துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

துளசி இலையை வாயிலிட்டால் என்ன சுவை வரும் உங்களுக்கு?

‘யோவ்! நான் இல்ல, யாரு துளசிய வாயில போட்டாலும் ஒரே சுவைதான், சுருக்கென்று வரும் கார்ப்புதான்! போவியா!’ என்கிறீர்களா?

(ஜப்பானில் வேலை பார்த்த காலத்தில் டோக்கியோவின் உணவகம் ஒன்றில் காரமான பீட்ஸா வேண்டுமென நான் ஆர்டர் செய்திருந்த போது, அதில் துளசியை தூவித் தந்தார்கள். அவர்களுக்கு அதுவே காரம் போலும்.)

துளசியில் எதிரே பார்க்காத வேறு ஒரு சுவை வந்தது, குடியாத்தத்தில் இன்று எனக்கு.

சைவத்தில் வில்வம் போல, வைணவத்தில் துளசி சிறப்பு இடம் கொண்டது.
‘திருத்துலாய்’ என்று வைணவம் அழைக்கும் துளசி சமய நெறிகளைக் கடந்து வில்வத்தைப் போலவே மருத்துவ குணமும் கொண்டது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா, என்ன?

அதிமுகவின் நகர கழக செயலாளர் நம் மாணவர் ஜே கே என் பழனியின் மகள் திருமணத்தில் வியப்புகளோடு கூடிய பல நல் அனுபவங்கள் பெற்றேன். அதிலொன்றே துளசி அனுபவம்.

குடியாத்தத்தில் நடந்த திருமண நிகழ்வில்,
11 ஆண்டுகள் கழித்து நம் மாணவர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பைத் தந்தது வாழ்க்கை.

எத்தனையாண்டுகள் ஆனாலும் மாணவர்களை ஆசிரியரும் ஆசியரை மாணவர்களும் நினைத்துக் கொண்டேதான் இருக்கிறோம் என்பதால் இடையில் 11 ஆண்டுகள் ஓடிப் போன போதும் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல உரையாட முடிகிறது.

பெருங்கூட்டத்தில் புகுந்து ஏறி மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்து, உணவு உண்டு் வெளியேறும் போது நம்மை அடையாளங்கண்டு சிறப்பு செடி என்று ஒன்றை நம் கையில் தந்தார்கள். ‘துளசியா எனக்கு?’ என்றெண்ணிய படியே வாங்குகிறேன்.  ஒரு இலையைக் கிள்ளி வாயிலிட்டுக் கொள்ள  சொன்னார் செடி கொடுத்த அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவர்.

‘ஐ! இதென்ன இனிக்குது! ஆனால் துளசி மாதிரி இருக்கே?’

‘சார், இது ஸ்பெஷல் செடி, உங்களுக்கான ஸ்பெஷல்!  எளிதில் கிடைக்காது, இது இனிப்பு துளசி!’

‘அட..!’

சரளா, ஆனந்த், அன்பு, அண்ணாமலை, குணசேகர் என மாணவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு,
இனிப்பு துளசியோடும், மாணவர்களோடு களித்த இனிப்பான அனுபவங்களோடும் சென்னையை நோக்கிப் பயணிக்கிறேன்.

துளசி இனிக்கவும் செய்யும்!

– பரமன் பச்சைமுத்து
வேலூர்
15.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *