12 : ‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

12

‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’

( சென்ற பதிவில் ‘வாரியார் – கி வீரமணி – புவனகிரி பள்ளி’
பற்றிப் படித்துவிட்டு, ‘புவனகிரி இறை பணி மன்றத்தின் நோட்டீஸ்களை எங்கள் ஐயப்பன் அச்சகத்தில்தான் நாங்கள் அடித்துத் தருவோம். உங்கள் தொடர் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. தொடரட்டும்!’ என்று எழுதியிருந்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறையின் தலைவரும் சாம்பசிவ செட்டியாரின் மகனுமான முனைவர் சரவணன்.

புவனேஷ் பாலா என்பவர் புவனகிரி பள்ளி பற்றிய பதிவுகளை சிலாகித்தும், சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டிருந்த புவனகிரி பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய தனது நினைவுகளையும் மிக விரிவாக எழுதி மின்னஞ்சல் செய்திருந்தார்.

கடலூர் பகுதியில் சிபிசிஐடி பொறுப்பில் பணிபுரியும் பாலமுருகன் அழைத்துப் பேசினார்.

….

நாத்திக பற்றாளரான அறிவியல் ஆசிரியை பற்றி சென்ற பதிவில் கேட்டிருந்தோம். பலரும் மின்னஞ்சலில் பதில் சொல்லியிருந்தார்கள். அதை அப்படியே வைத்து விட்டு புவனகிரி பள்ளி பற்றிய வேறொரு நினைவை தொடுகிறோம் இப்பதிவில் )

….

12

‘புவனகிரி பள்ளி : இவர்கள் இருந்திருப்பார்கள் உங்கள் வகுப்பில்!’



பள்ளி என்பது நீங்கள் பார்த்த, கேட்டறிந்த என பல்வேறு எண்ணங்களால் நிறையும். ஆனால், நீங்கள் பயின்ற பள்ளி என்பது பல பழைய நினைவுகளால் அனுபவங்களால் ஆனது.

நீங்கள் படித்த பள்ளி என்பது வெறும் பெயர்ப்பலகை இல்லை உங்களுக்கு. அந்தப் பள்ளியின் பெயருக்குப் பின்னே ஆயிரம் அனுபவங்களும், உங்களுக்கு போதித்த ஆசிரியர்களும், உங்களுக்கு போதிக்காத ஆனால் பள்ளியில் நீங்கள் கண்ட ஆசிரியர்களும், உங்களோடு ஒரே மேசையை பகிர்ந்து கொண்ட தொடையொட்டி உரசி உட்கார்ந்த வகுப்புத் தோழர்களும், உடன் படித்தோரும், வேறு வகுப்பென்றாலும் தோழர்களாய் நின்ற மாணவர்களும், உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் நீங்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்று சொல்லக்கூடிய ‘எனிமி’களும், நன்றாகப் படித்து விடும் முதல் வரிசை மாணவர்களும், அப்பவே ஆளுயரம் வளர்ந்து மீசை தாடி முளைத்த பெரிய ஆள் கணக்கான கடைசி வரிசை மாணவர்களும், கொடி மரமும், தகவல் பலகையும் என எல்லாமும் இணைந்து புதைந்து கிடக்கும் உங்களுக்குள்ளே.

இந்த வரிசையில் வேறொரு வகை வகுப்புத் தோழர்களும் புதைந்திருப்பர் ஆழ் மனதின் அடியாழத்தில். சிங்காரமும் சேரனும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அப்படிப் பட்ட பட்டியலில் வருபவர்கள்.

புவனகிரி பள்ளியில் ஆறாவதிலிருந்து தேர்ச்சி பெற்று ஏழாவதுக்கு வரும் போது, அந்த வகுப்பில் ஏற்கனவே இருந்தவன் சேரன். புவனகிரி பள்ளியின் ப்ரேயர் திடலிலிருந்து விளையாட்டுத் திடல் பக்கம் வடமேற்கில் வெளிவரும் வழியில் இருக்கும் மண்வெளி தரையே எங்கள் ஏழாம் வகுப்பு (7th C). அங்கிருந்த கீற்றுக் கூரைக் கட்டிட சுவரில் செவ்வகவடிவில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ‘க்ளாஸ் போர்டு’ அதன் அடியில் இருக்கும் மண் வெளியில் மாணவர்கள் அமரும் அந்த வகுப்பின் ஆசிரியர் ‘ஏடி ஐயா’ என்பவர்.

‘ஒரு டீயைக் குடிச்சிட்டு ஒம்பது தடவை மீசைய நக்குவார் ஏடி ஐயா!’ என்று க்ளாஸ் டீச்சரைப் பற்றி சேரன் சொல்லும் போது, மிரட்சியும் வியப்புமான கலவையான உணர்வு வரும் எங்களுக்கு. அதே வகுப்பில் மூன்று ஆண்டுகளாக படிக்கிறான் அவன் என்பது தெரிய வந்ததும், ‘ஓ பயங்கரமான ஆளு போல! சீனியர்!’ என்ற உணர்வு வந்ததும் உண்டு.

பள்ளிக்கு எதிரில் இருக்கும் கடையில் போய் டீ வாங்கி வரச் சொல்லி சேரனைத்தான் அனுப்புவார் ஏடி ஐயா. சில வேளைகளில் அவர் சொல்லாமலேயே ‘நாமளும் போவோமே!’ என்று அவனோடு சேர்ந்து நானும் போனதுண்டு. (பின்னாளில் பத்தாம் வகுப்பில் குறியாமங்கலத்திலிருந்து வந்த தமிழாசிரியர் சொக்கலிங்கத்திற்கும், அறிவியல் ஆசிரியை தமிழ்மணிக்கும் பாளையக்காரத் தெரு செந்திலோடு சேர்ந்து டீ வாங்கி வந்த அனுபவங்கள் உண்டு)

சேரனுக்கு மலேசியாவில் அம்மா வழி மாமா யாரோ உண்டு. சிங்கப்பூர் சட்டை என்ற பெயரில் நல்ல தடிமனான ஆனால் பளபளவென்று இருக்கும் துணியில் தைத்த சட்டை அணிந்து வருவான் (‘ஸ்பன் பாலியெஸ்டர்!?’). அதே ‘பேட்டர்ன்’ கொண்ட ஆனால் வேறு வண்ணம் கொண்ட இரண்டு சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டு வருவான்.

ஏழாம் வகுப்புக்கு வரும் ஒவ்வொரு ஆசிரியரும் என்ன செய்வார்கள், எப்படி நடப்பார்கள் என எல்லாமும் தெரியும் சேரனுக்கு. பெருமாத்தூரிலிருந்து நடந்தே வரும் சேரனுக்கு அம்மா என்றால் உயிர். அம்மாவைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஏதாவது குறிப்பிடுவான்.

புவனகிரிப் பள்ளியின் உயர்நிலை ஆசிரியராக பஷீர் வாத்தியார் வந்திருந்த அந்நாட்களில், அவரது அறிவியல் ஆய்வுக் கூடத்தின் அகன்ற நீண்ட வாயிற்படிகளில் நானும் சேரனும் ஆளுக்கொரு படிகளில் படுத்துக் கிடப்போம்.

அவனை அந்த வயதில் ரொம்பப் பிடிக்கும் எனக்கு. எண்ணெய் தடவாமல் தலை வாரி வந்தவனை ‘ஏன் எண்ணெய் தடவல? யாரும் செத்துட்டாங்களா?’ என்று கேட்ட போது, ‘மழைக்காலம் இல்ல! தலையில எண்ணெய் வச்சா, மழையில எண்ணெய் வழிஞ்சி சட்டையில எறங்கும். சட்டை வீணாயிடும். அதான் வைக்கல!’ என்று அந்த வயதில் நான் சிந்தித்துக் கூடப் பார்க்காத ஒரு சித்தாந்தத்தை கூறி வாய் பிளக்க வைத்த அறிவாளி அவன். சட்டையை பற்றி சட்டையே செய்யாமல் விழிப்புணர்வில்லாமல் உருண்டு புரண்டு வாழ்ந்த அவ்வயதில் பெரியவர்கள் போல பேசி அறிவாளியாக திகழ்ந்தான் சேரன்.

இன்னொருவன் சிங்காரம். நீண்டு நெடிதுயர்ந்து வளர்ந்த மரம் போல ‘பிக் பில்ட்’ ஆக வயதுக்கு மீறி பெரியவனாகத் தெரிவான் சிங்காரம். வேட்டி கட்டலாம் என்று சொல்லுமளவிற்கு பருத்த தொடையும் உறுதியான கால்களும் கொண்ட அவன் பள்ளிச் சீருடையான அரைக்கால் சட்டை அணிந்து வருவது வித்தியாசமாகவே இருக்கும். கிட்டத்தட்ட ‘பிதாமகன்’ விக்ரமின் ‘சித்தன்’ பாத்திரம் போலவே கைகளை தொங்கப் போட்டுக்கொண்டு உடலை ஒரே நிலையில் வைத்துக் கொண்டு சிங்காரம் நடப்பதைப் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.

வகுப்பிற்கு சாக்பீஸ் வாங்க வேண்டும், கட்டுரை நோட்டுகள் வாங்க வேண்டும், எல்லாரிடமும் 10 பைசா வசூலித்து குடி தண்ணீருக்கு புவனகிரி சந்தை தோப்பில் போய் பானை வாங்க வேண்டும் என எந்த ‘ப்ராஜெக்ட்’ வந்தாலும் சிங்காரமே ஆசிரியர்களால் தேர்வு செய்யப்படுவான். சில நேரங்களில் கரைமேடு / எண்ணாவரம் செந்திலின் ஆலோசனைகள் கேட்கப்படும் என்றாலும், சிங்காரமே ஒரு படைத்தளபதியாக மொத்த வகுப்பின் சார்பில் புவனகிரி கடைத்தெருவிற்கு போய் வருவான்.

எது எந்தக் கடையில் கிடைக்கும், எந்தக் கடையில் எது கிடைக்கும், எப்படி குறைத்து வாங்க வேண்டும் என எல்லாமும் தெரிந்தவன் சிங்காரம். உலகமறியா சிறுவர்கள் நிறைந்த அந்த ஏழாம் வகுப்பில் வெளி உலகம் தெரிந்த, எல்லாம் தெரிந்த ஒரு தலைவனாகவே இருந்தான் சிங்காரம்.

எட்டாவது ஒன்பதாவது என நாங்கள் அடுத்தடுத்து ஓடி ஏறி வந்த ஓட்டத்தில், எங்கள் வட்டத்திலிருந்து எப்படியோ விடுபட்டுப் போயினர் சிங்காரமும் சேரனும். சேரன் அடுத்த ஆண்டும் ஃபெயிலாகி விட்டான் என்று யாரோ சொன்னார்கள். சிங்காரம் புவனகிரி ரெங்கராஜா தியேட்டரின் உள் கடையில் வேலை செய்வதாக யாரோ சொன்னார்கள்.

படிப்பு வரவில்லையென்று சொல்லப்பட்ட
சேரன் புவனகிரியின் கடைவீதியிலுள்ள மளிகைக் கடையொன்றில் வேலைக்கு சேர்ந்து விட்டான். அதே மாமா வழியாக சில பல ஆண்டுகள் வெளிநாட்டிலும் வேலை பார்த்து விட்டு இப்போது புவனகிரிக்கே வந்து விட்டான் அவன் என்றும் யாரோ சொன்னார்கள்.

சிங்காரமும் சேரனும் எங்கே இருக்கிறார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஐம்பதை நெருங்கும் வயதில் முடி உதிர்ந்தோ நரைத்தோ இருக்கலாம். எடை கூடியோ குறைந்தோ தோற்றமே முற்றிலும் மாறிப் போயிருக்கலாம். அந்த வயதில் உள்ளே பதிந்து போன அவர்களது உருவங்கள் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றன என்னுள்ளே.

அவர்களை சந்திக்கும் வாய்ப்பை வாழ்க்கை வழங்குமா? தெரியவில்லை. ஒருவேளை என்றாவது புவனகிரி கடைத்தெருவில் அவர்களைக் கடந்து போகும் போது அடையாளம் தெரியாமல் கடந்து போனோமோ தெரியாது. அடையாளம் தெரியாமல் கவனம் கொள்ளாமல் போன என்னை அடையாளம் கண்டு, ‘பாரேன், நம்மள கவனிக்காமலே போறான்! பெரிய ஆளாயிட்டானுங்க. மதிக்க மாட்றாங்க!’ என்று என்னை இகழ்ந்தபடியே கடந்து போனார்களோ தெரியாது.

ஆனால் ஒன்று தெரிகிறது. அறிவாளிகள் அத்தனை பேரும் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறுபவர்கள் எல்லோரும் பெரிய அறிவாளிகள் இல்லை.

படிப்பு என்ற ஒரே சங்கதியை வைத்து வாய்ப்பை வழங்கும் இந்த வாழ்க்கை முறை பலரை உயர்த்தும் அதே வேளையில் சிலரை உதிர்த்து தரையில் தள்ளி விடவும் செய்கிறது. ஒரு வேளை இன்று என்னிடம் இருக்கும் இந்த ‘மலர்ச்சி’ அமைப்பு அன்றிருந்திருந்தால்
அறிவாளிகளாகத் தெரிந்த சேரனும் சிங்காரமும் தொலைந்தவர்கள் பட்டியலில் இருந்திருக்க மாட்டார்கள். படிப்பைத் தாண்டிய ஒரு வாழ்வியலைக் கொண்டு உருவாக்கம் கொண்டிருப்பார்கள்.

படிப்பு வராமல் தவிப்பவர்களுக்கு அவர்களுக்கு எளிதாகப் புரியும்படி எடுத்து புகட்டும் வழிகள் முறைகள் இருந்திருந்தால், சிங்காரம் சேரன் ஆகியோர் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கலாம். சென்னையின் மிகப்பெரிய அரங்கான சென்னைப் பல்கலைக் கழகத்தின் சென்டினரி ஆடிட்டோரியத்தில் (தமிழக முதலமைச்சர்கள் பதவியேற்கும் அரங்கம்) அமர்ந்திருந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திரண்டிருந்த அந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5000 பேருக்கு ‘தினமலர் நாளிதழ்’ ஏற்பாட்டில் ‘தேர்வில் வெற்றி பெற’ என்று ‘மாணவர் மலர்ச்சி’ வகுப்பெடுக்க போன போது, மேடையில் நின்ற படி அந்த 5000 பேரில் என் கண்கள் தேடியது சில சிங்காரங்களையும் சேரன்களையும்தான்.

சிங்காரமும் சேரனும் எங்கோ இன்று. ஆனால், ‘புவனகிரி பள்ளி’ என்று வார்த்தைகள் வந்தால் புதையுண்ட நினைவுகளிலிருந்து சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த தேவகுமாரனைப் போல ஆழ்மன புதைவுகளிலிருந்து எழுந்து வரவே செய்கிறார்கள்.

பள்ளி நினைவுகள் என்பது ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்களை மட்டும் கொண்டதல்ல, படிப்பு வராமல் தவித்த உதிர்ந்த மாணவர்களையும் கொண்டதுதானே.

உங்கள் வகுப்பிலும் உங்கள் வாழ்விலும் ஒரு சிங்காரமும் சேரனும் இருந்திருப்பார்கள்தானே! நினைவில் வருகிறார்களா?

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    15.12.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *