ஜெயராமன் ஐயா : புவனகிரி பள்ளி

*4*

*புவனகிரி – பள்ளி*

( புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது தெரியுமா?. சரி பாதியில் விட்ட ஜெயராமன் ஐயா பற்றியதை முடித்து விட்டு வருவோம் முதலில்)

ஆற்றல் உள்ளிருந்தும் எதனாலோ குவியம் பெறாமல் ஏனோதானோ என்று பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருக்கும் மாணவனை, எங்கிருந்தோ வந்து சில ஆசிரியர்கள் ‘படக்’கென்று பொருத்தி திருத்தி உள்ளே எதையோ ஏற்றிவிட்டுப் போய்விடுவர். அன்றிலிருந்து அம் மாணவனின் வாழ்க்கையே மாறி விடும். மாணவனே மாறிப் போவான்.

அப்படி ஓர் ஆசிரியர்தான் ‘டி ஜே ஐயா’ எனப்படும் ஜெயராமன் ஐயா. மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர் ஏழாம் வகுப்பு ‘சி’ பிரிவுக்கும் எடுக்க வர நாங்கள் புனர்வாழ்வு பெற்றோம்.  புவனகிரி பள்ளியின் பெரிய விளையாட்டுத் திடலின் கிழக்கே உடற்பயிற்சி ‘பார்’ ( பேரலல் பார்), அதற்கு சற்றே வடக்கே தூங்கு மூஞ்சி மரம். அந்த மரத்தினடியில் மெஷினிஸ்ட் வொர்க்‌ஷாப் ஷெட்டின் சுவரை ஒட்டி இருந்த இடத்தில் எங்களது ‘செவன்த் சி’. ஆமாம் கூரையும் இல்லை தரையும் இல்லை. வானமே எல்லை. மண்தரையிலே வகுப்பு. மழை பெய்து ஈரமானாலும் அதே கதைதான். முந்தைய வாரம் வரை ஆர்கே வாத்தியாரின் வகுப்பாக  ‘செவன்த் எஃப்’ என்றிருந்த எங்களை பாதியாக பிரித்தும் வேறு வகுப்பிலிருந்து சிலரை சேர்த்தும் ‘செவன்த் சி’ ஆக்கிவிட்டனர். (பாளையக்காரத் தெரு பூபாலன் வீட்டு செந்தில் அப்படித்தான் ‘செவன்த் சி’க்கு வந்தான்)

வகுப்பு மரத்தடிக்கு மாற்றப்பட்டது. அப்படி எங்கள் வகுப்புக்கு வந்தவர்தான் டிஜே ஐயா. கவிஞர் வைரமுத்து சிலாகித்துக் கொள்வாரே அப்படியொரு திராவிட நிறம். தமிழ் தவழும் வார்த்தைகள்.
அப்படியோர் ஆசிரியரை என் வாழ்நாளில் பார்த்தேயில்லை நான் அதுவரையில். ‘ஆன் த ஸ்பாட்’ ‘இம்ப்ராம்ட்டோ’வாக தன்னை வைத்தே சிரிப்புக் கதைகள் கட்டி நம்மை சிரிக்க வைப்பார். ‘காலையில குளிக்கப் போனேன். பார்த்தால் கிணற்று தண்ணீர் உறைந்து போயிருந்தது. என் தலையை கழட்டி நங்குன்னு அடிச்சேன். தண்ணி இளகிச்சு. குளிச்சிட்டு வீட்டுக்கு வந்தா, என் மனைவி கேட்கறாங்க ‘உங்க தலை எங்கே?’ன்னு. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது தலையை கிணற்று மேட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்னு’ – இது சிறுவர்களுக்காக அவர் வடித்த, நாங்கள்  சிலிர்த்த கதைகளில் ஒன்று.

சராசரியான விளையாட்டு மனப்பான்மையும் பெரிய கவனமும் இல்லாத என்னைப் போன்ற எத்தனையோ மாணவர்களை மெதுவாய் இழுத்து பொட்டிலடித்து திருப்பிப் போட்டவர் டிஜே ஐயா. ஒரு தமிழ் வகுப்பில், ‘மோந்தால் குழையும் அனிச்சம்’ என்று விருந்தோம்பல் பற்றி அனிச்சம் மலர் பற்றிய இலக்கிய செய்யுள் ஒன்றை எடுத்தார். முடிந்தது என் கடந்தகாலம். திடீரென்று ஒரு குவியம், ஓர் ஈடுபாடு, அடர்த்தியான ஓர் ஆர்வம் திடீரென பீறிட்டது என்னுள்ளிருந்து. இத்தனையாண்டுகளுக்குப் பின்னும் இன்றும் அந்த வரிகளைச் சொல்கிறேன் பாருங்களேன். அரையாண்டுத் தேர்வு வர, அதிலும் அந்த பகுதியிலிருந்தே கேள்விகள் வர, அவர் சொன்னதை அப்படியே விடைத்தாளில் எழுத, அன்று தெரியாது எல்லாம் மாறப்போகிறதென்று. ‘வாத்தியார் பையன் மக்கு’ என்று சக்தி அச்சகம் ஸ்ரீராம் உட்பட அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தது அடிபடத் தொடங்கியது அந்த அரையாண்டில்தான்.  அடுத்த வாரம் கடைசிப் பீரியடுக்கும் முந்தைய பீரியடில் ஜெயராமன் ஐயா வந்தார். கையில் கொத்தாக அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை கொண்டு வந்தார். ஒவ்வொன்றாக பெயர் சொல்லி அழைத்து அவரவர் கையில் தந்தார். மேலக்குறியாமங்கலத்திலிருந்து வரும் பாலகிருஷ்ணன் 72 மதிப்பெண்கள். வாயெல்லாம் பல்லாக உட்கார்ந்திருந்தான் பாலகிருஷ்ணன்.

‘இது யார்ரா இது பரமன்? நல்லா எழுதியிருக்கான்டா!’ என்றபடியே என்னை அழைக்கிறார். இருக்குமிடம் தெரியாமல் இருந்தவன் மீது வெளிச்சம் விழ எழுகிறேன், ‘பரமன் 84’ என்கிறார்.  வியப்பு, மகிழ்ச்சி, பரவசம், வெட்கம் என எல்லாம் கலந்த நிலையது எனக்கு.  தரையில் கால் நிற்கவில்லை. ‘நாமளும் படிச்சுருவோம் போல!’ எனும் நம்பிக்கை ஊற்று அது. அன்றிலிருந்து படிக்கப் பிடித்துப் போனது எனக்கு. எல்லாமே மாறிப் போனது எனக்கு.

(பின்னாளில்  பத்திரிக்கையாளனாகி, எழுத்தாளனாகி பத்திரிக்கை ஆசிரியனாகி என் முதல் நூலை வெளியிட்ட போது அதில் எழுதியிருந்த ‘ஆசிரியர்களுக்கு நன்றி’ கவிதையில் சில வரிகள் ஜெயராமன் ஐயாவை மனதில் வைத்தே எழுதினேன். ‘எங்கிருந்தோ வந்து என்னவெல்லாமோ செய்து விட்டு எங்கேயோ போய் விட்ட என் ஆசிரியர்களே…’ என்று தொடங்கும் அதன் முதல் வரி)

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், கல்லூரி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்று பயிற்சி வகுப்புகள் எடுக்கும் போதெல்லாம், அவர்களின் ஒரு துளியையாவது ஜெயராமன் ஐயாவாக மாற்றிவிட முயற்சிக்கிறேன், என்னைப் போல பல மாணவர்கள் பயன்படட்டும் என்று.

( என் தந்தை சிவபதம் அடைந்து மணக்குடியில் எங்கள் வீட்டில் அவரது படம் திறந்து புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு இரா. அன்பழகன் சாரோடு ஜெயராமன் ஐயாவும் வந்திருந்தார். அவரது அருகிலேயே அமர்ந்திருக்கும் வாய்ப்பையும் வழங்கியது வாழ்க்கை)

சில ஆசிரியர்கள் வந்து நம்மை எதுவோ செய்து விட்டுப் போய்விடுகிறார்கள். உங்கள் வாழ்விலும் அப்படியோர் ஆசிரியர் வந்திருப்பார். அவர்களில்லையேல் உருப்பட்டிருப்போமா என்பது கேள்விக்குறியே என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு புவனகிரி பள்ளியில் ஜெயராமன் ஐயா அப்படியோர் ஆசிரியர்.  உங்களுக்கு அப்படி ஒரு ஆசிரியர் இருந்திருப்பார். முடிந்தால் அவர் பெயரைப் பகிருங்களேன்.

அதைப் போலவே இன்னொரு அருமையான ஆசிரியர், சிதம்பரத்திலிருந்து வந்து புவனகிரி பள்ளியில் பத்தாம் வகுப்பில் அறிவியல் எடுத்த ‘தமிழ்மணி டீச்சர்’

( புவனகிரி பள்ளி – தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
23.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *