‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

wp-1633322887231.jpg

‘நோ டைம் டு டை – 007 ‘ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் ஜேம்ஸ்பாண்ட் 007 படம் என்பதே சுவையான உணர்வுதான், அதுவும் முப்பரிமாணத்தில் கண்களுக்கருகில் படம் விரிய நல்ல பின்னணி இசை தெறிக்க.

டேனியல் கிரெய்க் வந்ததிலிருந்தே பியர்ஸ் ப்ராஸ்னன் காலம் வரையிலிருந்த ஜேம்ஸ் பாண்டிற்கென்று உருவாக்கி வைத்திருந்த சில வரையரைகளை உடைக்கத் தொடங்கி விட்டார்கள்.  ‘மேடம் எம்’ இறந்து ‘மிஸ்டர் எம்’ ஆனதை புரிந்து கொள்ளலாம். ஆஸ்டன் மார்ட்டின் கார் தவிர்த்து மற்றைய அவருடைய பிராண்டுகள் அடையாளங்கள் கூட மாறுகின்றன (‘நோக்கியா’ பயன்படுத்துகிறார்!!) 007 ஆக ஒரு ஆப்பிரிக்க பெண்ணையும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். காலத்திற்கு ஏற்ப மாற்றமோ?!

முதல் பத்து நிமிடங்களில் பெயர் போடுவதற்கு முன் வரும் ஜேம்ஸ் பாண்ட் விறுவிறுப்பு பகுதிகள் ‘பரவாயில்லை’ ரகம்தான். ஆனால் கதையோடு தொடர்பு உள்ளதாய் இருக்கிறது, முந்தைய படத்தோடும்.

இடையே கொஞ்சம் உல்லாசம் செய்து தொடக்கம் முதல் ஓடிக்கொண்டேயிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் 90% விருந்து உண்டு.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வழக்கமாய் வரும் பெண்களைப் போலவே இதிலும் கவர்கிறார்கள். அதிலும் குறிப்பாய் மிடறு மிடறாய் குடிக்கப் பதற்றப்பட்டு ஒரே மூச்சில் குடித்து மூச்சு விடும் ஆனால் அதற்கப்புறம் அதகளப்படுத்தும் அனா டே அர்மாஸ் கொஞ்ச நேரமே வந்தாலும் சிறப்பு.

தண்ணீரிலும் வானிலும் தண்ணீருக்குள்ளும் வடிவம் மாற்றிப் பறக்கும் விமானம், வாட்ச், கார் என ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வழக்கமான சிறப்பு சங்கதிகள் கவரவே செய்கின்றன.

வில்லனிடம் கொஞ்சம் அதீதமாகவே பணியும் போதே அடுத்து என்ன செய்வார் நாயகன் என்று ஊகிக்க முடியும் காட்சிகள், கடைசி ‘டொப் டொப்’ துப்பாக்கி சண்டைகள் கொஞ்சம் இழுக்கிறது போன்ற பலவீனங்களும் உண்டுதான் என்றாலும்  மற்ற காட்சிகள் விருந்துதான்.

படத்தின் இறுதியில்
‘அடேய்… என்னடா இப்படி பண்ணிட்டீங்க! ஜேம்ஸ் பாண்டையையே முடிச்சிட்டீங்களா!?’ என்ற ஓர் உணர்வு வருகிறது.

டேனியல் க்ரெக் பாண்டாக வந்ததிலிருந்தே ஒரே உணர்வுக் கலவைதான் படங்கள் நெடுக. அன்று முதல் படத்தில் ஈவா க்ரீனிடம் பாண்டின் விதிவிலக்கான காதலில் தொடங்கியது இந்தப் படத்தில் லீ சேடோக்ஸ் வரை தொடர்ந்துள்ளது.
போய் வாருங்கள் டேனியல் கிரெய்க்!

அடுத்த பாண்ட்டிற்காக காத்திருக்கிறோம்! 

‘நோ டைம் டு டை’ : உணர்ச்சி கலந்த வழக்கமான அதிரடி பாண்ட் படம். த்ரீடியில் பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#NoTimeToDie
#JamesBond007
#JamesBond
#ParamanReview

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *