புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

8

புவனகிரி – பள்ளி : ப்ரேயர் திடல்

(புவனகிரி பள்ளியின் இதயமான ‘க்ரவுண்ட்’ பற்றிய நம் முந்தைய பதிவைப் படித்து விட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியரும் முனைவருமான சரவணன் (புவனகிரி பள்ளி மாணவர்) தமது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார்.

முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘அசோக மரமும் பச்சைப் பைப்பும்’ பதிவைப் படித்துவிட்டு, ‘பரமா, அப்ப பைப்படியில நடந்த ‘கப்’ சண்டை எல்லாமே ஒரு படம் மாதிரி மனசில ஓடிச்சு படிக்கும் போது. கப் சண்டையில சீனியர் மாணவன் ஒருத்தன பாலசரவணன் அடிச்சிட, அதனால ஹெச்எம் ரூம்ல போய் அப்பாவோட நின்னதுல்லாம் நினைவுக்கு வந்தது பரமன்!’ என்று அழைத்துப் பகிர்ந்தார் சேத்தியாதோப்பு காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ராஜாராமன். )

8

அந்நாளைய புவனகிரி பள்ளியைப் பற்றி சொல்லும் போது, புவனகிரியின் இரண்டு அல்லது சில கடைகளைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

புவனகிரி காவல் நிலையத்திற்கும், ரங்கராஜா திரையரங்கத்திற்கும் அருகிலிருந்து ‘ஊஊஊஊஊ’ என்று ஒலிக்கும் ‘சங்கு’ எப்படி சுற்றியுள்ள ஊர்களில் புகழ்பெற்றிருந்ததோ, அதேயளவு இந்தக் கடைகளும் அந்நாளில் புகழ்பெற்றவையே. அந்தக் கடைகள் –
புவனகிரி கடைத்தெருவில் இருந்த ஆசியா சைக்கிள் மார்ட்டும், பழைய இந்தியன் வங்கிக்கு எதிரில் இருந்த சின்னையன் அவர்களின் கடையும்.

கடைத்தெருவில் புவனகிரி மெடிக்கல்ஸுக்கு எதிரில் இருந்தது ஆசியா சைக்கிள் மார்ட். கடைத் தெரு முடிந்து காவல் நிலையம், இந்தியன் வங்கி தாண்டி, இரா அன்பழகன் சார் அப்போது நடத்திய ‘நியூ டுடோரியல் சென்டர்'(என்டிசி) கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்தது சின்னையன் அவர்களின் சைக்கிள் ரிப்பேர் கடை.

சில நூறு ரூபாய்களில் புது சைக்கிள் பூட்ட ஆசியா சைக்கிள் மார்ட், சைக்கிளில் எந்தப் பிரச்சினையென்றாலும் கழற்றி தலைகீழாக மாற்றி சரி செய்ய சின்னையன் கடை என்றிருந்தது அப்போது. மழை, பனி, வெய்யில் என எல்லாப் பருவங்களிலும் சிறப்பாக இயங்கின இந்தக் கடைகள். காரணம் விளங்கியிருக்கும் உங்களுக்கு. உள்ளூர் என்றால் நடை, சைக்கிள், வெளியூரென்றால் பேருந்துப் பயணம் என்பதே பெருவாரியான வாழ்வு முறை அப்போது. இருசக்கர வாகனங்கள் வைத்திருந்தோர் மிகக் குறைவு.

மூங்கிலடி ராதா, சின்ன மணக்குடி தில்லை கோவிந்தன் போன்றோருக்கு ‘தட் தட் தட்’ என்று வரும் ராயல் என்ஃபீல்டு வண்டியே அவர்களது அடையாளம். டிவிஎஸ் 50, யமஹா ஆர் எக்ஸ் 100, ராஜ்தூத் என பைக் வைத்திருந்தோர் மிக மிகக் குறைவே. மகாலிங்கம் செட்டியாரும், ஏசிஎஸ் செட்டியாருமே ஸ்கூட்டரில்தான் தங்களது வயல்களுக்குப் போனார்கள் அப்போது. சைக்கிள் பயன்பாடே மிகுந்திருந்தது அந்நாட்களில்.

அந்நாளைய புவனகிரிப் பள்ளியிலும் இது எதிரொலித்தது.
தெற்குத் திட்டை, வடக்குத்திட்டை, சித்தேரி, மேல குறியாமங்கலம், குறியாமங்கலம், ஆயிபுரம், கீழ மணக்குடி, சாத்தப்பாடி, பூதவராயன்பேட்டை, பெருமாத்தூர், சொக்கன்கொல்லை, சுத்துக்குழி, கீரப்பாளையம், வயலூர், மணலூர், ஆதிவராகநல்லூர், ஆலம்பாடி, உடையூர், வண்டுராயன்பட்டு, வத்தராயன்தெத்து, அம்பாவரம், மஞ்சக்குழி, மேல மணக்குடி, மணவெளி, கரைமேடு, எண்ணாவரம், குமராட்சி, பூவாலை என சுத்துப்பட்டு ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் தொன்னூற்றியைந்து சதவீதம் பேர் எதிர்காற்று தள்ளுக்காற்று என சைக்கிள் மிதித்து வருபவர்களே.

( ‘ஏடி ஐயா’ எனப்படும் தனுஷ்கோடி வாத்தியார், ‘டிஜே’ எனப்படும் ஜெயராமன் ஐயா, ஆர்கே வாத்தியார் போன்றோரும் சைக்கிள் பயணிகளே. ஜனார்த்தனன் சார், நக்கீரன், தமிழ்மணி டீச்சர், சாந்தா டீச்சர் போன்ற சிதம்பரத்திலிருந்து வருவோர் பேருந்தில் வருவர்

கிட்டத்தட்ட மாணவர்கள் எல்லாருக்கும் சைக்கிள் பஞ்சர் ஒட்டத் தெரியும், மூன்று வீடுகளுக்கு ஒரு வீட்டில் பஞ்சர் ஒட்டும் ‘பேரமவுண்ட் சொல்யூஷன்’, வீலிலிருந்து டயர் கழட்டப் பயன்படுத்தும் ‘டயர் லீவர்’, காற்றடிக்கும் சைக்கிள் பம்ப் இருந்திருக்கும் என்று சொல்லலாம். )

புவனகிரிப் பள்ளியின் அப்போதைய வாயில் வக்கீல் செல்வராஜ் வீடு இருக்கும் தென்கிழக்கு பக்கம் பெரிய ஆலமரத்தினருகில் இருந்தது. ( இப்போது அது அடைக்கப்பட்டு, சுற்றுசுவர் எழுப்பப்பட்டு கொடிமரத்திற்கு நேராக மத்தியில் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஏவிசிசியில் எனக்கு சீனியரான சிவில் இஞ்சினியர் சரவணன் மற்றும் தோழர்கள் சேர்ந்து (‘புவனகிரி பால்ய நண்பர்கள்’) இந்தப் புனரைப்புப் பணியை பள்ளிக்கு செய்துள்ளனர்)

உள்ளே நுழைந்தால் வலப்பக்கம் பதினோறாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு நடைபெறும் தரைதளம் மட்டும் கொண்ட கட்டிடம். அதற்கு எதிரில் உள்ள திடலான மணல்வெளி பள்ளியின் காலை ப்ரேயர் நடக்குமிடம். அன்று ‘யானைக்காய்’ மரம் என்றும்,
இன்று ‘ஃபாரஸ்ட் ஃபயர்’ என்று புரிந்து கொள்ளப்படும் சிவப்புப் பூக்கள் பூக்கும் பெருமரங்களால் எப்போதும் நிழலாக இருக்கும் அந்த இடம். நடுவில் தேசியக் கொடியேற்ற கொடிமரம். கொடிமரத்தை ஒட்டி வடக்கே பள்ளியின் முக்கிய (மாடி)கட்டிடம்.
மேற்கே சிமெண்ட் தரையும் கீற்றுக் கூரையும் கொண்ட வகுப்பறைகள் கட்டிடம்.

முக்கியக் கட்டிடத்தின் சுவரையும், கீற்றுக் கூரைக் கட்டிடத்தி்ன் சுவரையும் ஒட்டி ‘ட’வை கவிழ்த்துப் போட்டதைப் போன்ற வரிசையாக சைக்கிள்கள் நிறுத்தப்படும். ஹீரோ, அட்லஸ் சைக்கிள்கள் அதிக அளவிலும், பழைய ராலே சைக்கிள்கள் சிலவும், ‘அவோன்’ ‘பிஎஸ்ஏ’ போன்ற சிறிய சைக்கிள்கள் ஒன்றிரண்டும் என சைக்கிள்கள் நிறைந்திருக்கும்.
அத்தனை பேர் படித்த அவ்வளவு பெரிய பள்ளியில் அப்போது யாரிடமும் ‘பைக்’ இல்லை. டிவிஎஸ் 50, ஹீரோ புக் என வாகனத்துறை வளரத் தொடங்கிய காலமது. எல்லோரும் சைக்கிள்தான்.

சைக்கிள் நிறுத்தியது போக மீதியிருக்கும் இடத்தில் காலை ‘ப்ரேயர்’ நடக்கும். ஒருவர் பின் ஒருவர் என வரிசை வரிசையாக நிற்கும் மாணவர்களுக்கு முன்பு கொடி மரம். அதன் அருகில் ‘அட்டென்ஷன்’ ‘ஸ்டேண்ட் அட் ஈஸ்’ என சத்தமாக கத்தியும் கூடவே செய்து காட்டவும் ஒரு மாணவன், அவனுக்கு கிழக்கே அந்த ப்ரேயரை நடத்தும் தலைமையாசிரியர் (அப்போது – விகேகே எனப்படும் விகே கலியபெருமாள் இருந்தார்), கொஞ்சம் தூரத்தில் பிடி வாத்தியார் கீரப்பாளையம் நாராயணன் சார், வலது ஓரத்தில் ‘ஸ்டிரிக்ட்’ என்சிசி வாத்தியார் என ஒரு அமைப்பு இருக்கும்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தலைப்புச் செய்திகள், ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று சொல்லப்படும் உறுதிமொழி, சில வேளைகளில் தலைமையாசிரியரின் அறிவிப்பு, நாட்டுப்பண் என நிறையும் காலை ப்ரேயர். திடீரென்று என்சிசி வாத்தியார் ஒரு முரசைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ‘இத்தனை நிமிஷத்தில பாடுனாத்தான் அது தேசிய கீதம்!’ என்று சொல்லி ‘டம் டம் டம டம’ என்று தாளத்தோடு ‘ஜனகன மன கதி…’ பாட வைத்து சுவையூட்டுகிறாரென்றால், அடுத்த சில நாட்களில் பள்ளியில் ஏதோ விழா யாரோ பெரிய மனிதர்கள் வருகிறார்கள் என்று பொருள்.

ப்ரேயர் முடிந்தவுடன் தெறித்து வகுப்புகள் நோக்கி ஓடுதல் நடைபெறும். சட்டையின் பின்புறம் ‘இங்க்’ அடித்து விடுவதும் நடைபெறும்.

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    22.11.2021
    [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *