6. புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்புவனகிரி பள்ளி – அசோகமரமும் பச்சை பைப்பும்

….

சென்ற பதிவில் புவனகிரியைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னதை விட, என்சிசி வாத்தியார் நடராஜன் பற்றி பின்னூட்டம் அனுப்பியவர்களே அதிகம். சிலர் சரியான விடையை எழுதியிருந்தார்கள்.  ‘பள்ளிக்கு வடமேற்கே’ என்று சொன்ன பதில் தவறானது. வடமேற்கே இருந்தது புதர்கள் அடர்ந்த கருவக்காடு. 
(இன்று அதுவும் இல்லை. அழிக்கப்பட்டுவிட்டது)

பள்ளியின் வடகிழக்கே இருந்தது வரலாற்றில் இடம் பெற்றிருந்த புவனகிரி குன்று என்பதே சரியான விடை.  அதன் மீது ஏறியும் இருக்கிறோம் சிறுவர்களான நாங்கள். அதை வெட்டி வெட்டி மண் எடுத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியதையும் பார்த்தோம் நாங்கள்.

….

புவியியல் பாடத்தில் இடம் பெற்ற புவனகிரியின் இன்னுமோர் இடம் இருக்கிறது. அதற்கு முன்னால் புவனகிரி பள்ளியின் சங்கதியொன்றைப் பார்த்துவிட்டு வருவதே நல்லது.
….

புவனகிரிப் பள்ளிக்குள் நுழைந்தால் வலப்புறம், சுனாமி நிலநடுக்கம் காரணமாக கலிஃபோர்னியாவில் அனுமதிக்கப்படும் அளவிலான உயரமுள்ள கட்டிமொன்று இருக்கும். அது பதினொன்றாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கானது.  அதைக்கடந்தால் எதிரில் இருக்கும் பெரிய கட்டிடமே புவனகிரி பள்ளியின் முக்கிய இயங்கு தளம் அந்நாட்களில்.

கட்டிடத்தின் தென்கிழக்கு மூலையில் இருந்த அறை தலைமையாசிரியருக்கானது. வாஸ்து சாத்திரத்தில் தென்கிழக்கு அக்னிக்கானது என்பார்கள், அதனால்தானோ என்னவோ நாங்கள் இருந்த போது இருந்த தலைமையாசிரியர் அடு்ப்பில் உட்கார்ந்ததைப் போலவே ஓடுவார், இயங்குவார், இருப்பார்.  தடித்த சட்டம் போட்ட கண்ணாடியணியும் கூடுமானவரை வெள்ளை சட்டையணியும், தேங்காய் எண்ணெய்யோடு தண்ணீரும் கலந்து தலையை வழித்து வாரும், உருவத்துக்கும் சுறுசுறுப்புக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் குள்ளமானவராக இருந்த, வண்டுராயன்பட்டிலிருந்து வரும் வி கே கலியபெருமாள் அந்த அறையில்தான் பெரிய மர மேசைக்கு அடுத்து கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். கட்டிடத்துக்குள் நுழைந்த உடன் இடது பக்கம் தலைமையாசிரியர் அறை. நேராக அந்தக் கோடியில் தெரிவது மேற்குப் பக்க வாயில்.

(வி கே கலியபெருமாளுக்குப் பிறகு, 10-Aவுக்கு ஆங்கிலம் எடுத்த ‘கேஎஸ்’ எனப்படும் கே சிவப்பிரகாசம் தலைமையாசிரியர் ஆனார் என்பது தகவல். நக்கீரன், சேரமான், சாந்தா போன்ற ஆசிரியர்கள் எல்லாம் இப்போது எங்கு இருப்பார்களோ!?)

கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் நடுவே மேல் தளத்துக்கு செல்லும் மாடிப்படி. அந்நாட்களில் சினிமாக்களில் காட்டப்படும் கோர்ட் படிகளைப் போல பள்ளியின் அந்தப் படிகள் பெரிய படிகளாகத் தெரியும். அகலமான, கொஞ்சம் ஏறி வலதில் திரும்பி மறுபடியும் ஏறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட அந்த படிகளில் ஒரே நேரத்தில் ஒரே வரிசையில் 5 அல்லது 6 சிறுவர்கள் ஏறலாம் எனும் அளவில் தோன்றும் அவை. (இன்று பல பெரிய கட்டிடங்களை நாம் பார்த்து விட்டதாலோ நாம் வளர்ந்து விட்டதாலோ அவை சிறியதாக தெரிகின்றன)

அந்தப் படிகளில் ஏறும் முன் ஒரு அசோக மரம் இருக்கும். அதனருகில் பள்ளியின் மணி (‘ஸ்கூல் பெல்’) கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பள்ளிப்பிள்ளைகள் எப்படி ‘வானிலை அறிக்கை ரமணன்’ அவர்களைக் கொண்டாடினார்களோ, அப்படியே ஸ்கூல் பெல் அடிக்கும் வாட்ச் மேனை கொண்டாடினர் புவனகிரி பள்ளி மாணவர்கள். அந்த மணியைப் பார்க்கும் போதெல்லாம், ‘அப்படியே… டக்குன்னு ஓடிப்போய் அந்த மணியை ‘டொய்ன்டொய்ன்டொய்ன்டொய்ன்’னு அடிச்சிட்டு பறந்து ஓடிப் போயிடனும்டா!’ என்று ஏக்கத்தோடும் ஆக்‌ஷன் ஹீரோ கணக்காகவும் ராணிகாமிக்ஸ் ஜேம்ஸ்பாண்ட் போல கற்பனை செய்த பல மாணவர்கள் உண்டு அங்கு.

அந்த இடத்தைக் கடந்து படியில் ஏறாமல் கொஞ்சம் கடந்தால் வலது புறம் சிறிய அளவில் முற்றம் போன்ற பகுதியில் சுவரையொட்டி ஓர் அசோக மரமும், மையத்தில் ஓர் பச்சை வண்ண ‘பைப்’ என்றழைக்கப்படும் அடி பம்ப்பும் இருக்கும்.

ஓசோனைஸ்டு வாட்டர், மினரல் வாட்டர், டிஸ்ட்டில்டு வாட்டர், ஆர் ஓ என இத்தனை வகைகள் வராத அந்நாட்களில் பறவைகள் விலங்குகள் போலவே மனிதர்களும் நேரடியாக நிலத்தடி நீரை குடிக்கும் பழக்கமிருந்தது. ஒரு நோயும் வரவுமில்லை. புவனகிரி பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் ஆதார குடிநீர் தந்தது அந்த ‘பைப்பு’தான்.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு டிபன் பாக்ஸ்ஸை (‘கப்’) கழுவி நீர் பிடித்துக் குடிக்க அங்கு நடக்கும் களேபரம் வார்த்தைகளால்  சொல்ல முடியாதவை. வரிசை ஒழுங்கும்  இருக்காது, முறையும் இருக்காது. களேபரம் மட்டுமே இருக்கும். ‘கப் வெட்டுதல்’ என்று  புவனகிரி பள்ளிக்கே உரிய ஒரு புது வகை பாக்ஸிங் ரணகளமாக நிகழும் அந்தப் பைப்பின் வாயின் அருகே.  பாவம், புன்னியம், சின்னவன், பெரியவன், முன்பே வந்தவன், இப்போதுதான் வந்தவன் என எந்த முறைமையும் அங்கு நிகழாது. வலு உள்ளவன் ‘ஏய்… ஏய்…’ என்று ‘வூடு கட்டத் தெரிந்தவன்’ முதலில் பைப்பை கைப்பற்றுவான். அவன் முடித்துப் போனதும் மற்றவர்கள்.  இதில் அடிதடி வந்து வெள்ளை சட்டை பித்தான் பிய்ந்தும் சட்டையே கிழிந்தும் முகத்தில் ரத்தம் வருமளவிற்கு காயம் வரும் அளவிற்கு சண்டையெல்லாம் நடந்திருக்கிறது பலமுறை. கரைமேடு செந்தில், சுத்துக்குழியிலிருந்து வரும் ஓர் அண்ணா, சாத்தப்பாடி போண்டா, வேடன் தோப்பு நாடார் வீட்டு முருகன், கீழமணக்குடி அர்ச்சுனன், கீழமணக்குடி பாலசரவணன் போன்றவர்களே பைப்பை வீரம் காட்டி ஆட்சி செய்வார்கள்.

(இப்போது அந்த பச்சை ‘பைப்’ இல்லை பள்ளியில். அந்த இடத்தில் கழிப்பறை கட்டப்பட்டு, அதுவும் சீர்கெட்டு கிடக்கிறது)

கை காய்ந்து ‘கப்’ காய்ந்து பைப் நீருக்காக காத்திருக்கப் பிடிக்காத மாணவர்கள் சிலர் கண்டுபிடித்த, விரும்பிப் போகும் ஓர் இடம் பெருமாத்தூர் வள்ளலார் கோவில்.

சைக்கிளில் ஏறி இரண்டு மிதி மிதித்தால் பெருமாத்தூர் சாலையின் இடப்புறம் வள்ளலார் கோவில். வண்டியை நிறுத்தி விட்டு உயரமான மேடை போன்ற கோவிலின் தளத்தில் அமர்ந்து அடிக்கும் காற்றில் கேசம் களைய மேல்சட்டை பறக்க, ‘கப்’பைத் திறந்து தயிர்சாதத்தையும் நாரத்தங்காய் ஊறுகாயையும் நிம்மதியாக உண்டு விட்டு எழுந்தால் கோவிலை ஒட்டி கிழக்குப்புறம் அந்த அதியசம் இருக்கும். புவனகிரி பள்ளியில் பைப் தண்ணீருக்காக சண்டை காத்திருப்பு என்றிருந்த இந்த மாணவர்களுக்கு இரண்டடி அளவிற்கு அகலமாய் தண்ணீர் பொங்கி எழும்பி வழிந்து ஓடுவது ஆனந்தமாக இருக்கும்.

ஏன் அது அதிசயம்? மின் மோட்டர் வைத்து இயக்காமல், அடி பம்பு போல விசை எதுவும் தந்து இயக்காமல் எதுவுமே இல்லாமல் பூமியின் அடியாழத்திலிருந்து தானாகவே நிலத்தடி நீர் மேலெழும்பி பூமிக்கு வெளியே பொங்கி வந்து விழுந்து வழியும்.
இதற்கு ‘ஆர்ட்டீசியன் நீரூற்று’ என்று பெயர், இது இயற்கையின் அதிசய நிகழ்விலொன்று  என்பதெல்லாம் பின்னாளில் படித்தோம். அன்று பள்ளி வயதில் அது ஓர் அதிசயம். (இன்றும் அது அறிவியல் அதிசயம்தானே!)

அதில் வாய் வைத்துக் குடித்தால், பூமியின் அடியாழத்திலிருந்து வரும் அந்த நீரின் மணமும் சுவையும் வேறெங்கும் கண்டிராத வகையில் இருக்கும். (அதன் சத்துக்கள் மிக உயர்ந்தவை என்பது இன்று பூசணி விதைகளை, ஃப்ளாக்ஸ் விதைகளை, ‘ப்ரவுன் ட்ரீ’ அங்காடியில் காசு கொடுத்து வாங்கி உண்ணும் இவ்வயதில் புரிகிறது!)

நாளின் எல்லா நேரங்களிலும், வாரம் முழுக்க, மாதம் முழுக்க, ஆண்டு முழுக்க என எப்போதும் நீர் வழிந்து வந்து கொண்டேயிருக்கும். ஆர்ட்டீசியன் போர் ஓர் அதிசயம் என்றால்,  ”இந்த இடத்தில் இத்தனை அடியில் துளை செய்தால் இப்படி ஆர்ட்டீசன் ஊற்று வரும்!’, என்று எப்படிக் கணித்தனர் எவரோ’ என்பதும் ஓர் அதிசயம்.

‘புவியியல் பாடத்தில் புவனகிரி’ என்று தொடக்கத்தில் சொன்னது இதைக் குறிப்பிட்டுத்தான். புவியின் தன்மைகள் பற்றிய புவியியல் பாடத்தில் ‘ஆர்ட்டீசியன் ஊற்றுகள்’ என்பதை விளக்கி ‘புவனகிரி’ என்று இதைத்தான் குறிப்பிட்டிருப்பார்கள்.

பள்ளியெல்லாம் முடித்து கல்லூரி, அமெரிக்கா, ஜப்பான் என பல ஊர்களில் பணி புரிந்து விட்டு எப்போதாவது புவனகிரி – சேத்தியாதோப்பு வழியில் பயணிக்கும் போது, பெருமாத்தூர் வந்ததிலிருந்து கண்களும் மனமும் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றைத் தேடவே செய்யும்.  சில நிமிடங்கள் வண்டியை நிறுத்தி அதைப் பார்த்து விட்டு அப்புறமே தொடரப்பட்டிருக்கின்றன அவ்வழியே செய்யப்பட்ட என் பல பணங்கள்.

அந்த ஆர்ட்டீசியன் ஊற்று இன்னும் இருக்கிறதா? அந்த ஊற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

( தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
07.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *