7. புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:

7

புவனகிரி பள்ளி – புவனகிரி பள்ளியின் இதயம்:

புவனகிரி பள்ளியின் இதயம் எது என்று பழைய மாணவர்களைக் கேட்டால், இதையே சொல்வார்கள்! ‘எதை?’ என்று பார்ப்பதற்கு முன் பழைய மாணவர்கள் என்று நாம் குறிப்பிடும் வகையினர் எவர் என்பதை சொல்லியாக வேண்டும்.

புவனகிரி கடைத்தெருவில் ஜெயா காப்பிக்கு எதிர்ப்புறம் ஆசியா சைக்கிள் மார்ட்டுக்கு அடுத்து ஒரு கடை உண்டு (அதுவும் அவர்கள் கடைதான்). தீபாவளி வரும் போது நிறைய மரபெஞ்சுகளை அடுக்கி பட்டாசு கடை போடுவார்கள். பொங்கல் என்றால் வண்ணம் மிகு ‘பொங்கல் வாழ்த்து’ கடை போடுவார்கள். இன்னொரு கடை பட்டாபி வீடு / ராஜா கடைக்கு அடுத்து என்பதாக நினைவு.

(நோட்டு, குயர் வெள்ளை தாள் என்றால் சாம்பசிவ செட்டியார் கடைதான் எங்கள் சாய்ஸ். அந்தப் புது நோட்டைத் திறந்து முகர்ந்தால் ஒரு சூப்பர் கிறங்கடிக்கும் வாசனை வரும்.)

அது என்ன பொங்கல் வாழ்த்து கடை. வாழ்த்தை கடையில் விற்பார்களா!?

இன்றிருப்பது இந்தியாவின் மிக நவீன, பலவற்றை பார்க்காத, பலவற்றை பார்த்துவிட்ட தலைமுறை. மகன், மகள் வெளியூரில் இருக்கிறார்கள், உறவினர்கள் வெளியூரில்… ஆனால் அவர்களது முகவரி அஞ்சல் தெரியாது. ‘ஏ… லொகேஷன் ஷேர் பண்ணுவாங்க,போய் சேர்ந்திடுவோம்ப்பா. அப்படி வேற எதுவும் வேணும்னா கால் பண்ணா போச்சு, வாட்ஸ்ஆப் பண்ணா போச்சு. போவியா!’ என்னும் இந்த கட்செவியஞ்சல் தலைமுறைக்கு ‘பொங்கல் வாழ்த்து அட்டை’ என்று ஒன்று இருந்ததே தெரியாது.

உதயசூரியனின் பொன் கிரணத்தில் பொங்கல் மஞ்சள் கரும்பு உழவன் ஓவியம், நடிக நடிகையர்கள் படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முகவரி எழுதி அஞ்சல் தலை ஒட்டி அனுப்ப, அந்த பொங்கல் வாழ்த்து அவர்களுக்கு அஞ்சல் மூலம் போய்ச்சேரும்.

ஸ்டெப் கட்டிங்கில் ஸ்டைலாக பார்க்கும் ‘பில்லா’ ரஜினி, காலை பரப்பி கூர்மையாக பார்க்கும் லெதர் ஜாக்கெட் போட்ட ‘நல்லவனுக்கு நல்லவன்’ ரஜினி, தூக்கி வாரி மூக்கை சுழித்து வாயைத் திறந்து மேனரிசம் காட்டும் ‘காதல் பரிசு’ கமலஹாசன், நெடுநெடுவென ‘மக்கள் என் பக்கம்’ சத்யராஜ், 32 பல்லும் தெரிவது போல் வாயைத் திறந்து சிரிக்கும் ‘ஒரு தாயின் சபதம்’ டி ராஜேந்தர், ‘இதயக்கனி’ எம் ஜி ஆர், வெள்ளைத் தொப்பி வெள்ளை சட்டை மேல் வாட்ச் கட்டி வணங்கும் முதல்வர் எம்ஜியார்,
மஞ்சள் துண்டு செண்டிமெண்ட் இல்லாத நடு வகிடும் நிறைய முடியும் கொண்ட அப்போதைய கலைஞர், கட்டை பேனா கொண்டு எழுதும் கலைஞர், அம்பிகா, ராதா, நதியா என படங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். பள்ளி முடிந்து ஒன் வே ட்ராஃபிக் வழியே போகும் மாணவர்கள் கூட பொங்கல் வாழ்த்தை வேடிக்கை பார்க்க கடைவீதி வழியே வருவர்.

15 காசுக்கு அட்டையும், 50 காசுக்கு உறையில் வைத்து அனுப்பும் வண்ணம் நான்கு பக்கங்கள் கொண்ட தடித்த அட்டை பொங்கல் வாழ்த்துகளும் கிடைக்கும். வகுப்பு தோழர்களின் முகவரி வாங்கி ‘சர்ப்ரைஸ்’ என்ற பெயரில் அனுப்பிக் கொள்வோம்.

செட்டித் தெரு ராகவன் வாத்தியார் பையன் சுவாமிநாதனுக்கு குறியாமங்கலம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து நான் உற்சாக மிகுதியில் மறந்து ஸ்டாம்ப் ஒட்டாமல் பொங்கல் வாழ்த்து அனுப்ப, அதற்கு புவனகிரியில் ராகவன் வாத்தியார் மூன்று ரூபாய் அபராதம் கட்டி அதை வாங்க என கதைகள் உண்டு. பின்னர் அவர் சொல்லியே எனக்கு தெரிய வந்த அவ்வயது அவமானம் அது.

பொங்கல் வாழ்த்து அஞ்சலில் அனுப்பிய அந்நாளைய மாணவர்களையே புவனகிரி பள்ளியின் பழைய மாணவர்கள் என்று சொன்னேன்.

புவனகிரிப் பள்ளியின் இதயம்:

சுத்துக்குழி, பூதவராயன் பேட்டை, கீரப்பாளையம், பெருமாத்தூர், மஞ்சக்குழி, சித்தேரி, மேல குறியாமங்கலம், கீழ்புவனகிரி, மேல்புவனகிரி, ஆலம்பாடி, உடையூர், வண்டுராயன்பட்டு, வத்தராயன்தெத்து, ஆதிவராகநல்லூர், கரைமேடு, குமராட்சி என பல ஊர்களின் பள்ளிகளில் ஐந்தாவது முடித்து விட்டு ஆறாம் வகுப்பு படிக்க புவனகிரி வரும் மாணவர்களுக்கும் சரி, ஒரத்தூர், ஆயிபுரம், அம்பாபுரம், சாத்தப்பாடி போன்ற ஊர்களிலிருந்து எட்டாவது முடித்து விட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கும் சரி, ‘ஆ…!’ என்று வாய் பிளந்து அசந்து நிற்க வைக்கும் சங்கதி… புவனகிரி பள்ளியின் ‘கிரண்வுண்ட்’ விளையாட்டு மைதானம் ( ‘Jaw dropping experience at first sight by its huge size for that age’)

கல்கி ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் தொடக்க அத்தியாயத்தில் கடல் போல பரந்த வீராணம் ஏரி என்று சொல்வாரே, அந்த அனுபவமே அந்த வயதில் அவ்வளவு பெரிய பரந்த பச்சைப் பசேல் திடலைப் பார்த்தும் தோன்றும் புதிதாய் புவனகிரி பள்ளியில் சேரும் மாணருக்கு.

புவனைப் பள்ளியின் இதயம் அந்த விளையாட்டுத் திடலே. சில கட்டிடங்களும் பெரிய திடலுமே பள்ளியைப் பற்றிய காட்சியாக பதிந்திருக்கும் உறைந்திருக்கும் இன்றும் மாணவர்களின் மனதில்.

‘க்ரவுண்ட்’டின் வடக்கே அறிவியல் ஆய்வுக் கூடமும் தெற்கே புவனகிரி விருதாச்சலம் சாலையும் கிழக்கே வெக்கேஷனல் மெசினிஸ்ட் லேப் கட்டிமும் சில மரங்களும் மேற்கே ஒரு பனைமரம் ஒரு தூங்கு மூஞ்சி மரம் அதையடுத்து ஷட்டில் / டென்னிஸ் ஆடும் கோர்ட் ஆகியன எல்லைகளாக இருந்தன. வடகிழக்கே சென்ற பதிவில் குறிப்பிட்ட புவனகிரி குன்று, வடமேற்கே புதர்களும் முள் மரங்களும் நிறைந்த காடு.

இப்போது போல இத்தனை அரண்கள் இல்லை புவனகிரி பள்ளிக்கு அன்று. எந்தப் பக்கத்திலிருந்தும் பள்ளிக்குள் வரலாம். கிழக்கே மாட்டு ஆஸ்பத்திரி பக்கத்திலிருந்து, வடமேற்கே மானம்பாத்தான் வாய்க்கால் பக்கத்திலிருந்து, தென் மேற்கே ‘எலந்த மி்ட்டாய்’ விற்கும் கிழவியின் குடிசை வீட்டுப் பக்கத்திலிருந்து, பெரிய ஆலமரத்தை ஒட்டி இருக்கும் முன் பக்க முதன்மை வாசலிலிருந்து என எல்லாப்பக்கங்களிலிருந்தும் பள்ளிக்குள் வரலாம். ( ஆமாம், இப்போதிருக்கும் மதில் சுவரும் அப்போது இல்லை. இப்போதிருக்கும் இடத்தில் அப்போது இந்த வாசலும் இல்லை. வடகிழக்கு மூலையில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது, (வக்கீல் செல்வராஜ் வீட்டுப்பக்கம்!) அதையொட்டி வாசல் இருந்தது. வாசலுக்கு வெளியே அவித்த சோளம், ‘தேன்காதலி’ ஐஸ், சிலோன் பரோட்டா, எலந்தம் அடை,மிட்டாய் வகையறாக்களை இரண்டு பக்கமும் விற்பார்கள்)

பள்ளியின் ‘க்ரவுண்ட்’ மாணவர்களின் தாய்மடி. தெரியாமல் செருப்பில்லாமல் நடந்தவன் செத்தான்! க்ரவுண்ட் முழுங்க நெருஞ்சி செடிகள் மஞ்சள் பூ பூத்து நெருஞ்சி முட்களை நிரப்பி வைத்திருக்கும். முள் குத்தி முள் குத்தி, சில ஆண்டுகளில் நெருஞ்சி முள் குத்தினால் காலை எப்படி வாகாக வைத்து எடுத்து நடக்க வேண்டும் என்று பழகி கற்றுவிடுவார்கள் புவனகிரிப் பள்ளிப் பிள்ளைகள்.

‘பரமா… மறக்கவே முடியாது பரமா! டென்த் பப்ளிக் எக்ஸாமுக்கு மூணு நாள் முன்னால, க்ரவுண்டல உட்கார்ந்து அப்ப வந்த ஒரு கமல் படத்தை விவரிச்சி கதை சொல்லிட்டு இருந்த நீ! பரமகுரு,பாலசரவணன், நான், பாலு எல்லாம் அப்படியே மெய்மறந்து கேட்டுட்டு இருந்தோம்!’ என்று பத்து நாட்கள் முன்பு நினைவு கூர்ந்தான் தற்போது சேத்தியாதோப்பில் போலீஸாக பணிபுரியும் ராஜாராமன் ( ‘நானும் ஒரு தொழிலாளி’ – புவனகிரி ஆபிதா வீடியோ விஷனி்ல் பார்த்தது) (இப்பயும் அதே வேலைதான் பாக்கறேன் ராஜாராமா. தினமலர்லயும் பத்திரிக்கைகளிலும் சினிமா விமர்சனம்தான் எழுதறேன்! 🙂 )

இப்படி பல மாணவர்களின் முக்கியப் பொழுதுகள் நிகழ்ந்தது இந்தக் ‘க்ரவுண்ட்’டில்தான்.

இயன் ஃப்ளெமிங்கின் சூப்பர் ஸ்டைல் ஹீரோ ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ‘மேடம் எம்’ ‘ஆஸ்டன் மார்ட்டின்’ ‘பழைய பிம்எம்டபிள்யூ’ வித்தியாச உபகரணங்கள், அநாயாச சாகசங்கள் என பல பின்ணணிகள் எங்களுக்குப் புரிவதற்கு அந்நாளைய ராணி காமிக்ஸ் புத்தகங்கள் ஒரு காரணம். இமாம்பாஷா கடையில் வாங்கி வந்து அவற்றை கும்பல் கும்பலாக நாங்கள் படித்தது புவனகிரிப் பள்ளியின் க்ரவுண்டில்தான். (மாணவர்கள் சுற்றியமர உணர்ச்சியோடு கதை படித்து சொல்லும் வாய்ப்பை நான் பெற்றேன் அந்நாட்களில். பிடி வாத்தியார் பையன் ராஜாராமனோ, எலை கடை சங்கரோ, ரோட் இன்ஸ்பெக்டர் மகன் ஏ கே ஸ்ரீனிவாசனோ கதைப்புத்தகம் வாங்கி வருவார்கள். அம்மாவை ஏமாற்றி காசு வாங்கி நான் காமிக்ஸ் வாங்கியதும் உண்டு) ரகசிய ஏஜெண்ட் 007 துப்பறியும், இன்ஸ்பெக்டர் ஆசாத் துப்பறியும், இரும்புக் கை மாயாவி தோன்றும் என அந்நாளைய படக்கதைகள் புவனகிரியில் உட்கார்ந்திருந்த எங்களை உலகத்திற்கு திறந்து விட்டன.

இன்றும் ஏதோவொரு தேசத்தில் பியர்ஸ் ப்ராஸ்ன்னை, டேனியல் க்ரெயிக்கை (அடுத்த ஆண்டு வரப் போகும் புது ஜேம்ஸ் பாண்ட்டை) என எந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை பார்த்தாலும் நினைவின் ஒரு மூலையில் புவனகிரிப் பள்ளியின் நினைவு வந்தே செல்லும்.

மாணவர்களின் நட்பு நெகிழ்வான தருணங்கள், அடித்துக்கொண்டு மூஞ்சை பேத்துக் கொள்ளும் சட்டை பித்தான்கள் உதிர்ந்து பறக்க சண்டை போடும் ‘எனிமி’ தருணங்கள், ‘பாய் வாத்தியார் – மீசை கள்ளக்கடத்தல் பாஸ் கதை’ தருணங்கள், முள் குத்தாமல் இருக்க செருப்பை கழற்றி விட்டு அமர்ந்து மதிய உணவான தயிர்சாதம் ஊறுகாய் உண்ட தருணங்கள் என எல்லா முக்கிய தருணங்களும் நிகழ்ந்தது பள்ளியின் ‘க்ரவுண்ட்’டாகவே இருக்கும். ஆமாம்… விளையாட்டைத் தவிர அதிகமாக மற்ற எல்லாம் நடக்கும் விளையாட்டுத் திடலில்.

அவ்வளவு பெரிய க்ரவுண்ட் இல்லை இன்று. பள்ளியின் இதயம்… தன் இதயத்தில் இடம் தந்து விட்டது பலவற்றுக்கு. க்ரவுண்டில் பாதியை எடுத்து பெண்கள் பள்ளியை கட்டி விட்டார்கள். கொஞ்சம் எடுத்து மாணவர் விடுதி கட்டிவிட்டார்கள். பழைய கட்டிடங்கள் பலவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி அவையும் இன்று பழசாகி நிற்கின்றன.

புவனகிரி பள்ளியின் அந்த விளையாட்டுத் திடல் ‘க்ரவுண்ட்’ அளவில் சுருங்கி சிறிதானாலும், இன்னும் பசுமையாக, அதே நெருஞ்சி முள்ளோடு இருக்கிறது, நம்முள் பதிந்திருப்பது போலவே!

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    14.11.2021

#Bhuvanagiri

#GovtBoysHigherSecSchool

#BhuvanagiriSchool

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *