11. ‘புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்

*11*

*’புவனகிரி பள்ளி : வாரியாரும் வீரமணியும் வந்தனர்*

(புவனகிரி பள்ளி பற்றிய நம் பதிவுகளை படித்து விட்டு துபாயிலிருந்து கண்ணன் தகவல் அனுப்பியிருந்தார், ‘ரஜினி புவனகிரி வந்த போது, அந்த மேடையில அவருக்குப் பின்னாடி நின்னது நானும் புவனகிரி மெடிக்கல்ஸ் கணேஷும். நாங்க புவனகிரி ரஜினி ரசிகர் மன்றம் நடத்துனவங்க’ என்று. (நாளைக்கு ரஜினி பிறந்த நாளுன்னு சொல்லுங்கப்பா அவங்களுக்கு!)

டிஜே ஐயா எனப்படும் ஜெயராமன் ஐயாவின் மகன் அமெரிக்காவிலிருந்து பதிவுகளை படித்துவிட்டு தன் தந்தையிடம் காட்ட, பொன்னையன் வழியே என்னை செல்லிடப்பேசியில் பிடித்தார் நம் ஜெயராமன் ஐயா. பழைய நினைவுகளை கொஞ்சம் பகிர்த்து கொண்டார். நிறைய மகிழ்ந்தார்.

புவனேஷ் என்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்)

….

*11*

*’புவனகிரி பள்ளிக்கு வாரியாரும் வீரமணியும் வந்தனர்’*

‘பிடி சார்’ என்று புவனகிரி பள்ளி மாணவர்களால் அழைக்கப்படும் பு தில்லைவளவன் சார் வழுவழு தலையும் தலையை சேர்த்து கூர்ந்து பார்க்கும் மேனரிசமும் கொண்டவர்.

‘கலைக் கழக விழா’ ‘கலைக் கழகம்’ என்ற பெயர்களில் பெரும் ஆளுமைகளை கூட்டி வந்து மாணவர்களிடையே பேச வைக்கும் பெரும் நற்காரியங்களை செய்தார்கள் புவனகிரி பள்ளியில். ’51 செட்டியார்’ என்றழைக்கப்படும் மகாலிங்கம் செட்டியார், திருநாவுக்கரசு முதலியார், வெள்ளியம்பலம் ஜூவல்லர்ஸ் குடும்பம் போன்றோர்களும் புவனகிரி இறைபணி மன்றத்தினரும் புவனகிரிக்கு கிருபானந்த வாரியார் அவர்கள் தொடர்ந்து வருவதற்குக் காரணமானவர்கள்.

சாமுண்டீஸ்வரி்அம்மன் கோவிலுக்கும் இப்போதைய தேவாங்கர் திருமண மண்டபத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் மேடையிட்டு முன்னிரவில் ‘கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி..’ என்று நாட்டை ராகத்தில் உச்ச குரலில் வாரியார் பாடும் போது, அந்தப்பகுதியெங்கும் மக்கள் இறைந்து கிடப்பார்கள்.  இப்போது செல்வது போல சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வடக்கே பஸ் போக்குவரத்துகள் அதிகம் இருந்ததில்லை அப்போது என்பதால் மொத்த சாலையையும் நிறைத்து அமர்ந்திருப்பர் மக்கள்.

அப்படி புவனகிரி இறை பணி் மன்றம் வந்த வாரியாரை சில பல வேண்டுகோள்கள் செய்து புவனகிரி பள்ளிக்கு கூட்டி வந்தார்கள். புவனகிரி பள்ளியில் அப்போதெல்லாம் விழா நடத்தவென்று அரங்கம் எதுவும் இல்லை ( இப்போது!?).  காலைப் ப்ரேயர் நடக்கும் ‘ஃபாரஸ்ட் ஃபயர்’ ‘யானைக்கா மரம்’ தூங்குமூஞ்சி மரங்கள் அடர்ந்த அந்த மண்வெளித் திடல்தான்.  மரப்பெஞ்சுகளால் அமைக்கப்பட்ட மேடையின் பின்னே கீரப்பாளையம் ஓவியர்களால் எழுதப்பட்ட உடனடி பதாகை, சில ஜிகினா தாள்கள் என திறந்த வெளி அரங்கம் தயாராகும்.

அந்த மேடையில்தான் தெற்குப் பார்த்து சிவபழமாக வாரியார் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தபடி வடக்கு நோக்கி தரையில் மாணவர்கள்.  மேடையைச் சுற்றி மு பச்சைமுத்து ஆசிரியர், திருநாவுக்கரசு முதலியார் (இன்னும் பல புவனகிரி இறை பணி மன்ற அன்பர்கள்) நிற்க, மாணவர்களுக்குப் பின்புறமும் +1,+2 கட்டிடத்தின் வாயிலிலும் ஆசிரியர்கள் நிற்க நிகழ்ச்சி நடந்தது. 

‘வாரியாரை நெய்வேலியில் தாக்கினர் திராவிடர் கழகத்தினர்’ என்பதெல்லாம் மனதில் ஓட தில்லைவளவன் வாத்தியாரைத் தேடினால், மாணவர்களின் பின்னே நின்று கொண்டு அவரது பாணியில் தலையைச் சாய்த்து கூர்ந்து கவனித்து, வாரியார் சுவாமிகள் விளக்கும் ‘தமிழின் அகரம் மகரம் ரகரம்’ அடிப்படையை ஆழ்ந்து அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தார். ‘மாண்பு கொண்ட மனிதர்!’ என்று பேசிக் கொண்டோம் பிறகு.

இது நடந்து கொஞ்ச காலம் பிறகு மறுபடியும் புவனகிரி பள்ளியில் அதே பரபரப்பு, ப்ரேயர் திடலில் மரபெஞ்ச் மேடை, கீரப்பாளையம் ஓவியர்கள் செய்த பதாகை, ஜிகினா தாள்கள். ‘இந்த முறை வருவது திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் வளர்ப்பு மகன் வீரமணி அவர்கள்’ என்றார்கள்.

கருப்பு சட்டை அணிந்து வீரமணி வந்தார். நின்று கொண்டே பேசினார். ‘தமிழ் வாத்தியார் வந்து ‘பத்து பிறை சூடிப் பெருமானே!’ என்று பாடம் நடத்தி விட்டு போகிறார். அடுத்து வரும் அறிவியல் வாத்தியார் ‘நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தார்’ என்று நடத்துகிறார். ‘அப்ப ஆம்ஸ்ட்ராங் சிவபெருமான் தலையிலயா காலை வச்சான்!’ என்று குழம்புகிறான் மாணவன்!’ என்று வீரமணி அவர்கள் பேசக் கேட்டதே என்னைப் போன்ற மாணவர்களுக்கு முதல் நாத்திக உரை அனுபவம்.

‘அது… புவனகிரி ஸ்கூலுக்கு வாரியார கூட்டி வந்தாங்க இல்ல, அதான் போட்டிக்கு திக தலைவரை கூட்டிட்டு வர்றாரு பிடி சாரு!’ என்று எல்லாம் தெரிந்தவர்களாக தில்லைவளவன் வாத்தியாரைப் பற்றி பேசிக் கொண்டனர். உண்மையாவெனத் தெரியாவிட்டாலும், அது அந்த வயதில் பிடித்திருந்தது.

நல்ல கூர்மையான குரலும், கண்களும் கொண்ட பிடி வாத்தியார், சன்னமான கட்டம் போட்ட நீல லுங்கி அணிந்தபடி சைக்கிளில் செல்வதை புவனகிரி கடைத்தெருவில் பல முறை பார்த்திருக்கிறோம். சந்தைத் தோப்பு பக்கம் எங்கேயோ வசித்தார் என்றும் இப்போது சிதம்பரம் செல்லும் வழியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு போய் விட்டார் என்றும் தகவல்கள் வருவதுண்டு.

‘ஜிடி’ வாத்தியார், ‘விபிஎஸ்’ எனப்படும் வி பி சிவகுருநாதன், ஆர்கே வாத்தியார்  ஆகியோர்
புவனகிரி பள்ளியில் முதல் நிலை (ஆறாவது, ஏழாவது, எட்டாவது) மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர்களாக இருந்தனர்.  

மூன்று பேருமே அடிப்பார்கள்.வகுப்பை இரண்டாகப் பிரித்து எதிரும் புதிருமாக உட்கார வைத்து விநாடி வினா போட்டி நடத்துவார். சில நேரங்களில் வேறொரு வகுப்பை கூட்டி வந்து போட்டி போட வைத்து விடுவார்.

ஜிடி வாத்தியார் தொடையின் சதையை மட்டும் தனியாக ஆட்டிக் காட்டுவார். மேலக்குறியாமங்கலம் பாலகிருஷ்ணன் அதை ‘தவக்களை ஆடுது’ என்று குறிப்பிடுவான். ஜிடி வாத்தியாரின் மகன்களான மதிமாறன், மதிவாணன் இருவரும் எங்களுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சீனியர்கள்.

ஆர்கே வாத்தியார் வேற ரகம். அறிவியலை புரியும்படி எடுப்பார். நெடுநெடுவென்றும் வித்தியாசமான தலை வாறலோடும் இருப்பார். ஆர்கே வாத்தியாரின் மகன் ஆர்வலன் என்று சொல்வார்கள். அவன் இப்போது இல்லை இறந்து விட்டான் என்றும் தகவல்.

புவனகிரி பள்ளியில் இருந்த இன்னுமொரு நாத்திகப் பற்றாளரைத் தெரியுமா? கண்ணாடி அணிந்த அறிவியல் போதிக்கும் ஆசிரியை அவர் என்பது உங்களுக்கான க்ளூ.

(தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
[email protected]
11.12.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *