பொன்னையன், இளங்கோவன்!
கேள்விகளுக்கு நன்றி.
எனக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்கவோ எதிர்த்து நிற்கவோ அவசியம் ஏற்படவில்லை. சிவன் அதை எனக்கு ஏற்படுத்த மாட்டான் என்று நம்புகிறேன். நல்லதென்றால் எவராக எந்த கட்சியாக இருந்தாலும் பாராட்டுவேன். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலாக நான் எழுதும் இந்தப் பதிவும் அப்படியே.
கட்சிகள் தாண்டி அரசியல் இல்லாமல் கொஞ்சம் பேசுவோம்.
- சென்னையில் 16 நீர்வழித் தடங்கள் உள்ளன. அவற்றை சரியாகப் பராமரித்தாலே 80% வெள்ள நீர் பிரச்சினைகள் சரியாகும்.
2015ல் அடையாறு ஆறு நிரம்பி முத்தமிழ்ப் பேரவை ( ராஜரத்னம் கலையரங்கம், சிவாஜி மணிமண்டபம் அங்கு வரவில்லை அப்போது) வரை வெள்ளம் வெளியே வந்து எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வரை வந்தது.
அதன் பிறகு அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர் வாறினார்கள். 2019,2020ல் வந்த மழையில் கரையோர வீடுகளுக்கு கூட நீர் வரவில்லை. நான் இதை படமெடுத்து இதே குழுவில் அப்போது பகிர்ந்தேன்.
16 நீர்வழிகளையும் ஆழப்படுத்தி, அகலப்படுத்தினால் 80% பிரச்சினைகள் சரியாகும். ‘இது மட்டும்தான் பிரச்சினையா மண்டு?’ என்போர் அடுத்த பாயிண்ட்டுக்கு போகவும்.
- புதிய சாலைகள் போடும் போது சிந்திக்காமல் மடத்தனமாய் போடுவதாலேயே வீடுகளுக்குள் நீர் புகுந்து விடுகிறது. ஏற்கனவே போட்ட சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலையை போட வேண்டும். அப்படியே போடுவதால் வீட்டின் நிலையை விட சாலை உயர்ந்து மேடாகிறது. தமிழக அரசு இதற்காக ஒரு புதிய உத்தரவை போட்டிருக்கிறது. இது பற்றி சொந்த அனுபவத்தை சொல்லி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்த பதிவின் கீழேயே அதையும் பகிர்கிறேன். இது நவம்பர் மாத ‘வளர்ச்சி’ இதழிலும் வெளியாகி உள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் புதிய கட்டிடங்கள், வீடுகள், மனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
நீர் வரத்து – நீர் போக்குவரத்து பகுதிகளை ஆக்கிரமித்தும் அதற்கு வழி செய்யாமலும் ரியல் எஸ்டேட் , ப்ரமோட்டர்கள் விற்பதும், கையூட்டு வாங்கிக் கொண்டு மாநகராட்சி / அரசு அதிகாரிகள் அதற்கு அனுமதி தந்ததும்/ தருவதும் இன்றைய சிக்கலுக்கு பெருங்காரணங்கள். - கொசஸ்தலை, கூவம், அடையாறு போன்ற நதிகளில் கழிவுநீரையும், குப்பையையும் கொட்டுவது அடுத்த பெரும் பிரச்சினை. இதனால் இவ்வாறுகள் உயிர் நீத்து செத்தே விட்டன. தெய்வங்களாக வணங்க வேண்டிய நதி நீர்நிலைகள் நாசமாகிவிட்டன. குப்பை கொட்டினால் பெரும் அபராதம் என்று கடுமையான சட்டம் வேண்டும்.
- கழிவு நீர் குப்பைகள் நதிகளில் கலக்காமல் இருக்க, அதற்கென்று ஒரு தனி கழிவுநீர் தடம் புதிதாக அமைக்கப்பட வேண்டும். பெருஞ்செலவுதான். பெருஞ்சிரமம்தான். ஆனால் இதை செய்யும் அரசை, வரலாறு போற்றும்.
- வானம் வாரிக் கொடுக்கிறது நீரை. அத்தனையையும் தெருவிலும் கடலிலும் விட்டுவிட்டு, பக்கத்து மாநிலங்களில் கையேந்துகிறோம், வீராணத்திலிருந்து திருடி வருகிறோம். ஆந்திரா மட்டும் கிருஷ்ணா நீர் தரவில்லையென்றால்?
புழல், செம்பரம்பாக்கம் போல செனலனையின் நீர் ஆதாரங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட சென்னையாகிவிட்ட சென்னையின் சுற்ற்றுப்பகுதிகளிலுள்ள ஏரிகள் தேக்கங்கள் ஆகியவற்றை ஒழுங்காகப் பராமரித்தால் 150டிஎம்சி நீர் தேக்க முடியுமாம். நீர் மேலாண்மை நிபுணர்கள் சொல்கிறார்கள். சென்னை நகரின் அதிகபட்ச நீர் தேவை ஒரு மாதத்திற்கு வெறும் 1 டிஎம்சிதான்.
ஹாங்காங், ஜப்பான் போல பூமிக்கடியில் கிடங்கு அமைத்து மழைநீர் சேமிப்பதெல்லாம் அப்புறம் செய்வோம். முதலில் முதல் 6 பாயிண்ட்களில் கவனம் செலுத்தினால் போதும்தானே! இது நிபுணர்கள் பரிந்துரைப்பது.
(சென்ற ஆட்சியில் புதிதாக கண்ணன்கோட்டை – பெரும்பேர் கண்டிகை நீர்த்தேக்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு சென்னை குடிநீருக்கு இணைக்கப்பட்டது. இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நல்ல செயல்.)
- வேளச்சேரி ஏரி, கொரட்டூர் ஏரி போல பல சென்னையின் ஏரிகள் எத்தனை ஏக்கர்கள் அரசிநல்வாதிகளால் சுருங்கிப்போயுள்ளன என டைம்ஸ் ஆஃப் இந்தியா படம் வெளியிட்டுள்ளது. ‘கலைஞர்தான் அந்த ஏரியை துர்த்து வீட்டு வசதி வாரியம் வளாகமும் கட்டிடமும் கட்டினார்’ என்று ஒருத்தரை மட்டும் குறை கூற வேண்டும். எல்லோரும் இப்படி பல செய்திருக்கிறார்கள். நீர் மேலாண்மை விழிப்புணர்வும் இவ்வளவு பிரச்சினைகளும் அன்று வரவில்லை. நடந்தது நடந்து விட்டது இனி என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தாலே போதும். முதல் 6 பாயிண்ட்கள் போதும்.
தற்போதைய முதல்வரும், இந்த வேலைகளில் நிர்வாகத்தை கையிலெடுத்து கவனிக்கும் ககன்தீப் சிங் பேடியும் இவற்றை செய்து விடுவார்கள் என நான் எண்ணுகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் இதை செய்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!
வாழ்க!
- மணக்குடி மண்டு
11.11.2021