தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

….

ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள நீர் வடிகாலும் அப்பகுதியில் சிறப்பாக இருந்தது என்பதும் ஒரு காரணம்.

அடுத்த ஆண்டு அந்தத் தெருவில் இருக்கும் (தனியார்) பள்ளி தாங்களே முன் வந்து தங்களுக்கு வேண்டும் என்று கூறி சாலையை சிமெண்ட் போட்டு புதிதாக சாலையை வேய்ந்தனர்.  சாலையின் உயரம் திடீரென சில அடிகள் உயர்ந்தது.   அன்று தொடங்கி அடுக்ககத்தின் கார் நிறுத்துமிடம், அடுக்கத்தின் யுபிஎஸ் / மின்சார அறை என எல்லாவற்றுக்கும் பிரச்சினை தொடங்கியது. சிறு மழை பெய்தாலும் சாலையிலிருந்து வழிந்து அடுக்கக வளாகத்தில் வரத் தொடங்கியது மழை நீர்.

சிறு மழை பெய்தாலும் அடுக்கக வளாகத்தில் வெள்ளம் தேங்கும். பள்ளி செல்லும் பிள்ளைகள், அலுவலகம் செல்வோர், நடைப்பயிற்சி செய்யும் குடியிருப்பு வாசிகள் என எல்லோரும் பெரும் சிக்கலை எதிர்கொள்வர். நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் அடிப்பகுதி நீரில் ஊறி பிரச்சினைகள் எழும். கார் காப்பீட்டு நிறவனம் இந்த வெள்ள நீர் பிரச்சினையை ஏற்றுக் கொள்ளாது.

நீர் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகும் என்று கூறி அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் வந்து அபராதம் போடுவார்கள்.

மழைக்கால பயன்பாட்டிற்கு, மழை நீரை இறைத்து வெளியேற்ற என்று அதற்காக ஒரு மோட்டார் வாங்கினோம். அதை இயக்க ஒருவரை வரவழைத்து அடுக்கக அலுவலக ஊழியர் ஒருவருக்கு பயிற்சியும் கொடுத்தோம்.  எவ்வளவு செய்தும் சிறு மழையிலும் நீர் சூழ்வதை தடுக்க முடியவில்லை. மொத்த குடியிருப்பும் அந்தப் பள்ளியை, மேடாக உயர்த்தி சாலை வேய்ந்ததை திட்டினார்கள்.

2015ல் வந்த சென்னைப் பெருவெள்ளத்தில் கூட நீர் சூழாத அடுக்கக வளாகம், சிறு மழையில் கூட வெள்ளமாகி நிற்கும் கொடுமையாக மாறியது. ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி நீக்கிவிட்டு புதிய சாலையை போடும் சரியான முறையில் செய்யாமல் இருந்த சாலை மீதே புதிய சாலையை போட்ட தவறால் சாலை உயர்ந்தது.
அதில் தொடங்கியது எல்லோருக்கும் சிக்கல்.  

(இப்போது நான் அண்ணாநகருக்கு குடி பெயர்ந்து விட்டேன் என்றாலும் மழை நேரங்களில் அந்த அடுக்ககத்தை நினைத்துக் கொள்வதுண்டு)

இந்த அடுக்ககத்தில் நடந்தது  ஓர் உதாரணம்தான். இப்படி பல வீதிகளிலும் பல குடியிருப்புகளில் பலரும் அல்லல் படுகிறார்கள்.  குடிசைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.   சாலை வேய்பவர்கள் காண்ட்ராக்ட் எடுத்த பெரும்புள்ளிகள் எல்லா இடங்களிலும் சாமானியர்களுக்கு செவி மடுப்பதில்லை.இந்து தமிழ் நாளிதழில் ‘பொறியாளர்களின் பொறுப்பற்றதனம்’ என நடுப்பக்க கட்டுரையே கூட வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு அவர்கள், ‘தமிழகத்தில் சாலைகள் போடும் போது இருக்கும் சாலை மீது அப்படியே போடக்கூடாது. ஏற்கனவே வேய்ந்த சாலையை தோண்டி நீக்கி எடுத்து விட்டே புதிய சாலையை அமைக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த உத்தரவு மிக மிக நல்ல, மிகவும் தேவையான உத்தரவு. எழுந்து நின்று வரவேற்கிறோம்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
21.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *