‘மாநாடு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

wp-1638291489871.jpg

ஓர் அலப்பரை அரசியல்வாதி உட்பட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்தில் புறப்பாட்டிற்குத் தயாராக இருக்கும் கோவை விமானத்தில் கடைசியாக ஓடி வந்து அப்துல் காலிக் ஏறியதும் புறப்படும் அந்த விமானத்தின் பயணம் முடிவேயடையாததாக, திரும்பத் திரும்ப வரும் கால வளையத்துக்குள் சிக்கிக் கொண்டால் என்னவாகும், அப்படியொரு பிரச்சினையை நாயகன் எப்படி எதிர் கொண்டு வெளிவருகிறான் என்னும் கால வளைய சுழல் அறிவியல் புனைவை ஓர் அரசியல் மாநாட்டை சுற்றிப் பின்னி ‘மாநாடு’ எனத் தந்திருக்கிறார் வெங்கட்பிரபு.

தமிழுக்கு இவ்வகை புதிது, இப்படியோர் அறிவியல் புனைவை துணிந்து முயற்சித்து கத்தி மேல் நடந்து காட்டிய வெங்கட் பிரபுவுக்கு ‘சபாஷ்’. சுஜாதா இருந்திருந்தால் குமுதத்திலோ விகடனிலோ மெச்சியிருப்பார். தமிழ்மகன் நிச்சயம் மகிழ்வார்.

உடல் எடையைக் குறைத்து விட்டு புதிய வடிவில் வரும் சிம்பு தொடக்க காட்சிகளில் சோர்வாக இருப்பது போல் தெரிகிறார். போக போக வேண்டியதை தந்து சிறப்பாக மிளிர்கிறார் (ரஜினி ரசிகர்கள் அந்நாட்களில் ரஜினி மேனரிசத்திற்காக நெற்றி முடியை எடுத்து விட்டுக்கொள்ளும் அந்த ஸ்டைலை அப்போது போல் இப்போதும் செய்கிறார் சிம்பு).

சிம்புவுக்கு சரி சமமாக நின்று படத்தை தூக்கி நிறுத்துவது எஸ் ஜே சூர்யா. ‘தலைவரே… தலைவரே… தலைவரே… தலைவரே…’ எல்லாம் படத்தின் கோர்வையில் பார்க்கும் போது நன்று.

‘டைம் லூப்’ என்னும் கால வளையத்துக்குள் மாட்டிக் கொண்டுள்ளோம் என்பது நாயகனுக்கும் வில்லனுக்கும் மட்டுமே தெரிகிறது, உடன் இருக்கும் ஒய்ஜி மகேந்திரன், கையை பிடித்துக் கொண்டு உட்கா்ந்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் உட்பட எவருக்குமே ஏன் தெரியவில்லை போன்ற கேள்விகளை கேட்காமல் தவிர்த்தால் படத்தோடு ஒன்றலாம்.

‘நீதான் காரணமா!?’ என்று உணர்ந்து எஸ் ஜே சூர்யா எழும் இரண்டாம் பாதியின் அந்த இருபது நிமிடங்கள் ரசிக்க வைக்கும் காட்சிகள்.

‘முஸ்லீம் என்றாலே தீவிரவாதிதானா? இல்லை. பழி சுமத்தாதீர்கள்’ எனும் சமூக செய்தியும் உண்டு, ‘முதல்ல உங்கப்பா, அப்புறம் நீ தலைவர், இதோ இப்ப வர்ற உன் பையன் அடுத்த தலைவர். இத்தனை நாளா உன் கூடவே ஒழைச்ச நான் எப்ப சிம் ஆவறது?’ என அரசியலும் உண்டு  படத்தில்.

அதே காட்சிகள் திரும்பத்திரும்ப வருவது சிலருக்கு சோர்வை தரலாம், ஆனால் கால வளைய சுழல் பிரச்சினையை வேறெப்படி காட்டமுடியும்!

சிம்புவை குறையே சொல்லமுடியாதபடி செய்து விட்டார். கால வளைய பிரச்சினையை உடைத்து வெளிவரும் பாத்திரம் செய்த சிம்பு, தனது நிஜ திரை வாழ்வில் பழைய பிரச்சினையான வளைய சுழலில் சிக்காமல் உடைத்து வெளியேறி இது போன்ற பாதையிலேயே பயணிக்க வாழ்த்துகள்.

வி – டாக்கிஸ் வெர்டிக்ட்: ‘மாநாடு’ – புது ‘நாட்’ – நிச்சயம் பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#Maanaadu

#Str

#MaanaaduReview

#ParamanReview

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *