புவனகிரி பள்ளி : புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை

*10*

*புவனகிரி பள்ளி : புவனகிரி வைணவ வரலாற்றில் உள்ளது*

வைணவத்தின் பிரிவான மாத்வத்தில் புவனகிரி ஒரு புன்னிய பூமி என்று போற்றப்படுகிறது தெரியுமா?

புவனகிரி பள்ளியில் ‘கடவுளை மற, மனிதனை நினை!  அழும் குழந்தைக்குப் பால் இல்லை, பாழுங்கல்லுக்கு பாலா?’ என திராவிடர் கழக பற்றாளராக தீவிர நாத்திகம் பேசிய ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தெரியுமா?

….

*10*

(*புவனகிரிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி் வந்த கதை*)

திருமுட்டம் பூவராக பெருமாள் என்னும் பூராயர் புவனகிரிக்கு வருகை தருவது பற்றியும் அந்த உற்சவம் நடப்பதை பற்றியும் சென்ற பதிவில் பார்த்தோம். பூராயருக்கு அடுத்த முக்கிய தலம் ஒன்று புவனகிரியில் உள்ளது. 

ஆமாம், புவனகிரி ராகவேந்திரா் கோவில்!

சில வாரங்களுக்கு முன்பு குடமுழுக்கு செய்யப்பட்ட இந்த ராகவேந்திரா சுவாமி கோவில் அப்போதெல்லாம் புவனகிரியில் இல்லை.  இன்று கோவில் இருக்கும் இடம் ஒரு சிறிய சந்தில் வேப்பமரம் கொண்ட இடிந்த வீடு ஒன்றைக் கொண்டிருந்த மனையின் எதிர்ப்புறம் இருந்தது.

எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது, ஆர்எம் வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த அந்த நாட்களில் ஒரு கோடையில்  வெள்ளாற்றில் ஒரு மேடை இட்டு திடீரென்று ஒரு விழா நடத்தினார்கள். ‘மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமிகள் பிறந்த ஊர் புவனகிரி. அங்கு கோவிலமைக்க அடிக்கல் நாட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வருகிறார்!’ என்றார்கள்.   புவனகிரி பள்ளியிலும் என்டிசியிலும் படித்துக் கொண்டிருந்த ராஜவேல் சித்தப்பா என்னை அந்தக் கூட்டத்துக்கு கூட்டிப் போனார். கடலூர் மாவட்டம், தஞ்சை மாவட்டம் என பல ஊர்களிலிருந்தும் ரஜினி ரசிகர்கள் வெள்ளாற்றை நிறைத்திருந்தனர். ஆற்றில் கடலென ரசிகர்கள்.
ஆர்எம்வீயோடு ரஜினி மேடையிலேறிய தருணங்கள் ரசிகர்களின் சத்தம் வானை கிழித்தது.

புவனகிரியில்தான், அப்போதுதான் முதன்முதலில் ரஜினியை பார்க்கிறேன் நான். (இன்று எனது நூல்களை ரஜினி படித்திருக்கிறார் என்பது அவரது ஆர்க்கிடெக்ட் வழியே எனக்கு கிடைத்த உற்சாக செய்தி!) இரண்டு கைகளிலும் ஏற்றி் மடிக்கப்பட்ட பளபளக்கும் வெள்ளை குர்தா, கருநீல டைட் பேண்ட் (‘நேவி ப்ளூ பாட்டம்’) அணிந்திருந்த ரஜினி, ‘ஸ்டெப் கட்டிங்’கிற்கும் ‘ஊர்க்காவலன்’ வகை நடு வகிடுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு ஸ்டைலில் இருந்தாரே, அப்படி இருந்தார்.

ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்தைப் பற்றி ஆர்எம்வீரப்பன் நிறைய பேசினார். ‘தங்கமகனாக இருந்த அந்த ரஜினி… நல்லவனுக்கு நல்லவனாக இருந்த அந்த ரஜினி… பாயும் புலியாக இருந்த ரஜினி… அமைதியாக ஸ்ரீரீகவேந்திரராக..’ வகையில் பேசிக்கொண்டே போனார். வெள்ளாற்றின் மாலை நேர கோடை காற்றில் தலைமுடி பறப்பதை கையால் ரஜினி கோதிவிடும் போதெல்லாம் ரசிகர்களின் விசிலும் உற்சாக கூவலும் காதைக் கிழித்தன.

கடைசியாக பேச வந்த ரஜினி, மைக்கிற்கு சில அடிகள் இடைவெளி கொண்ட தூரத்தில் நின்றபடி வலக்கையை மடக்காமல் நீட்டிய படியே மைக்கை பிடித்து, இடக்கையை ‘ட’ வை திருப்பிப் போட்டது போல் மடித்து வலக்கையை பிடித்தபடி, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்களே…’ என்று தொடங்கிய போது ரசிகர்களின் ஒலி காதைக் கிழித்தது. 

இப்படி தொடங்கியது ராகவேந்திரர் கோவிலின் அடிக்கடிக்கல் நாட்டு விழா. சில ஆண்டுகளில் அதை ஒரு சிறப்பான கோவிலாக உருவாக்கியிருந்தார்கள்.

….

ஏன் மாத்வ வைணவர்களால் புவனகிரி கொண்டாடப்படுகிறது?

‘பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயஸ பஜதாம் கல்ப விருக்‌ஷாய நம தாம் காமதேனவே!’ என்ற மந்திரத்தை தினமும் சொல்லி ராகவேந்திரரை தங்களது குருவாகவும் கடவுளாகவும் போற்றும் மாத்வர்கள் (மத்துவர் வழியை பின்பற்றுகிறவர்கள். ‘ராவ்’ என்ற விகுதி அவர்களது பெயரோடு இருக்கும். பெருமளவில் கன்னடம் பேசுகிறவர்களாக இருக்க வாய்ப்புண்டு) புவனகிரியை போற்றுகிறார்கள். சுல்தான்களின் படையெடுப்புக்கு அஞ்சியும் அவர்கள் கொடூரமாக துன்புறுத்துகிறார்கள் என்று பரவிய செய்திகளுக்கு அஞ்சியும்  மேலை சாளுக்கிய கீழை சாளுக்கிய தேசங்களிலிருந்து மக்கள் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து நாடோடிகளாய் தெற்கு நோக்கு வந்தனர். பல மாதங்களாக அப்படி நடந்து நடந்து வந்த ஒரு குடும்பத்தின் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபடியால் ஆறு ஓடும் ஓர் ஊரிலேயே தங்கிவிட்டனர், பிரசவம் முடியட்டும் என்று. தன் ஆண் மகவை அந்த ஊரிலேயே ஈன்றாள் அந்த இளம்பெண். ஆறு ஓடிய அந்த ஊர் புவனகிரி. அவர் ஈன்ற அந்த ஆண் மகவு பின்னாளில் மந்த்ராலயத்தில் குருவாக உருவெடுத்த ஸ்ரீ ராகவேந்திரர். குழந்தை பிறந்த நேரம், சுல்தான்கள் வடக்கே திரும்பி விட பிரச்சுனைகள் ஓய்ந்ததாக அறிந்து அடுத்த சில நாளிலேயே தங்களது பூர்விக துங்கபத்திரை நதி பகுதியை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர்.

கர்நாடகத்திலிருந்து பயணித்து வந்து புவனகிரியில் பிரசவித்து விட்டு திரும்பவும் போய் விட்டனர்.
புவனகிரி மாத்வர்களின் குரு அவதரித்த தலமாகையால் வரலாற்றில் குறித்து வைத்திருக்கிறார்கள்! போற்றுகிறார்கள்.

(‘ஏய் போடா! நாங்கல்லாம் ராகவேந்திரர் பொறந்த ஊர்லயே வாழ்ந்து திரிஞ்சவங்கடா!’)

( ‘ராகவேந்திரர்’ என்னும் தனது 100 வது படத்தின் தொடக்க காட்சியில் ரஜினி ‘புவனகிரியில் அவதரித்தார்’ என்று ராகவேந்திரரைப் பற்றிக் குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்)
….

முழுஆண்டு தேர்வு வரும் போது கோவிலுக்கு போகும் மாணவர்கள் புவனகிரி பள்ளியிலும் இருந்தனர். அந்தக் கோவில்களில் ஒன்றாக புவனகிரி ராகவேந்திரர் கோவிலும் இருந்தது.

புவனகிரி பள்ளியில் திராவிடர் கழகத்தின் மீது பிடிப்பும் நாத்திக கொள்கையும் கொண்ட ஆசிரியர் யார் என்று தொடக்கத்தில் கேட்டோமே! பெயர் நினைவிலிருக்கிறதா?

புவனகிரி பள்ளிக்கு திக தலைவர் கி வீரமணியை கூட்டி வந்தவர் அவர். அவர்…

(தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
05.12.2021
[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *