ஆர்யாஸ் காஃபி

மாயவரம் காளியாகுடியைப் போலவே, வேலூர் க்ரீன் சர்க்கிள் ‘ஆர்யாஸ்’ காஃபியும் தனி வகையே!

தேசிய நெடுஞ்சாலை வழியே வேலூரை கடக்கும் போதெல்லாம் மேம்பாலத்தில் ஏறாமல் இடதில் இறங்கி க்ரீன் சர்க்கிளை சுற்றி ஆர்யாஸில் நுழைவது ஒரு வழக்கம்.

தாயம் வகுப்புகள், வேலூர் – குடியாத்தம் – திருப்பத்தூர் மாணவர்கள் பலரின் முகங்கள் எல்லாம் வந்து போகும்.

அதே ஆர்யாஸ்தான் என்றாலும் உள்ளே உட்கார்ந்து உண்ணுமிடத்தில் வரும் காஃபியும், வெளியே நின்று வாங்கி பருகும் காஃபியும் வேறு வேறு சுவை என்பது என் கணிப்பு. தவறாகவும் இருக்கலாம்.

அதில், மேசையில் சர்வர் கொண்டு வந்து வைத்ததும் தொடங்குகிறது நம் காஃபி படலம். இதில், டோக்கன் வாங்கி காஃபி மாஸ்டர் முன் நிற்கும் போதே தொடங்குகிறது. கொதிக்கும் பாலை பெரிய எவர்சில்வர் குவளையால் அவர் ஆற்றும் போதே நாம் தயாராகி விடுகிறோம். பெருமாள் கோவில் தீர்த்தம் தரும் அளவான தம்ளரை வட்டாவில் வைத்து, தம்ளரில் மட்டும் கருப்பு டிக்காக்‌ஷனை ஊற்றும் போது ‘பொன்மேனி உருகுதே… என் ஆசை பெருகுதே!’ கணக்காக உடலும் மணமும் தயார். அதற்கப்புறம் பாலை குவளையில் மொண்டு, நம் வட்டா செட்டில் ஊற்றுவார் என்று நாம் நினைக்கையில், அதை அப்படியே உயர்த்தி மறுபடியும் அடுப்பிலிருக்கும் பால் பாத்திரத்திலேயே ‘சொய்ங்ங்ங்க்’ என்று இறக்கி கலக்குவார் காஃபி மாஸ்டர். ‘வர்லாம் வர்லாம் வா… பைரவா…’ மோட்ல் நாம் இருப்போம்.

காஃபி மணம் காற்றில் வந்து நாசியில் நெருடும்.
ஏற்கனவே நாவில் நீர் சுரந்திருக்கும்.

அப்போது ஊற்றுவார் தம்ளரிலும் வட்டாவிலும். ‘சார்… காஃபி எடுத்துக்கோங்க!’

மேலே தம்ளரில் டிக்காக்‌ஷன் கலந்த காஃபி, கீழே வட்டாவில் வெறும் பால்… ‘கருப்புன்னா கலீஜ்ஜா..’ ‘கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு…!’ என அனிருத்தும், அனுராதா ஸ்ரீராமும் வந்து போவார்கள்.

ஆவி பறக்கும் வட்டா செட்டை எடுத்து வெளியே வந்து, வேலூர் வெய்யிலில் நின்று பருகினாலும் கூட… அட..அட.. கா…ஃ…பி!

  • பரமன் பச்சைமுத்து
    வேலூர்
    30.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *