9. புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:

*9*

*புவனகிரி பள்ளி – ஸ்கூல் பெல்:*

( சென்ற பதிவை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் (புவனகிரி நாராயண ஐயர் ஹோட்டல்) தனது பள்ளி நாட்களை திரும்ப வாழ்ந்ததாகவும் அவரது நண்பரகள் பதிவை படித்து மகிழ்ந்ததாகவும் குரல் பதிவு அனுப்பியிருந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் சரவணன் மகிழ்ந்து எழுதியிருந்தார்.  ‘பரமன்… புவனகிரி பள்ளி ப்ரேயர்ல அப்பல்லாம் நாந்தான் தலைப்புச் செய்திகள் வாசிப்பேன். ‘மாணவனைத் திட்டிய ஆசிரியருக்கு கத்தி குத்து’ என்ற செய்தியை நான் ப்ரேயரில் படிக்க, சலசலப்பு ஆனது. ‘இனி தெனம் செய்தியை என கிட்ட படிச்சி காட்டிட்டுத்தான் ப்ரேயர்ல படிக்கனும்’ என்று ஹெச்எம் விகேகே கோபமாக சொன்னார்!’ என்று நினைவு கூர்ந்து குறிப்பிட்டிருந்தார் )

….

*9*

‘*ஸ்கூல் பெல்*

‘பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை’ பாடலில் ‘பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பார். புவனகிரிப் பள்ளி மாணவர்களை அவருக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் வேறு மாதிரி எழுதியிருப்பார்.

தொடர் விடுமுறையின் போது பள்ளி பற்றிய நினைப்பாகவும், பள்ளி திறந்தால் விடுமுறை விட்டால் நன்றாக இருக்கும் என்றே கனவாகவும் திரியும் எல்லா மாணவர்களைப் போலத்தான் புவனகிரி பள்ளி மாணவர்களும்.  எந்த நிலையில் எந்த வேலையில் இருந்தாலும் மாணவர்களை ஒரே நொடியில் விழிப்புணர்வுக்கு உயிர்ப்பித்துக் கொண்டு வரும் ஒரு மாயக் கருவி – பள்ளியின் ‘டொய்ன்ங் டொய்ன்ங்’ மணி.

முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்ததைப் போல, தலைமையாசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து மேற்கு நோக்கி நடந்தால் மாடிப்படிக்கு முன்பு வலது பக்கம் வரும் அசோக மரத்தினருகில் ‘ஸ்கூல் பெல்’ கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். ( படியை அடுத்த இரண்டாவது அசோக மரத்தினடியில்தான் தண்ணீர் குடிப்பதற்கான பச்சை பைப்பு)

பள்ளிக்கு வந்து
காலை ‘ப்ரேயர்’ வரட்டுமென வகுப்புக்குப் போகாமல் ‘க்ரவுண்ட்’டில் உட்கார்ந்து ‘விக்ரம்’ ‘வேலைக்காரன்’ ‘ஒரு தாயின் சபதம்’ ‘சங்கர் குரு’ கதைகளை பேசும் மாணவர்களை அழைக்கும் ‘ப்ரேயர் பெல்’, ஒவ்வொரு ‘பீரியட்’ முடியும் போதும் அடிக்கப்படும் ‘பீரியட் பெல்’, முதல் பாதி நாள் முடிவடைவதை உணர்த்தும் ‘மதிய உணவு பெல்’, இரண்டாம் பாதி தொடங்குவதை உணர்த்தும் பெல், பள்ளி முடிவடைவதை உணர்த்தும் ‘கடைசி பெல்’ என பல விதமான மணிகளை ஒவ்வொரு நாளும் கேட்டுகேட்டு மாணவர்கள் பழகிக் கொள்வார்கள்.  மீசை மழிக்கப்பட்டும் ‘சதுரவட்டை க்ராப்’ போல சிகை அமைப்பும் கொண்ட அந்த பெல் அடிக்கும் ‘ப்யூன்’ மனிதரை பள்ளியின் எல்லா மாணவர்களுக்குமே தெரிந்திருக்கும்.

ஒரு நாளும் இல்லாத திருநாளாக மதிய பெல்லின் தடதடவென அடுத்தடுத்து வேகமாக வராமல் ‘டொய்ன்ங் டொய்ன்ங்’ என மெதுவாக வந்தால், ஒரே நேரத்தில் மொத்த பள்ளி மாணவர்களும் வானைப் பிளக்கும் அளவிற்கு ‘ஓ…ஊஊஊஊ!’ என்று மகிழ்ச்சியில் ஊளையிடுவார்கள். அந்த மணிக்கு ‘அன்று அரை நாள்தான் பள்ளி’ என்று பொருள்.

முதன் முதலில் அது நடந்தது இன்னும் நினைவில் பசுமையாக. முதல் இரண்டு பீரியட்கள் முடிந்து சில நிமிடம் இடைவேளை, கழிப்பறை போக பள்ளிக்கு வெளியே அவித்த சோளம், எலந்த அடை, வற்றல், தேன் மிட்டாய் வாங்க என எல்லாவற்றையும் முடித்து விட்டு அடுத்த பெல் அடிப்பதற்குள் திரும்ப வந்துவிடுவார்கள் மாணவர்கள்.
முதல் பீரியட் முடிந்து இரண்டாம் பீரியட் தொடங்கிய சில நிமிடங்களில் ‘டொய்ங்க் டொய்ங்க்’ என அந்த ‘சந்தோஷ சங்கீதம்’ காதில் பாய்ந்தது.  பள்ளிக்கு வெளியே கருப்பு சட்டையணிந்து திராவிடர் கழகத்தினரும், திமுகவினரும் பெருந்திரளாய். ‘இலங்கைத் தமிழர்களை ஆதரித்து கடையடைப்பு போராட்டம் பேரணி’ என்றார்கள்.  ரொட்டி கம்பெனி நடத்துபவரின் மகனான ‘பன்னு ராமலிங்கம்’தான் பள்ளிக்குள் புகுந்து அப்படி பெல்லை அடித்ததாம். 

‘அரைநாள் லீவு!’ என்று மகிழ்ச்சி உற்சாகம் குபீரெனக் கொப்பளிக்க பிய்த்துக் கொண்டு தெறித்து ஓடினோம் மாணவர்கள் நாங்கள். இலங்கை – தமிழீழம் – வடக்கு மாகாணம் – தம்பி பிரபாகரன் – விடுதலைப்புலிகள் என எதுவும் தெரியாத அவ்வயதில் ‘இலங்கை தமிழர் பிரச்சினை’ என்று முதன்முதலில் எங்களுக்கு கொண்டு வந்தது புவனகிரி ஸ்கூல் பெல்தான்.  இலங்கைக்கே போய் பம்பலப்பிட்டிய, நாவலப்பிட்டிய போன்ற ஊர்களிலும் கொழும்புவிலும் இலங்கைத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு மலர்ச்சி வகுப்புகள் எல்லாம் இன்று எடுத்தாலும், முதன்முதலில் இலங்கை தமிழர் என்ற உணர்வு புவனகிரி பள்ளி பெல் வழியேதான் வந்தடைந்தது என்னை.

இன்னுமொரு முறை இதே மாதிரி அரை நாள் விடுமுறை சொல்லி ‘டொய்ன்ங் டொய்ன்ங்’ என்று மணியடித்தல் நடக்கும். அதைப் பற்றி சொல்வதற்கு முன் புவனகிரியின் பாரம்பரியமும் பின்பற்றப்படும் வழக்கம் ஒன்றும் சொல்லப்பட வேண்டும்.

….

ஒவ்வொரு முறை தீயசக்தி பெரும் உருவெடுத்து உலகை துன்புறுத்தும் போதெல்லாம், திருமால் ஓர் அவதாரமெடுத்து வந்து உலகைக் காப்பதாக வைணவம் சொல்லுகிறது. யுகங்களில் நடக்கும் இந்த பத்து அவதாரங்களில் ஒன்றாக கூர்மையான பன்றியின் முகம் கொண்டு பெருவெளியைத் தோண்டிக் கிழித்துக் கொண்டு போய் அடியாழத்திலிருந்து பூமிப்பந்தைக் காப்பாற்றி தூக்கி வந்த அவதாரமாக வராக அவதாரத்தை கருதித் துதிப்பர். கடலூர் மாவட்டத்தில் ‘திருமுட்டம்’ என்று திருப்புகழிலும் பதிகங்களிலும் குறிப்பிடப்படும் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் இந்த வராக வடிவில் இருக்கும் பெருமாளை பூவராகவர் என்றும் பேச்சு வழக்கில் பூராயர் என்றும் போற்றி வழிபடுவர்.

இஸ்லாமிய சமுதாயத்தினரும் மதிக்கும் வரலாறு கொண்ட இந்த பூராயர் பெருமாள் மாசி மாசம் திருமுட்டத்திலிருந்து நீண்ட தூரம் பயணித்து  தீர்த்தவாரிக்காக கிள்ளை வரை வருவார்.   தீர்த்தவாரியை முடித்துக் கொண்ட பெருமாள் காலகாலமாக புவனகிரி வருவார், வருகிறார். ‘பூராயர் திருஷா’ என்றும் ‘பூராயர் திருவிழா’ என்றும் வட்டார வழக்கில் சொல்லப்படும் இந்த நிகழ்வு அந்நாட்களில் பெரும் விழாவாக கொண்டாடப்படும்.

புவனகிரிக்கு வரும் பூவராக பெருமாள், அக்ரகாரத்தில் எழுந்தருளி, பிறகு ஆரிய வைசிய மண்டத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிப்பார்.  மொத்த புவனகிரியும் விழாக்கோலம் பூணும்.

குழந்தைகளுக்கு குடை ராட்டினம், தீப்பந்த வெளிச்சத்தில் வாழைப்பழ சீப்பு ஏலம், வளையத்தை எறிந்து பொருளை கைப்பற்றும் ஆட்டம், குழந்தைகளுக்கான பொம்மைகள் கடை, சோப்பு – சீப்பு – கண்ணாடி – வளையல் கடை, பரங்கிப்பேட்டை அன்சாரி அல்வா, ஊதாங்குழல், கிளுகிளுப்பை, கடல் சிப்பி, பாசிமணி கடை, துப்பாக்கியால் குறிபார்த்து பலூன் சுடும் கடை என வெளியூரிலிருந்தெல்லாம் வணிகர்கள் வந்து
புவனகிரி வெள்ளாற்று பாலம் தொடங்கி ரெங்கராஜா திரையரங்கு காவல் நிலையம் வரை கடை போட்டிருப்பார்கள்.  சுற்றுப்பட்டு கிராம மக்களும் உள்ளூர் மக்களும் என புவனகிரியையே பூராயர் திருவிழா ஒரு குலுக்கு குலுக்கும்.

புவனகிரிக்குப் பூராயர் வரும் அந்த நாளன்று புவனகிரிப் பள்ளியில் மாணவர்கள் விரும்பும் அந்த ‘சந்தோஷ சங்கீதம்’ ‘டொய்ன்ங் டொங்ன்ங்’ பெல் அடிக்கும்.

மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய பீரியடிலேயே அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியருக்கு, ப்யூன் சர்க்குலர் கொண்டு வருவார், ‘பூவராய பெருமாள் விழாவை முன்னிட்டு அரை நாள் விடுமுறை’ என்று. ஆசிரியர் படித்துக் கையெழுத்திடுவதை வைத்தே ‘டேய்… இன்னைக்கு ஸ்கூல் ஆஃப் டே டா!’ என்று யூகித்து கிசுகிசுத்து ஆசிரியரிடம் திட்டு வாங்கிய என்னைப் போன்றவர்களும் உண்டு.

அப்புறமென்ன, அந்த ‘டொய்ன்ங் டொங்ன்ங்’ பெல் அடிக்கும், மொத்த பள்ளியும் அதிர வானைப் பிளக்கும் அளவிற்கு ‘ஊஊஊஊஊஊஓஓஓஒஒஒ!’ என்று பிள்ளைகளின் ஒருமித்த குரல் அருகில் பங்களா ஸ்டாப்பிங்கில் நிற்பதற்காக வேகம் குறைந்து போகும் டிடிகே, எம்ஆர்எஸ், தந்தை பெரியார் பேருந்துகளை அதிரச் செய்யும்.

புதுசாக வேலைக்கு சேர்ந்த பையனொருவன் ஸ்கூல் பெல்லை தவறான கதியில் அடித்து விட, அரை நாள் லீவென கருதி பிள்ளைகள் மகிழ்ந்து துள்ளும் சம்பவமும் நடந்தேறியது புவனகிரி பள்ளியில் ஒரு முறை.

( தொடரும் )

– பரமன் பச்சைமுத்து
சென்னை
28.11.2021

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *