டாக்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

wp-1633974077591.jpg

தனது திருமணத்தை உறுதி செய்ய பெண் வீட்டுக்கு வந்த ராணுவ மருத்துவரை ‘உன்னோட செட் ஆகாது போப்பா!’ என்று சொல்லி அதிர்ச்சி தரும் அந்தக் குடும்பத்தினரே கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சியடைந்து நிற்க, இவர்  உதவ இறங்கி ‘ஹ்யூமன் ட்ராஃப்பிக்கிங்’ எனும் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலின் நூல் பிடிக்கிறார். உலக அளவில் பலம் மிக்க அந்த கடத்தல் கும்பலை எளியவர்களான இவர்கள் எப்படி எதிர் கொள்ளுகிறார்கள், சிறுமியை மீட்டார்களா இல்லையா? என்பதை சிரிக்க சிரிக்க திரைக்கதையாக்கி தந்து இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

திரைக்கதையும் வசனமுமே படத்தின் நாயகர்கள் என்னும் அளவிற்கு ‘ட்ரீட்மெண்ட்’ பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள். மிக முக்கியமான ஒரு சமூக பிரச்சினையை எடுத்துக் கொண்டு நகைச்சுவை தூவி நல்ல பொழுதுபோக்கு படமொன்றை தந்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் என்றாலே சிரித்து ஜாலியாக காமெடி, பாட்டு என்று இருப்பார் என்ற பிம்பத்தை உடைத்து இது எதையும் செய்யாமல் துளி கூட சிரிக்காமல் காலர் பட்டன் வரை இழுத்து மூடிக்கொண்டு ‘சீட் பெல்ட் போடுங்க’ ‘அதுக்குதானே பட்டன் குடுத்துருக்காங்க’ என்னும் வகையில் நடித்து வெற்றியும் பெற்றுவிட்டார். ஆட்டத்தை கூட படத்தின் முடிவிலேயே வைத்து விட்டார்கள்.(ஹேய்… நடனத்தில் முன்னேற்றம்!)

ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, சுனில் ரெட்டி, கிள்ளி என கூட்டமாய் சேர்ந்து சிரிக்க வைக்கிறார்கள். ‘நீ இதை சொன்னதுக்காக உனக்கு காமராசர் பக்கத்துல செலையா வைக்கப் போறாங்க?’ ‘புளிப்பு முட்டாய டப்பியில போட்டு வைக்கற மாதிரி அதை டப்பியில போட்டு மூடி வச்சுருக்கே!’ ‘என்னை சிலுவையில அறைஞ்சிருக்காங்கம்மா, இப்ப போய்..’ ‘அந்தப் பொண்ணு அது இல்ல, சுமதி!’ ‘அதுக்கு ஏன் மூஞ்ச அப்படி வச்சிருக்கற? – யாரு? நானு?’ என வசனங்கள் நகை தெறி.

தெலுங்குப் படத்தில் வந்திருந்த பிரியங்கா மோகன் பதுமை போல வந்து வேண்டியதை தந்திருக்கிறார். சில காட்சிகளில் தமன்னாவை நினைவு படுத்துகிறார் (இவரை கிண்டலடிக்கும் ஒரு சில காட்சிகளை ‘ஆணாதிக்கம் – பெண்ணியம்’ என எதிர்க்க வாய்ப்புண்டு). 

அழகாக செய்திருக்கிறார் அழகான வில்லன் வினய். மிலிந்த் சோமன் கொஞ்சமே வந்தாலும் நன்று.

அர்ச்சனா, இளவரசு என மொத்தப் பட்டாளமும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

‘செல்லம்மா செல்லம்மா’ பாடலை நன்றாக படமாக்கியிருக்கிறார்கள்.

பலம் : வசனம், நகை, திரைக்கதை
பலவீனம்: பல இடங்களில் லாஜிக் இல்லை, முதல் பாதியின் விறுவிறு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘டாக்டர்’ – ‘சிரிப்பு டாக்டர் – எண்டர்டெய்னர்’ – தியேட்டரில் பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#Doctor
#DoctorTamilFilm
#DoctorFilmReview
#ParamanReview
#Sivakarthikeyan
#Aniruth

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *