அட இவர் பேசுகிறார்!

பேசும் விதத்தால் தன் பேச்சு வன்மையால் எதிரில் கேள்வி கேட்பவரை விவாதத்தில் எதிரில் இருப்பவரை சாமர்த்தியமாக நிறுத்தி ‘லெவல்’ காட்டுவது பெரியாரிய திராவிட தலைவர்களிடம் பொதுவாகவே இருக்கும் பல காலமாகவே நாம் கண்டு வரும் இயல்பு. ஆ ராசா, சுபவீரபாண்டியன் என பலரை குறிப்பிடலாம். அதிலும் என்ன கருத்துக்களை பேசினாலும் சுபவீ ‘சம்பூகன்’ சங்கதியைக் கொண்டு வந்து வானதி போன்றோரை கதற விட்டுவிடுவார்.  இப்படிப் பேசும் வகை, பாஜக ஆட்களுக்கு வந்ததே இல்லை. விவாதங்களில் ஊடக சந்திப்பில் தவிக்கவே செய்தனர் என்பதை மறுக்கவே முடியாது.

ஆனால், பாஜகவின் அண்ணாமலை தெறிக்க விடுகிறார்.  இந்து தமிழின் இன்றைய செய்திப் பதிப்பும் அதை வெளிப்படுத்துகிறது. (தினமணியோ, எதிர்க்கட்சி சார்பு ஊடகமோ இல்லை. இந்து தமிழ்!)

பாஜக என்றாலே தூற்றும் நண்பர் முத்துவைப் போன்றோர் ‘கிறுக்குத்தனமான பேச்சு! வேஸ்ட்!’ என்று சொன்னாலும், அண்ணாமலை ஊடகங்களை வேறு விதத்தில் கையாள்கிறார் என்பதை மறுக்கவே முடியாது.

‘தாமரை மலர்ந்தே தீரும்!’ என்று முந்தைய தலைவர் பேசுவதை கிண்டலடித்து கேலி மீம்ஸ் பகிர்ந்த உடன் பிறப்புக்கள், இப்போதெல்லாம் ’24 மணி நேரத்தில் ஆதாரம் காட்டட்டும் அண்ணாமலை – செந்தில் பாலாஜி அறிவிப்பு!’ என்று சீரியஸ் செய்தி பகிரும் நிலைக்கு வந்துள்ளனர் என்பதே மாற்றம்தான். (அதற்குப் பதிலாக மின்வாரிய எக்ஸல் ஃபைலை பகிர்ந்தார் அண்ணாமலை என்கிறது செய்தி)

இவர் சரியா, அவர் சரியா என்பதல்ல, யார் சரியாகப் பேசுகிறார்கள் என்பதல்ல நாம் குறிப்பிட விரும்புவது. தமிழக அரசியலில் புதிய மாற்றம் தெரிகிறது என்பதைக் கவனிக்கிறோம். இந்த மாற்றத்தால் வேறு எதுவும் நடக்குமா? தெரியாது. ஆனால், அண்ணாமலை பேசுகிறார் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்போம்!

– மணக்குடி மண்டு,
21.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *