நீலம் : என்ன விலை கொடுத்தால் தகும்?

சில நேரங்களில் நமக்கு தரப்படும் சிலவற்றை எதைக் கொண்டும் அளவிட முடியாது.  தாகத்தில் தவிப்பவனுக்கு தரப்படும் ஒரு குவளை நீரைப் போன்று, வேண்டிய நேரத்தில் வரும் அவை விலைமதிப்பற்றவை, என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதவை.

வாங்கி வைத்திருந்து வாசிக்காமலே இரண்டாண்டுகள் கடந்து, பிற்பாடே கையிலெடுத்த ‘வெண்முரசு’ வரிசையின் ‘முதற்கனல்’ மெல்ல மெல்ல என்னை இழுத்துக் கொண்டது. அதன் ஆழத்தில் ஈர்க்கப்பட்டு, ஓடி அலைந்து அடுத்த பாகமான இரண்டு் தலையணை உயரம் கொண்ட ‘மழைப்பாடல்’ வாங்கி வந்தேன்.  இரண்டாம் பாகத்தை நான் வாசித்தேன் என்பதை விட ‘மழைப்பாடல்’ என்னை இழுத்து வாரிக் கொண்டது என்பதே உண்மை.  ஒரு பித்தனைப் போல அதிலேயே கிடந்தேன். இரண்டாம் பாகம் முடிந்த போது,  இடைவெளி விட்டு கொஞ்ச நாளைக்கு அப்புறம் அடுத்த பாகம் தொடர்வோம் என நினைத்து ஜெயமோகனை தற்காலிகமாகத் தள்ளி வைத்தேன்.
கொரோனா தீ நுண்மி பொது முடக்கமும் வர திஜ, தமிழ்மகன், மறுபடியும் சுஜாதா, விகே செட்டியார் என போய் விட்டுத் திரும்ப வரும் போது, வெண்முரசு அடுத்த பாகம் கிடைக்கவில்லை.

திடீரென்று 15 நாட்களாக ‘வெண்முரசு’ வரத் தொடங்கியது உள்ளே. குளிக்கும் போது ‘யமுனை’, மார்வல் காமிக்ஸின் ‘தோர்’ காட்சிகள் வந்தால் ‘தேவவிரதன்’, ஏதோவொரு செய்தியில் எவரோ பாம்புப் பிடிப்பதைக் காட்டினால் ‘பிருதை’, ‘ஆகா… வெண்முரசு அடுத்த பாகம் வேணும்!’ என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டேன்.

எப்போதும் எதற்கும் பதிவு / செய்திகள் அனுப்பும் வழக்கமில்லாத மதுசூதனனிடமிருந்து ஒருநாள் ஒருபதிவு வருகிறது, ‘ம்யூசிக்கல் ட்ரிப்யூட் பை கமல்ஹாசன் டு வெண்முரசு. ரிலீஸ்டு பை மணிரத்னம்’ என்று இணைய இணைப்போடு. அதையும் நான் திறந்து பார்க்கவில்லை. பத்திரிக்கை வேலைகளில் மூழ்கி ‘அப்புறம் பார்க்கலாம் இதை’ என ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

மதுசூதனன் கூப்பிட்டே விட்டார். ‘சார், அந்த லிங்க்ல பாருங்க சார் நீலம் பாகத்தோட ம்யூசிக் அது.
சார் நீலம் படிச்சிட்டீங்களா?’

‘இல்லைங்க! கெடைக்கல!’

அடுத்த நாளுக்கடுத்த நாள் என் முகவரிக்கு வந்து சேர்ந்து விட்டது ‘வெண்முரசு’ வரிசையின் ‘நீலம்’

இதோ ஞாயிறு மழை நேர மாலையில் பால்கனியில் என் முன்னே ‘நீலம்’. தேடிய ஒன்று தானாக வந்து நம் கைகளில்.

நான் தேடிக்கொண்டிருந்ததை பற்றி மதுவுக்கு எதுவும் தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால், எப்படி மிகச் சரியாக என்னைத் தொடர்பு கொண்டு அதைப் பற்றியே கேட்டார் அவர்?  இதற்கு என்ன விலை கொடுத்தால் தகும்? மதுசூதனனுக்கு என்ன கொடுத்து அடைப்பது?

நீங்கள் சொல்லுங்களேன்.

– பரமன் பச்சைமுத்து
24.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *