‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

‘சாயப்பு வாத்தியார்’ என்னும் ‘பாய் வாத்தியார்’:

புவனகிரி பள்ளியில் தினமும் ‘ஷூ’ அணிந்தவர், அந்தக் காலத்திலேயே அப்படியொரு ‘ஷூ’ அணிந்தவர் என்றால் அது அவர்தான்.

இந்த ஊருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை என்பது போன்ற தோற்றம் கொண்டவர் சாயப்பு வாத்தியார். நல்ல உயரம், அது தெரியாத அளவிற்கு பருமனான உடல், நீளமான முகம். பாகிஸ்தான் முஸ்லீம்கள் அணிவது போல பெரிய நீளமான குர்தா, வகிடெடுக்காமல் மேல் நோக்கி வழித்து வாரப்பட்டு பின் பக்கம் சரியும் தலைமுடி இதுதான் சாயப்பு வாத்தியார்.  ஒரு பாரசீக முகம்மதிய ஓவியம் போலவே இருப்பார்.

சாயப்பு வாத்தியார் கதை என்றால் தெறிக்கும். ‘ஒரு டீ வாங்கித்தந்தால்தான் கதை’ என்று நேரடியாக சங்கதியை முன் வைப்பார். குமராட்சி செந்தில், பல ஆண்டுகளாக ஏழாம் வகுப்பிலேயே படிக்கும் பாண்டியன், பூங்கானத்தம்மன் கோவில் தெரு ஆறுமுகம் போன்றோர் உடனே இறங்கி மாணவர்களிடம் ஐந்து பைசா, பத்து பைசா என வசூலித்து டீ வாங்கி வந்து விடுவர்.

அதற்கப்புறம் நடப்பது மாஸ்.
‘கொள்ளக் கூட்ட பாஸ்’ ‘கள்ள கடத்தல் பாஸ்’ என்று அவர் சொல்லும் கதைகள் அந்தக் கணத்தில் அப்படியே உருவாகி அவரிடமிருந்து வெளிவரும். ‘கந்தன் ஓர் ஏழைப் பையன்’ என்று தொடங்குவார். அதற்கப்புறம் பக்கத்து கட்டிடமே இடிந்து விழுந்தாலும் தெரியாத அளவிற்கு சிறுவர்கள் ஒன்றாக கிடப்போம். இன்று நான் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி என சொல்லப்படுவதற்கு அன்று போடப்பட்ட முதல் சுழிகளில் இந்த சாயப்பு வாத்தியாரும் ஒருவர்.
அவர் கதையில் வரும் கடத்தல் பாஸ்கள் ராஜமௌலி படத்தில் வருவது போலவே எல்லாமே அதிகம் கொண்டவர்கள். ஒரே நேரத்தில் 5 சிகரெட்களை இழுப்பார்கள். எப்போதும் அவர்களை சுற்றி அடியாட்கள் இருப்பார்கள்.  பல ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ்பாபுவின் ‘போக்கிரி’ பார்த்த போது (தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’யின் மூலப்படம்) ப்ரகாஷ்ராஜைப் பார்த்த போது எனக்கு திரையில் சில நொடிகள் சாயப்பு வாத்தியார் வந்து போனார்.
சாயப்பு வாத்தியார் கதை நேரத்தில் மட்டும் நேரம் பறந்துவிடும்  ‘டொய்ங்க்’ என்று ‘பீரியட் பெல்’ ஒலிக்கும் போது எங்களுக்கு சோகம் வந்து விடும்.

சாயப்பு வாத்தியார் சிறுநீர் கழிக்கப் போகும் போது சிறு கல் எடுத்துக் கொண்டு போகும் தீவிர இஸ்லாமிய பயிற்சியாளர்.

சாயப்பு வாத்தியார் பணி புரிந்த பள்ளியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.

புவனகிரி பயணியர் மாளிகைக்கு அருகிலும் அதையொட்டி நீளும் பெருமாத்தூர் பகுதியில் யோகேஷ் வீட்டிற்கு எதிரில் இருக்கிறது ‘அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி’.

நுழைந்த உடன் சிறு திடல் போன்ற மண் தரை, அங்குதான் மொத்த பள்ளி மாணவர்களும் ஒன்றாக நின்று காலை ‘ப்ரேயர்’ நிகழ்த்துவர்.  ‘அட்டென்ஷன்…ஸ்டாண்ட் அட் ஈஸ்’ என்று என்சிசி வாத்தியாரின் நேரடிப்  பயிற்சி பெற்ற ஒரு சீனியர் மாணவன் சொல்ல, அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, செய்திகள், உறுதிமொழி, தேசிய கீதம் என கோர்வையாக நடக்கும். கொடி மரத்தின் அருகில் தலைமையாசிரியர் வண்டுராயன்பட்டு கலியபெருமாள் போன்றவர்களும், இடப்பக்கம் தனியாக நிற்கும் ப்ளஸ்ட்டு வகுப்பறை கட்டடத்திற்கு அருகில் சாந்தா, தமிழ்மணி, கேஎஸ் போன்றோர்களும் நிற்க காலைப் ப்ரேயர் நடந்தேறும்.

அதையொட்டிய பெரிய கட்டடமே பள்ளியின் முக்கிய கட்டிடம். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அறை, நடுவில் அடி பம்ப், அதையொட்டி அசோக மரம் என  எல்லாம் கொண்டமுக்கிய கட்டிடம்.
அதன் வடப்புறமும் மேற்கிலும் கூறை வேய்ந்த பள்ளிகள். அதற்கு மேற்கே பெரிய மிகப்பெரிய விளையாட்டு மைதானம். புவனகிரி பள்ளியின் அடையாளங்களில் ஒன்று.

முக்கிய கட்டடத்திற்கும் நெருஞ்சிமுள் நிறைந்த விளையாட்டு மைதானத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரங்களின் அடியில் பல வகுப்புகள் நடக்கும்.  அவ்வாறான மரத்தடி வகுப்பு ஒன்றிலேயே சாயப்பு வாத்தியார் கதை சொல்வதை பார்த்தோம்.

ஏ.டி ஐயா, ஜெயராமன் ஐயா என்றும் இருவர் உண்டு.

( புவனகிரி பள்ளி – தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
11.10. 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *