எப்படி நடக்கிறது இது

என்ன சொல்வது, எப்படி சொல்வது இதை!

ஓர் இடத்தில் ஒருவருக்கு உயிர் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், அது பற்றி எதுவுமே தெரியாத வேறொரு ஊரில் இருப்பவனுக்கு அவரது நினைப்பே தொடர்ந்து வருமா!?

மகனை மகளை கொண்டாடுவதை விட இன்னும் அதிகமாய் பேரன் பேத்திகளை கொண்டாடுவர் தாத்தாக்கள். ஒருவருக்கு எத்தனை பேரன்கள் பேத்திகள் இருப்பார்கள்! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு? மகள் வழி மகன் வழிப் பேரன்பேத்திகள் மட்டும் குறைந்த பட்சம் 18 பேர் என்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?

வையாபுரி மாமா! என் தந்தை பெரிதும் மதித்த அவரது தாய் மாமா. அம்மாவிற்கு உடன் பிறந்தவர் இல்லை அவரென்றாலும் ஒரே குடும்பம் ரத்தம் வழி அண்ணன் அவர்தான். அப்பா அவரை ‘வையாபுரி மாமா வையாபுரி மாமா!’ என்றே சொல்ல, அதுவே என் மூளைச் செல்களில் பதிந்து போய் வையாபுரி தாத்தா எனக்கு வையாபுரி மாமாவாகவே இருந்தார்.

வையாபுரி மாமாவிற்கும் சிவபூஷணம் அத்தைக்கும் ஏழு மகள்கள், இரண்டு பையன்கள். ஒரு குடும்பத்தை கையாள்வதற்கே நாக்கு தள்ளிவிடும் நிலை கொண்ட உலகில் நேரடியாக பத்து குடும்பங்களை உறவில் வைத்து கையாண்டார் வையாபுரி மாமா. ஏழு பெண்களையும் வளர்த்து கட்டிக் கொடுத்து, பையன்களுக்கும் திருமணம் பார்த்தவர் வையாபுரி மாமா. புல் அறுக்கப் போன இடத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை சிவபூஷணம் அத்தை அரிவாளால் ஏந்திப் பார்க்க, மின்சாரம் பாய்ந்து கருகி நொடியில் இறந்து போனார்.

ஏழு பெண்கள் வளர்ப்பு, அவர்கள் திருமணம், அவர்களது பிரசவம், அவர்களது குடும்ப நிகழ்வுகள், சிக்கல்கள், மனைவி இறப்பு என ஒரு வாழ்நாளில் அதிக அனுபவங்களை கண்டவர் வையாபுரி மாமா. அதற்காகவே அவரை அதிகம் மதிப்பேன் நான்.

எண்பத்தைந்தோ எண்பத்தாறோ அவருக்கு. போன மாதம் உடல் நலம் குன்றி சுகமில்லாமல் அவத்தையிலிருந்தாராம். பின்பு குணமாகி இருந்தவரை அம்மா கூட போய் பார்த்து வந்தார்.

காலையில் குளிக்கும் போது அவர் நினைவு, ‘ஆஃபீஸ் கிளம்பி போகும் போது விசாரிப்போம்!’ என தள்ளி்ப் போட்டு புறப்படுதலில் முனைந்தேன்.

காரிலேறி அலுவலகம் போகும் போது அவரது இளைய மகனுக்கு அழைக்கிறேன்.

‘கதிர்!’

‘மாமா!’

‘பேசலாமா? ஆஃபீஸ்ல இருக்கியா, வீட்லயா?’

‘இங்க ஊர்லதான் மாமா’

‘அப்பாவுக்கு அப்ப உடம்பு சரியில்லைன்னாங்களே, இப்ப எப்படி இருக்காங்க?’

‘அப்பா செத்துட்டாரு மாமா! இப்பதான். இன்னும் யாருக்கும் தகவல் கூட சொல்லலை!’

இரு பக்கமும் பேச்சு இல்லா நிலை. எத்தனை நொடிகள் அப்படி இருந்தோம் என்றும் தெரியவில்லை.  அவர் உயிர் பிரிந்தது ஐப்பசி ஆயில்யம் என்பதையெல்லாம் அதன் பிறகே கவனித்தேன்.

அதற்குள் உறவுக்கும் உலகத்துக்கும் செய்தி போய் நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு பயணித்து கடலூர் பில்லாலி போய் சேரும் போது, அவரது உடலை குளிப்பாட்டி விபூதியிட்டு அமரவைத்து கட்டி, எடுத்துப் போக முனைந்து கொண்டிருந்தார்கள்.

நல்ல மழையில் நனைந்து கொண்டே அவரை எடுத்துக் கொண்டு இரண்டரை கிலோ மீட்டர் நடந்து, கெடிலம் ஆற்றங்கரையில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் வடக்கு நோக்கி அமர வைத்து விபூதியிட்டு பதிகம் சொல்லி நல்லடக்கம் செய்து பாலிட்டு அம்மாவிடமும் சித்தப்பாவிடமும் விடைபெற்று நனைந்த உடலோடு காரிலேறி வெடவெடக்க குகனோடும், உமாவோடும், பரியோடும் சென்னையை நோக்கிப் பயணிக்கிறேன்.

ரெண்டு சங்கதிகள்  பண்ணி விட்டாலே, சத்தமாக கூவுகிறேன், காற்றில் கை வீசுகிறேன், எக்கி எக்கி நடக்கிறேன். பத்து குடும்பங்களை கையாண்ட ஒரு மனிதன் ஒரு முறை கூட இரைந்து பேசியதில்லை. தலைக்கனம் கொண்டதில்லை. வினைகள் அத்தனையையும் அறுத்துவிட்டு போய் விட்டானோ இம்மனிதன்!
….

அங்கு அவர் உயிர் பிரியும் அந்த வேளையில் இங்கு அவரது நினைப்பிலேயே இருந்திருக்கிறேன். நடப்பது அறியாமலேயே அழைத்திருக்கிறேன்.
அதெப்படி நடக்கிறது!

– பரமன் பச்சைமுத்து
திண்டிவனம்
29.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *