்துருக்காங்களே!’

‘சார், வாங்க சார்!’

சீருடை, தொப்பியணிந்த பெண் காவலர் அழைக்கிறார் பணிவாக.

‘இவங்களுக்கும் நம்மள தெரியும் போல இருக்கே! அடாடாடா… நான் என்ன பண்ணுவேன், ஐயோ! முடியலைடா சாமீ!’

‘கைய காட்டுங்க சானிடைசர் அடிக்கனும்!’

(‘ஆ… இங்க பூசுங்க! ஆ…இங்க பூசுங்க!’ மோடில் கையை காட்டுகிறேன்)

தொடர்ந்து நீதி மன்ற கட்டிடத்தை நோக்கி நடந்த படியே திரும்பிப் பார்க்கிறேன். வெளியிலிருந்து வரிசையாக வீடியோ கேமராக்கள் நம் பக்கத்தை நோக்கியே நிற்கின்றன.  விழுங்கி விடுவார்கள் போல.

‘வெளிய வரும் போது, இண்டர்வ்யூ எடுப்பாங்க போல…’

‘என் இனிய தமிழ்மக்களே… பாரதிராஜா மாதிரி பேசிடலாமா? ‘பாசத்துக்குரிய பத்திரிக்கைக்காரர்களே! – வைரமுத்து மாதிரி பேசிடலாமா? வேண்டாம்… ‘மலர்ச்சி வணக்கம்!’ ன்னு தொடங்கிடுவோம்!’

நடக்கிறேன். திரும்பிப் பார்க்கிறேன். ரிப்போர்டர்ஸ் தயாராக நிற்கிறார்கள்.

‘ஒளிப்பதிவாளர் சத்யனுடன் வேல்ராஜ்!’ என்று அவர்கள் நியூஸ் கவர் செய்து பேசுவது போல தோன்றுகிறது.

‘ஐயோ… இவ்ளோ மீடியா கேமராக்கள், ப்ரஸ் ரிப்போர்டர்ஸ் வெளிய நிக்கறாங்களே, நம்ம பக்கம் பாத்து குவிஞ்சிருக்காங்களே! இதை யாருக்காவது சொல்லலாம்னா,  கோர்ட்டுக்குள்ளேருந்து படமெடுக்க கூடாதே! ஐயோ! முடியலியே! ச்சே! ஒரே குஷ்டமப்பா!! ஆ… !’

தொடர்ந்து நடக்கிறேன்.

‘பரமன் சார் வாங்க, உங்களுக்குதான் வெயிட்டிங். சார், ஃபுல் மீடியாவும் இன்னைக்கு இங்கதான்! நடிகை மீரா மிதுன் வர்றாங்களே! இன்னைக்கு அவங்கள ஆஜர் படுத்தறாங்க மாஜிஸ்ட்ரேட் முன்னால. அதான் இவ்வளோ மீடியா இங்க!’

‘ப்ரஸ் செக்‌ஷன்’ ஆஃபீஸரை நோக்கி நண்பரோடு நடக்கிறேன்.

‘ஙே ஙே ஙே!’

– பரமன் பச்சைமுத்து
03.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *