செம்மை சீர் ஆசிரியர் விருது – எதற்காம்? என்ன செய்து விட்டார்கள் அவர்கள்?

ஆசிரியர்களுக்கு ஏன் இந்த விருது? என்ன செய்து விட்டார்களாம் அவர்கள்?

….

கேள்வி: பரமன், ஆசிரியர் தினமன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 50 பேருக்கு ‘செம்மை சீர் ஆசிரியர்’ பதக்கங்கள் வழங்கி மலர்ச்சி உரை ஆற்றியுள்ளீர்கள் என்பதை செய்தித்தாள்களில் பார்த்தேன். என்ன செய்தார்கள் இந்த ஆசிரியர்கள்? கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொண்டார்களா? இல்லை ஏதும் வேலை பார்த்தார்களா? வீட்டிலேயே இருந்தார்கள். அல்லது முதலமைச்சர் கொரோனா நிதிக்கு ஏதும் பணம் கொடுத்தார்களா? எதற்கு அவர்களுக்கு விருது? அல்லது இவர்கள் சிறந்த மனிதர்களா?

பரமன்: உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பு பின்னணியைச் சொல்லி விடுகிறேன்.
…..
‘அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம்’ என்னும் இயக்கம் கடலூர் கல்வி மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களை விண்ணப்பிக்கச் செய்து, ஓர் உயர்மட்டக் குழுவை அமர்த்தி ஆராய்ந்து, தரம் – வளர்ச்சி – மாணவர் சேர்க்கை – பள்ளியின் வசதிகள் என பல காரணிகளின் அடிப்படையில் 50 ஆசிரியர்களை விருதிற்கு தேர்வு செய்தனர். விருதினை செய்து தரும் பொறுப்பை ‘மு பச்சைமுத்து அறக்கட்டளை’ சார்பாக நாம் ஏற்றுக் கொண்டோம். மலர்ச்சியின் நிறுவனர் வாழ்வியல் பயிற்சியாளர் என்ற முறையில் ஆசிரியர்களுக்கு உத்வேகம் தர நாம் பேசவும் அழைக்கப்பட்டோம். இதுவே பின்னணி.
….
நீங்கள் ஓர் ஆசிரியரால்தான் உருவாக்கப்பட்டீர்கள், ஆசிரியர்கள் யார், ஒரு சமுதாயத்தை எப்படி உருவாக்குகிறார்கள், ஏன் அவர்கள் போற்றப்பட வேண்டும் என்பதையெல்லாம் விளக்காமல் ஒரு பக்கம் வைத்து விட்டு, நீங்கள் கேட்டதற்கு நேரடியாக வருகிறேன்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதுக்கு அவரைத் தேர்வு செய்கிறார்கள். ‘அவர் மனைவியோடு வாழவில்லை, அதனால் சிறந்த நடிகர் விருது வாங்க தகுதியில்லை’ என்று சொல்லி நிராகரிப்பார்களா?

இவ்வாண்டின் சிறந்த பாடகர் என்று எஸ்பிபாலசுப்ரமணியத்தை தேர்வு செய்கிறார்கள். ‘அவர் முதல்வர் கொரோனா நிதிக்கு நன்கொடை தரவில்லை. அதனால் விருதுக்கு தகுதியில்லை!’ என்று நிராகரிப்பார்களா?

நடிகருக்கு விருது! பாடகருக்கு விருது? அது எதன் அடிப்படையில் பார்க்கப்படுகிறது? அவர்களுடைய துறையில் அவர்கள் ஆற்றிய பங்கைப் அடிப்படையாக கொண்டு!

ஒன்று : அரசுப் பள்ளியாசிரியர்களை பட்டியலிட்டு சில தகுதிகளை வைத்து அதனடிப்படையில் 50 பேரை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆசிரியப்பணி – எப்படி பணி செய்தார்கள் – எப்படி நிர்வகித்தார்கள் – என்ன பங்காற்றினார்கள் என்பவற்றின் அடிப்படையில் தேர்வு. இதில் எதற்கு ‘அவங்க ஒரு ரூபாயாவது கொரோனா நிதி கொடுத்தாங்களா?’ வருகிறது? ஆசிரியர் தினம் அன்று நாம் தந்தது ‘செம்மை சீர் ஆசிரியர்கள் விருது’, ‘மிகச் சிறந்த மனிதன்’ என்ற விருது அல்ல, ‘உலகின் சிறந்த மனிதர்கள்’ என்ற விருது அல்ல, நல்ல ‘கொடையாளர்கள் விருது’ அல்ல. கொடுக்கப் பட்டது ஆசிரியர் விருது!

இரண்டு: கொரோனா போன்ற பேரிடர் வரும்போது கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம், அவரவர் நிலை. அதை எப்படி நீங்கள் கேள்வி கேட்கக் கூடும்? அவர்கள் தரலாம், தராமல் போகலாம். அடிப்படையே தவறான இந்தக் கருத்தை எப்படி அடிப்படையாகக் கொண்டு அவர்களின் பணியை தீர்மானிக்கச் சொல்கிறீர்கள்?

மூன்று: கொரோனா காலத்தில் அவர்கள் பொதுப்பணி ஆற்றவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? கொரோனா பொதுமுடக்கத்தின் போது பள்ளிக்க்கு வர முடியா மாணவர்களுக்காக ‘கல்வி தொலைக்காட்சி’யில் வகுப்பெடுத்தது யார்? சொந்தமாக ஒரு வானொலியை நிறுவி ‘கல்வி ரேடியோ’ என்ற பெயரில் பல பள்ளிகளின் ஆசிரியர்களை வகுப்பெடுக்க வைத்து பல மாணவர்கள் பயன்பெற செய்தது யார்? ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயன்பெற தனது சொந்த செலவில் செல்லிடப்பேசிகளை வாங்கி தந்து உதவியவர்கள் ஆசிரியர்கள் என செய்திகளை படிக்கிறோமே. வீட்டுக்கே சென்று பாடங்களை நடத்தினார்கள் ஆசிரியர்கள் என்று படிக்கிறோமே!

முதல்வர் நிவாரண நிதி கொடுத்தால் மட்டுமே பொதுப் பணி என்பதல்ல. பேரிடர் காலத்தில் அவரவரால் முடிந்த அளவிற்கு அவரவர் நிலையிலிருந்து செய்யும் உதவியும் பொதுப்பணிதானே!

எதனாலோ அல்லது யாராலோ உங்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒரு வெறுப்பு வந்திருக்கிறது போல.  

ஆசிரியர்களை மரியாதை செய்வதை நினைத்து மகிழ்வதற்கு பதிலாக இப்படி குமுறும் உங்களுக்காக வருத்தப்படுகிறேன். உங்களை குறித்து கொஞ்சம் சிந்தித்ததில் எனக்கு தோன்றியவை இவை:

1.       நீங்கள் ஒரு தனியார் பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக இருக்கவேண்டும். கொரானா பொதுமுடக்கக் காலகட்டத்தில் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கையே இல்லாமல் நின்று போய் விட, உங்களது ஊதியம் வெட்டப்பட்டு இருக்கலாம். அதனால் ‘நானும் ஆசிரியர்தானே! எனக்கு சம்பளம் இல்லை. ஆனா அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழுச் சம்பளம், மேல விருது வேற!’ என்று உணர்ச்சி வந்திருக்கலாம்.

2.       தொழில் முனைவோராகவோ அல்லது ஒரு நிறுவனத்தின் ஊழியராகவோ இருக்கலாம். பொதுமுடக்கம் காலத்தில் நிறுவனம் முடங்கிப் போய் வருமானம் இல்லாமல் உங்கள் வருவாய் குறைந்திருக்கலாம். ‘இவங்களுக்கு மட்டும் எல்லாம் கெடைக்குதே!’ என்று உணர்ச்சியில் நீங்கள் இருக்கலாம்.

3.       ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் என்று எல்லோரும் சொல்வதால், அவர்கள் மீதே ஒரு வெறுப்புணர்வு வந்திருக்கலாம் உங்களுக்கு.

நீங்கள் இதில் எதுவாக இருந்தாலும் உங்கள் பார்வை சரியாக இல்லை என்பது என் கருத்து.

‘பரமன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் வெளிச்சம் பெறுகிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களின் கதி கொடுமையாக உள்ளது இந்த பேரிடர் காலத்தில். தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் அட்மிஷனுக்கு அலைகிறார்கள். சொற்ப சம்பளத்துக்கு அல்லல் படுகிறார்கள். அவர்களுக்கு ஏதும் கிடைக்க வேண்டும்!’ என்று சொன்னால் அது சரியான திசை. நீங்கள் சரியாக சிந்திக்கிறீர்கள். ஆனால் ‘இவங்களுக்கு எதுக்கு விருது? ஒத்த ரூபா குடுத்தாங்களா?’ என்று கேட்கும் மனநிலை தவறானது. அது உங்களுக்கு நல்லதல்ல. இதில் தொடர்ந்து பயணித்தால் உங்களுக்கு மன அழுத்தம்தான்  உண்டாகும்.

‘பார்வையை மாற்றுங்கள், வாழ்க்கை தானாய் மாறும் பாருங்கள்!’ என்கிறது மலர்ச்சி வாழ்வியல் விதி. வாழ்க்கை என்பதே பார்வைதான். உங்கள் பார்வையை கொஞ்சம் பாருங்கள்.

‘அவங்களுக்கு கெடைக்குது!’ என்று கொண்டாடுங்கள். ‘எங்களுக்கும் கிடைக்கட்டும்!’ என்று நினையுங்கள். இரண்டுமே நேரியம். உங்களுக்கு நல்லது. ‘ச்சே! அவங்களுக்கு கிடைக்குதே!’ என்று புழுங்காதீர்கள். அது எதிரியம். உங்களுக்கு நிச்சயம் நல்லதல்ல. உங்களை கீழே தள்ளிவிடும் அது.

பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    [email protected]
     
    (‘வளர்ச்சி பதில்கள்’ பகுதியிலிருந்து. ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ், அக்டோபர் 2021 இதழ்)
     

Valarchi

ValarchiTamilMonthly

 #MuPachaimuthuArakkattalai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *