‘அண்ணாத்த’ : திரை விமரசனம்: பரமன் பச்சைமுத்து

wp-1637256468265.jpg

முன்குறிப்பு 1:

தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள், சென்னைப் பெருமழை என பல காரணங்களால் திரைப்படங்கள் பார்ப்பது பின் வரிசைக்குப் போய் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ இரண்டும் பார்க்க முடியாமல் போனது.

இப்போதுதான் ‘அண்ணாத்த’ படத்தை பார்க்க முடிந்தது. இத்தனை நாளுக்குப் பிறகு இனி திரைவிமர்சனம் எதற்கு என்றிருந்த என்னிடம் தொடர்ந்து ‘உங்கள் கருத்து வேண்டும்’ என்று திரைத்துறையின் சிலர் கேட்டுக் கொண்டேயிருந்ததால், சரியென்று எழுதுகிறேன்.

முன்குறிப்பு 2:

‘அண்ணாத்த’ படம் சரியில்லை என்று ஒருபுறம் கருத்துகள் வருகின்றன, முதல் வாரமே இவ்வளவு கோடி வசூல் என்று அறிக்கைகள் வருகின்றன மறுபுறம். இந்நிலையில் இதை எழுதுகிறோம்.

‘அண்ணாத்த’ திரை விமர்சனத்தை இரண்டு பகுதிகளாக சொல்லலாம்.

….

1.எழுபது வயதில் இத்தனை கோடி பொருட்செலவில் உருவான படத்தை, எதிர்பார்ப்பை, வணிகத்தை தோளில் தூக்கி நிற்கும் ரஜினியை கண்டு வியக்காமல் இருக்கவே முடியவில்லை. சிறப்பான சிகையலங்காரம், சிறப்பான ஒப்பனை, சிறப்பான உடை, ஃபுல் எனர்ஜி என துள்ளலோடு மொத்தப் படத்தையும் சுமந்து நிற்கிறார். 

கண்களில் சோர்வு, குரல் லேசாக மாறியிருக்கிறது என்பதைத் தாண்டி அதே வேகம், அதே மூச்சில் பேசும் வசனங்கள் என ரஜினி ரஜினியாகவே.  ‘பெரிய வசனங்கள் இருக்காது, இருந்தால் மூச்சு திணறலாம்!’ என்ற எண்ணத்தில் உட்கார்ந்த எனக்கு பிரகாஷ்ராஜ்ஜோடு் மோதும் காட்சியின் வசனங்களிலேயே ‘வேகமும் பெரிதாகக் குறையவில்லை, மூச்சும் அதே அளவு!’ என்று புரிந்தது.

2. அண்ணன் தங்கை கதை என்று எடுத்த முடிவில் தவறில்லை. கதையில் வரும் சில திருப்பங்கள் கூட நன்றுதான் என்றாலும் இரண்டாம் பாதி பழைய காலத்துப் படம் போல நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது.  தங்கைக்காக அண்ணன் செய்வது என்பதே ‘பேட்ட’ படத்தின் ஒற்றை வரிக்கதை. அதை அவர்கள் கொடுத்த விதம் எலக்ட்ரிக் ஷாக் போல.  பொக்ரான் அணுகுண்டை எதிர்பார்த்த ரசிகனுக்கு ஊசி வெடியாக வெடிக்கிறது ‘அண்ணாத்த’.

அன்றைய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை இன்றைக்கு ஏற்ப விஜய்யை வைத்து எடுத்து அட்லீ கொடுக்கும் போது, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தருவதைப்போலவே ‘அண்ணாத்த’ என்று தருவது சரியில்லை.

உடல் எடை குறைத்த ஒல்லியான கீர்த்தி சுரேஷ் தன் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ், அபிமன்யூ சிங், ஜகபதிபாபு என 3 வில்லன்கள், கீர்த்தி சுரேஷ், நயன் என பட்டாளங்கள்.  குஷ்பு, மீனா பகுதிகளை கத்தரிக்கலாம். சூரி தேவையானதை தந்தார்.  நயன் ஹீரோயின் வேண்டுமேயென்ற விதிப்படி.

ராஜமௌலியின் தெலுங்கு ‘விக்ரமார்குடு’வை தமிழில் ‘சிறுத்தை’யாக மாற்றும் போது கொண்டு வந்த அந்த வில்லன் பாத்திர தோற்றம் சூழல் எல்லாம் ஆழமாக உள்ளது போல இயக்குநரிடம். இந்தப் படத்தில் ஜகபதிபாபு வரை அதைக் கொண்டு வந்து விட்டார்.

திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினியே கிடைக்கும் போது அவரை வைத்துக் கொண்டு எப்படி ஒரு படம் தந்திருக்க வேண்டும்! தவறி விட்டார் சிவா.

முதல் பாதி சரியாகப் போகிறது. இரண்டாம் பாதி தளர்வு.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘அண்ணாத்த’ : பதினைந்து வருஷத்து முந்தைய பழைய மாவில் பழைய எண்ணெய்யில் செய்த பஜ்ஜி. ரஜினி என்னும் சூடு ஓரளவு காக்கிறது. ரஜினிக்காக பார்க்கலாம்.

– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *