சுடச்சுட வெண்ணெய்

wp-16410883621398515048242616711124.jpg

அதிகாலை 05.50க்கு அருகில் வந்து ‘சிவா, ஆ… காட்டு! வாயத் தொற!’ என்று ஊட்ட வருகிறார் அம்மா. சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய். 

தயிர் நிறைந்த பெரிய பானையை வைக்கோல் பிரி சிம்மாடில் வைத்து, தரையில் தண்டாசனம் இட்ட நிலையில் ஒரு காலை நீட்டி ஒரு காலை மட்டும் மடக்கி அமர்ந்து, பெரிய மர மத்து ஒன்றை அதில் விட்டு முன்னும் பின்னும் என கடைய என்னும் தயிர்க்கடைதல் நிகழ்வும் அது எழுப்பும் ‘பளாஆஆக்.. க்ள்ளாஆக்’ சத்தமும் மணக்குடி ஸ்பெஷல். சிறு வயது முதலே பார்த்து கேட்டுப் பழகிய சத்தம். இருந்தவரை பாட்டி கடைந்தார். இப்போது அம்மா.

மேரு மலையை மத்தாக கடைந்த போது அதிலிருந்து அகலிகை, காமதேனு, அமுதம் என ஒவ்வொன்றாக வந்தது போல சிறு வயது நினைவுகள் அடியாழத்திலிருந்து பொங்கி பொங்கி மேலெழுந்து சிலும்பி வருகிறது எனக்கு.
(கடைவது, சிலும்புவது – ரெண்டும் வேறு வேறு. இரண்டும் உண்டு வெண்ணெய் எடுப்பதில்)

பாட்டி கடைந்து முடிக்கும் முன், விழிகள் விரிய பரபரப்போடு ‘ம்ம்… எனக்கு எனக்கு!’ என வாயில் வாங்கிக் கொள்ள தவித்ததும், ‘இருப்பா.. இன்னும் வெண்ணை திரலலை!’ என்று பாட்டி அடக்குவதும் ஓர் அனுபவம்தானே. சிறுவனான நமக்கு முதலில் படையல் முடித்துவிட்டுத்தான் பக்கத்தில் இருக்கும் நீர் நிரம்பிய கிண்ணத்தில் வெண்ணையை நிரப்பத்தொடங்குவார் பாட்டி.  நீரில் உருண்டையாக மிதக்கும் நவநீதம்.

தமிழில் எப்படி கலக்குகிறார்கள் பாருங்கள்! உருக்கினால் நெய், உருக்கும் முன்னே வெண்மையாய் இருக்கும் அது ‘வெண்’ணெய்!

பெங்களூர் பசவன்குடி ‘பிராமின்ஸ் கஃபே’யின் அதிகாலை ‘பென்னே இட்லி’ (வெண்ணெய் இட்லி), சென்னை வாணிமகால் முருகன் இட்லியின் ‘பட்டர் ஊத்தாப்பம்’, சான்ஃப்ரான்ஸிஸ்கோ ‘கார்ல்ஸ் ஜூனியர்’ கடையில் ‘நெப்போலிட்டன் வித் சீஸ்’, டோக்கியோ ‘ஷினகாவோ பிரின்ஸ்’ஸின் பெயர் மறந்து போன அந்த ‘எக்ஸ்ட்ரா சீஸ் பீட்ஸா’ என வெண்ணெய் எந்த வடிவமெடுத்தாலும் உணவின் சுவையைக் கூட்டவே செய்கிறது. எடப்பாடியை போலவே எனக்கும் ‘பன்னீர்’ அந்த அளவிற்கு பிடிப்பதில்லை.

எப்படி ‘இத்தனை கலோரிகள், அத்தனை கலோரிகள்’ என்ற கணக்கை நான் கண்டுகொள்வதில்லையே, அப்படியே ‘வெண்ணெய் கொலஸ்ட்ரால்’ என்று உலகம் சொல்வதையும் கண்டு கொள்வதில்லை. வெண்ணெய்யும் நெய்யும் எப்போதும் உண்டு நம் வாழ்வில் (அதிலாவது ஆயர்பாடி சிறுவன் வழியில் இருக்கிறோம் போல!) ‘நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா குண்டி பாழ்!’ எனும் ஔவைக்கு கொடி பிடிப்பவன் நான். இதனாலேயே பஸ்லூர் ரஹ்மான் வழி மாற்று மருத்துவம் செய்பவர்களும், சுடச்சுட தேநீரில் ஒரு முழு ஸ்பூன் வெண்ணையை அப்படியே போட்டு ‘திபெத்தியன் டீ’ என்று காலையுணவாக கொள்ளும் பேலியோ டயட் பயிற்சியாளர்களும் இந்த ஒரு சங்கதியிலாவது கொண்டாடுவார்கள் என்னை.

இன்று அதிகாலை மூச்சுப் பயிற்சி, தவப்பயிற்சி முடித்துவிட்டு மரப்பெஞ்சில் அமர்ந்து மழையில் நனைந்து ஈரமான தெருவை விடியும் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருக்கையில், அம்மா பின்னிருந்து வெண்ணெய்யை கொண்டு வந்து ஊட்டுகிறார்.

சுடச்சுட இப்போதுதான் கடைந்த வெண்ணெய்! லேசான புளிப்போடு வாயிலிருந்து, தொண்டையில் வழிந்து நெஞ்சு வரை வழிக்கிக் கொண்டே சூடாய் இறங்குகிறது வெண்ணெய். 

எவ்வளவு பெரியவனாக நாம் வளர்ந்தாலும் ஆளானாலும் தடாலென வந்து தலையில் தட்டுவது போல்  ஊட்டுவதை அம்மாக்களால் மட்டுமே செய்ய முடிகிறது!

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி விடுகிறார்கள். பெற்றோர்கள் எப்போதும் பெற்றோர்களாகவே இருக்கிறார்கள்!

பெற்றோர்கள் வரம்! அவர்களோடு நிறைய வாழ்க்கைத் தருணங்கள் உங்களுக்கு கிடைத்தால் அது பெரும் வரம்!

ஈராயிரத்து இருபத்திரெண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
மணக்குடி
02.01.2022

#Manakkudi
#Navaneetham
#FreshButter
#AmirthamPachaimuthu
#Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *