இரு திரையரங்குகள் : புவனகிரி – 3

*3*

*புவனகிரி – பள்ளி*

போன பதிவைப் படித்து விட்டு புவனகிரி ‘ஆபிதா வீடியோ விஷன்’ பற்றி  ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் உட்பட சிலர் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள்.  ‘இப்படி ஒன்று இருந்ததா?’ என்று கேட்டும் எழுதியுள்ளனர். இதற்கு பதிலாக சிறு குறிப்பு வரைய வேண்டுமானால் ஆபிதா வீடியோ விஷன் இருந்த காலத்தை முதலில் சொல்லியாக வேண்டும்.

புவனகிரியின் மாற்றத்தைக் கவனித்தாலே நம் முன்னே நிகழும் கால மாற்றத்தை கண்டு கொள்ள முடியும்.

‘குங்குமம்’ இதழிலிருந்து கலாநிதி மாறன் வெளியேறி, சன் டிவியின் முந்தைய வடிவான ‘பூமாலை’ வீடியோ கேசட் பிரிவை கலாநிதி மாறன் வடிவமைத்துக் கொண்டிருந்த அந்த நாட்களில், சினிமா என்றால் திரையரங்குகள் மட்டும்தான் என்றிருந்த அந்நாட்களில், புவனகிரி மக்கள் தங்கள் சினிமா தாகத்தை இரண்டு அடுக்குகளில் தணிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘மனிதன்’, ‘நாயகன்’, ‘வேலைக்காரன்’, ‘வேதம் புதிது’, ‘காதல் பரிசு’ ‘சங்கர் குரு’ ‘நினைவே ஒரு சங்கீதம்’ ‘ஒரு தாயின் சபதம்’ ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ ‘பூ விழி வாசலிலே’ ‘மக்கள் என் பக்கம்’ ‘நீதிக்குத் தண்டனை’ ‘எங்க சின்ன ராசா’ ‘கூலிக்காரன்’ ‘பாடு நிலாவே’ ‘ஊர்க்காவலன்’ ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ ‘மைக்கேல்ராஜ்’ ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என புதிதாக வெளியாகும் புத்தம் புதுத் திரைப்படங்களை, அரசமரத்தடியிலிருந்து பஸ் பிடித்து 80 காசுகள் கொடுத்து பயணித்து சிதம்பரத்திற்கு சென்று அங்கிருந்த நான்கு திரையரங்குகளில் பார்த்தனர்.  ( இன்றைய தமிழக முதல்வர் நடித்து கலைஞர் வசனம் எழுதிய ‘ஒரே ரத்தம்’  திரைப்படம் வெளியானது இந்த காலப்பொழுதில்தான்)

‘ என் அண்ணன்’ ‘திரிசூலம்’ ‘பில்லா’ ‘ரங்கா’ வகை கொஞ்சம் பழைய படங்களையும், பண்டிகை காலங்களில் வெளியிடப்படும்  ‘மாவீரன்’ ‘முதல் வசந்தம்’ ‘மெல்லத் திறந்தது கதவு’ ‘விக்ரம்’ ‘ஊமை விழிகள்’ ‘மைதிலி என்னைக் காதலி’ ‘மிஸ்டர் பாரத்’ ‘நான் அடிமை இல்லை’ ‘புன்னகை மன்னன்’ ‘விடுதலை’ ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற ‘செகண்ட் ரிலீஸ் ‘ படங்களையும் பார்க்க இரண்டு திரையரங்குகள் உள்ளூரிலேயே இருந்தன.

ஒன்று – புவனகிரி காவல் நிலையம் எதிரில் இருந்த சந்தில் உள்ளே போனால் வரும் ‘ரங்கராஜா திரையரங்கம்’.  புவனகிரியின் உயர்ரக திரையரங்கம் இதுதான் அப்போது.

இரண்டாவது – ஆற்றுக்கு அந்தப்பக்கம் ஆற்றையொட்டிய கீரப்பாளையத்தில் இருந்த ‘வி ஆர் கே டாக்கீஸ்’

மண்ணைக் குவித்து வைத்துக் கொண்டு அதன் மீது உட்கார்ந்து வெண் திரையில் கருப்பு வெள்ளையில் ‘வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய..’ என்ற எம்ஜிஆரையும், ‘மதன மாளிகையில்…’ என ஸ்டைல் விடும் சிவாஜியையும், சண்டைக்கு முன்பு  ‘கண்ணா, நாம வாங்கனத எப்பவும் திருப்பிக் குடுத்துடுவோம்! இக்கடச் சூடு’ எனக் கூறி தெரு மண்ணை அள்ளி எடுத்து நெற்றியில் திருநீறு மாதிரி பூசிக்கொள்ளும் ரஜினியையும், மூக்கு கண் காது கழுத்து தோள் முடி என நாயகியின் எந்த பாகம் கிடைத்தாலும் முத்தமிட்டுக் கொண்டே ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணே!’ என்று பாடும் கமலஹாசனையும் புவனகிரி சுற்றுவட்டார ரசிகர்கள் உணர்ச்சி பொங்க கண்டு திளைத்து மகிழ்ந்தது இந்த இரண்டு திரையரங்குகளில்தான்.

இடையிடையே நடந்து வந்து ‘முறுக்கு, மொளவடை, இஞ்சி மரப்பா!’ என்று கூவி கூவி வேறு விற்பார்கள் (விற்பவர்களில் ஒருவர் ‘சிங்காரம்’)

தரை டிக்கெட் 50 காசு, பெஞ்ச் டிக்கெட் 75 காசு, சேர் 1 ரூபாய் என்பது அந்நாளைய கட்டணம். இரண்டு திரையரங்க இருக்கைகளிலும் இருக்கும் மூட்டைப்பூச்சி் கடி அந்நாளைய இயல்பு சம்பவம்.

இந்த இரண்டு திரையரங்குகளை நீக்கி விட்டு புவனகிரியின் வரலாற்றை பார்ப்பது எளிதல்ல.  விஆர்க்கே டாக்கீஸ் மக்களோடு ஒரு வகையில் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தது.   டிடிகே, டி சீரிஸ் 60, 90 கேசட்டுகள் வராத அந்த நேரங்களில், கிராம்ஃபோன் ரெக்கார்டுகள் பயன்பாட்டில் இருந்த அந்தக்காலத்தில், வி ஆர் கே டாக்கீஸிலிருந்து புனல் ஸ்பீக்கரில்
‘திருப்பதி் மலை வாழும் வெங்கடேசா!’ ஒலிப்பது மொத்த புவனகிரிக்கும் கேட்கும். ஐயப்பன் கோவிலுக்கு அருகில் தாமரைக் குளத்தெருவில் இருக்கும் வீடுகளில் ‘கீரப்பாளையம் கொட்டாயில் ரெக்கார்டு போட்டுட்டாங்க, வெளக்கு வைக்கனும் வீட்ல!’ என்பார்கள். படம் பார்க்க விரும்புபவர்களை அழைக்கும் பாடல் ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா!’. ‘வணக்கம்… வணக்கம்… வணக்கம் பல முறை சொன்னேன்..’ பாடல் ஒலித்தால் படம் தொடங்கப் போகிறார்கள் என்று பொருள். அதுதான் நிறைவுப் பாடல்.

இப்படியான காலகட்டத்தில் வீடியோவில் பெரும் உச்சத்தில் இருந்தது ‘ராஜ் வீடியோ விஷன்’ (பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ‘சன் டிவி’யின் ஒளிபரப்பு தொடக்கத்திற்குப் பிறகு இவர்களும் ‘ராஜ் டிவி’ என்று சேனல் தொடங்கினார்கள்). வீடியோ கேசட்டுகள் – விசிஆர் – விசிபி என புழக்கம் வரத் தொடங்கியதும்,  அவற்றை வாடகைக்கு விட அதற்கான கடைகள் வந்தன. அப்படி புவனகிரிக்கு வந்ததே ‘ஆபிதா வீடியோ விஷன்’ (மண்ணெண்ணெய் கடை பாய் இதன் உரிமையாளர் என்று ஞாபகம்)

தொடக்கத்தில் ‘டெக்’கையும் ‘கேசட்டு’களையும் வாடகைக்கு விட்ட ஆபிதா வீடியோ விஷன், ஒரு டிவியை வைத்து சில நாற்காலிகளைப் போட்டு திடீர்  மினி திரையரங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதகளம் செய்தது. ‘அடுத்த காட்சி – தென்றலே என்னைத் தொடு’ ‘அதற்கும் அடுத்த காட்சி – காக்கி சட்டை’ என சாக்பீஸில் எழுதி வெளியே பலகை வைத்தது.

ஒன்றரை ரூபாய் தந்தால் ஒரு படத்தையும் காட்டி காப்பியும் தருவார்கள்.  ‘நானும் ஒரு தொழிலாளி’ ‘பாடு நிலாவே’ ‘காக்கி சட்டை’ போன்ற படங்களை இங்குதான் நான் பார்த்தேன்.   அனுமதியில்லாமல் இப்படி புதிய படங்களைத் திரையிடுகிறார்கள் என புகாரின் பேரில் போலீஸ் அதிரடி சோதனை நடத்த, படங்கள் திரையிடுவது நின்று போனது.

( புனகிரி பள்ளியைப் பற்றி எழுதும் போது, சிலர் எழுப்பிய வியப்புக் கேள்விகளுக்கு விடை பகர இதை எழுதினோம். இதுவே பெரிய கட்டுரையாக மாறிவிட்டதால், புவனகிரி பள்ளி – ஜெயராமன் ஐயா என நாம் பார்த்துக் கொண்டிருந்ததை அடுத்த பகுதியில் தொடர்வோம்!)

ஆற்று ஓரம் பெண்கள் பள்ளி ஆஞ்சநேயர் கோவில் எதி்ர்ப்புறம், புவனகிரி காவல் நிலையம் எதிர்ப்புறம் ஆகிய இடங்களில் இந்தத் திரையரங்குகளின் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டி வைக்க தேக்கு மரக் கழிகள் கட்டி பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டேதான் பள்ளிக்கு நடந்து செல்வோம்.

(புவனகிரி பள்ளி – தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
18.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *