புவனகிரி பள்ளி – என்சிசி வாத்தியார்

*5*

*புவனகிரி – பள்ளி*

( சென்ற பதிவில் புவனகிரி பள்ளியின் டிஜே எனப்படும் ஜெயராமன் ஐயா பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு மகிழ்ந்து அமெரிக்காவிலிருந்து அவரது மகன் ஒளி, குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பதிவை ஜெயராமன் ஐயாவிற்கு வாசித்துக் காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூடுதல் மகிழ்ச்சி! வாழ்க! )

‘புவனகிரியின் பெயர் வரலாற்றில் இருந்தது  தெரியுமா?’ என்றொரு கேள்வியை சென்ற பதிவில் கேட்டிருந்தோம்.  ( ‘அது வேற புவனகிரியோ!’ என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர் சிலர். சென்னை அண்ணாநகரில் 12த் மெயின் ரோடில் ‘புவனகிரி ஹேண்ட்லூம்ஸ்’ என்ற பெயரில் தெலுங்கு பேசும் ஆந்திரக் குடும்பம் புடவை கடை வைத்திருப்பதை வைத்து இந்தக் கேள்வி என்று நினைக்கிறேன். நானும் புவனகிரி என்ற பெயரைப் பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு கடையுள்ளே போய் விட்டேன். விசாரித்ததில் நம் புவனகிரிக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. ஆந்திரத்திலிருந்து வந்திருக்கும் அவர்களது குலப்பெயர் ‘புவனகிரி’யாம். (Family name!))

இப்போதைய பிள்ளைகள் ‘சோஷியல்’ ‘சமூக அறிவியல்’ என்ற பெயரிலெல்லாம் பாடத்தைப் படிக்கிறார்களே, அது போல இல்லாமல் தமிழ் – ஆங்கிலம் – கணக்கு – அறிவியல் – வரலாறு – புவியியல் என்று ஆறு பாடங்கள் படித்த அந்நாட்களில் புவியியல் பாடத்தில் நிலவியல் பற்றிய பாடத்தில் ‘புவனகிரி குன்று’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்கள். 80களின் இறுதிகள் வரை இது பாடத்தில் இருந்தது.

*புவனகிரி குன்று*

‘குன்று என்றால் சிறுமலைதானே! புவனகிரியில் மலையா? குன்றா? டேய் எங்கடா இருந்தது?! நான் பாத்ததில்லையே!’ என்று கேட்கிறீர்களா?  ஆமாம் ‘புவனகிரி குன்றுகள்’ என்று புவியியல் பாடம் குறிப்பிட்டிருந்த அந்த சரித்திரப் பகுதி புவனகிரியில் இருந்தது. அதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அது என் கண் முன்னே அழிக்கப்பட்டதையும் பார்த்தேன். 

உங்களுக்கான கேள்வி. ‘புவனகிரி குன்று – தெரியுமா? சொல்லுங்களேன் பார்ப்போம்’
உங்கள் பதிலை உங்கள் கட்செவியஞ்சல் குழுவிலேயே (வாட்ஸ்ஆப் க்ரூப்)லேயே பதிவிடுங்களேன்.எவரேனும் எனக்கு பகிர்வர்.

….

*புவனகிரி பள்ளியின் ‘அடித்து பின்னும்’ ஆசிரியர்*

புவனகிரி பள்ளியில் அடிக்கும் ஆசிரியர், பையன்களை கொஞ்சம் மிரள வைக்கும் ஆசிரியர் என்றால் பட்டியலில் முதலில் இவர் பெயரைத்தான் சேர்க்க வேண்டும்.

நீளமான முகமும்,
நல்ல நெடு நெடு உயரமும் ‘அத்லெடிக் பாடி டைப்’பும் கொண்ட அவரைப் பார்க்கவே ஒரு மிரட்சிதான் பல மாணவர்களுக்கு. காலில் நீண்ட காக்கி சாக்ஸை அணிந்து அதை சுருட்டி கீழிறக்கி, அதன் மேல் ‘டேன்’ வண்ண பூட்ஸும் முகத்தில் ஒரு ‘சீரியஸ்னஸ்’ ‘கடுகடுப்பு’ ஆகியவற்றையும் அணிந்திருப்பார் அவர்.

‘அபவ்வ்ட்டன்’ ‘அட்டேன்ன்ஷன்’ ‘ஸ்டான்ட் அட் ஈஸ்’ ஆகியவை இவரது குரலில் உச்ச குரலில் சொல்லப்படும் போது அருகிலுள்ள தூங்கு மூஞ்சிமரத்திலிருந்து பறவைகளை அலறி ஓட வைக்கும்.

இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள். யெஸ்… கரெக்ட்… என்சிசி மாஸ்டர்.

(இன்று ஓர் அரசுப்பள்ளியொன்றில் ஆசிரியராக இருக்கும் உடையூர் கோவிந்தராஜன், இன்னமும் என்சிசி வாத்தியாரை நினைத்தால் ‘கிலி’யாக இருக்கிறது என்று ஒரு முறை என்னிடம் பகிர்ந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

அப்படியே கிளம்பி பள்ளி முழுக்க ஒரு ரவுண்டு வருவார். பொதுவாக மரத்தடி வகுப்பு மாணவர்களே இவரிடம் சிக்குவர். எந்தப் பையனாவது ஏதாவது சில்மிஷங்கள் செய்வது கண்ணில் பட்டால் தீர்ந்தது கதை. ‘படீர் படீர்’ என்று விழும் அடி. கூடுமானவரை முட்டிக்கு கீழேதான் அடிப்பார். சீருடை அணியவில்லை போன்ற காரணங்களுக்கு அடிப்பது இல்லை. முட்டி போட சொல்வது, விளையாட்டு மைதானத்தில் குப்பை காகிதங்களைப் பொறுக்குவது போன்ற தண்டனைகளை வழங்குவார்.

‘சிங்கம்’ திரைப்படத்தில் ‘தேசிய கீதம் பாடிட்டுருக்கறது தெரியல?’ என்றபடி பள்ளிக்குள் புகுந்தவர்களை சூர்யா அடித்து வெளுப்பாரே, அப்படித்தான் தெரிவார் புவனகிரி பள்ளிப் பிள்ளைகளுக்கு என்சிசி வாத்தியார் அந்நாட்களில்.

( உயர்நிலை வகுப்புகளுக்கும் பத்தாம் வகுப்பிற்கும் ஆங்கிலம் எடுத்த குண்டு வாத்தியார் ஜனார்த்தன் சார் கூட அடிப்பார்தான். ஆனால் என்சிசி வாத்தியார் அளவுக்கு அடிக்கமாட்டார்)

புவனகிரிப் பள்ளியில் நடக்கும் ‘கலைக்கழக விழா’விற்கு வரும் விருந்தினர்களை முறைப்படி ‘சல்யூட்’ அடித்து வரவேற்கும் பொறுப்பை என்சிசி வாத்தியாரின் பயிற்சியில் என்சிசி மாணவர்களே செய்வர். கைகளை விறைப்பாக முன்னும் பின்னும் உயர்த்தி ஒரு நேர்க்கோட்டில் நடந்து ‘சடக்’கென்று இடதோ வலது திரும்பி நடந்து, விருந்தினர்கள் முன்னால் விறைப்பாக ராணுவ ‘சல்யூட்’ அடிப்பது என சிலவற்றை செய்வார்கள். (இன்று கல்லூரிகளுக்கும் சில பெரிய பள்ளிகளுக்கும் சிறப்பு விருந்தினராக நான் போகும் போது, இதே முறையில் மாணவர்கள் என்னை வரவேற்கும் போது எனக்கு புவனகிரி பள்ளி நினைவில் வந்து போகும்)

புவனகிரி பள்ளிக்கு
கிருபானந்த வாரியார் சுவாமிகள் வந்த போதும் சரி, அதற்குப் போட்டியாக தில்லை வளவன் ஐயா ஏற்பாட்டில் திராவிட கழகத்தின் கி.வீரமணி வரவழைக்கப்பட்ட போதும் சரி, இந்த என்சிசி மாணவர்களே அவர்களை வரவேற்றனர்.

( கீழ்புவனகிரி திருநாவுக்கரசு முதலியார், கீழமணக்குடி பச்சைமுத்து வாத்தியார், 51 செட்டியார் ஆகியோர் பின்னால் நிற்க,  வாரியார் சுவாமிகள் புவனகிரி பள்ளியில் தற்காலிக  மேடையில் அமர்ந்து அன்று விளக்கிய ‘அகரம்’ ‘உகரம்’ எல்லாம் எந்த பல்கலைக் கழகத்திலும் கிடைக்காத விளக்கங்கள்.

“பித்தாப் பிறை சூடி பெருமானே!’ பாடலை அறிவியல் வாத்தியார், தமிழ் வாத்தியார் உதாரணம் சொல்லி கேலி செய்து நாத்திகம் பேசிய கி். வீரமணி அவர்களின் விளக்கமும் மறக்கவே முடியாது)

என்சிசி வாத்தியாரைப் போலவே காக்கி சாக்ஸை சுருட்டி விட்டுக்கொண்டு பூட்ஸ் அணிந்து ‘பில்லா’ ‘ரங்கா’ ரஜினியாக தங்களையே பாவித்துக் கொண்ட மாணவர்களும் உண்டு.
பீட்டர், அருள் மகிமை தாஸ், மேல குறியாமங்கலம் பாலகிருஷ்ணன் போன்ற என்சிசி மாணவர்கள் என்சிசி வாத்தியாரை ஒரு நாயகராக வர்ணித்து மற்ற மாணவர்களிடம் கதைகள் சோடிப்பதும் நடக்கும்.

அந்நாட்களில் உண்மையில் அவர் ஒரு ‘பர்சனாலட்டி’தான்.
உங்களுக்கு புவனகிரி பள்ளியின் என்சிசி மாஸ்டரை நினைவிருக்கிறதா?

(புவனகிரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ‘தீபாவளி நல்வாழ்த்துகள்’)

( தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
[email protected]
31.10.2021

#Bhuvanagiri

#BhuanagiriSchool

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *