14 புவனகிரி பள்ளி

*14*

*புவனகிரி பள்ளி*

புவனகிரி ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ தெரியுமா, உங்களுக்கு?

….

(விளையாட்டாக புவனகிரி பள்ளியில் என்னோடு படித்த வகுப்புத் தோழர்கள் கொண்ட கட்செவியஞ்சல் குழுவிற்காக நாம் எழுதத் தொடங்கிய இந்த ‘புவனகிரி பள்ளி’ தொடர் வெளியிலும் பகிரப்பட்டு பல வகையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறது.

அதில் மிக முக்கியமானவை இரண்டு.

ஒன்று – தமிழாசிரியர் ஜெயராமன் ஐயாவைப் பற்றி நாம் எழுதிய பதிவு ஏதோ ஒரு பகிர்வின் மூலம் அவரது மகனுக்குப் போய், அதன் வழியே ஜெயராமன் ஐயாவே செல்லிடப்பேசியில் அழைத்து நம்மை அதிரச் செய்யும் நிகழ்வும் நடந்தது. இன்று புவனகிரியில் வெளியான ‘நெருப்பில் மலர்ந்த பூக்கள்’ என்ற அவரது முதல் நூலில், அவரைப் பற்றி நாம் இங்கு எழுதிய பதிவு ‘மாணவர் உரை’ என்ற பெயரோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதில் கூடுதல் மகிழ்ச்சி.

இரண்டு – நூல் வெளியீட்டு விழாவில் இருந்த போது ஒல்லியாக உயரமாக பரிச்சயமான முகத்தோடு இருந்த ஒருவர், ‘நீங்கள் எழுவதைப் படிக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு. 40 வருஷம் முன்னே போய் வாழற மாதிரி செய்யுது உங்க எழுத்து. தொடரை நிறுத்தாதீங்க’ என்றார்.  தெரிந்த முகமாக இருந்ததில் விசாரித்ததில் அடுத்த இன்ப அதிர்ச்சி! நம் புவனகிரி பள்ளியில் ‘டென்த் ஏ’வுக்கு கணிதம் எடுத்த துரைராஜன் வாத்தியார் !!!! நான் ‘டென்த் பி’, எங்களுக்கு கணிதம் எடுத்தவர் நக்கீரன் வாத்தியார். )

….

புவனகிரி பள்ளிக்கு ‘சத்துணவு திட்டம்’ வந்தது எப்போது வந்தது என்று நினைவிருக்கிறதா?

பெருவாரியான மாணவர்கள் சத்துணவு உட்பட வெளியுணவையே உண்ணாத அந்தக் காலகட்டத்தை 
பார்ப்பதற்கு முன்பு அன்றைய புவனகிரியின் உணவகங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்பது நல்லது.

புவனகிரியின் முக்கிய உணவகங்கள் என்றால் முதல் பெயர் நாராயண ஐயர் ஹோட்டலுக்குத்தான்.  மகபூப் கான் அவர்களின் வீட்டிற்கு எதிரே ஒரு சிறிய பேருந்து நிலையம் இருந்தது.
எல்லாப் பேருந்துகளும் உள்ளே வராது.

கடலூர் மார்க்கமாக பயணிக்க அரசமரத்தடியில் நின்று சிதம்பரத்திலிருந்து வரும் பேருந்துகளிலும், சிதம்பரம் நோக்கிப் பயணிக்க மகபூப்கான் வீட்டின் பக்கம் நின்று கடலூரிலிருந்து வரும் பேருந்துகளிலும், தந்தைப் பெரியார் அல்லது திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக சென்னைப் பேருந்தில் ஏற வெள்ளாற்றுப் பாலத்திலிருந்து வந்து திரும்பும் இடத்தில் இமாம்பாஷா கடை அருகிலும், விருத்தாசலம் – நெய்வேலி – பண்ருட்டி மார்க்கமாக செல்ல பாலத்தின் இடது புறத்தில் நின்றும் ஏற வேண்டும்.

(இப்போது இருக்கும் புதிய வெள்ளாற்றுப் பாலம் அப்போது இல்லை. புதிய பாலத்தின் கிழக்கில் இருக்கும் அந்த பழைய வெள்ளைக்காரன் காலத்து பாலம் மட்டுமே அப்போது இருந்தது)

பாலத்திலிருந்து திரும்பி கொஞ்சம் கடந்து அரசமரத்தைத் கடந்து வடக்கில் திரும்பினால் ‘ராஜசேகர் மரவாடி’ இருக்கும். ஏதாவது ஒரு பெரிய மரத்தை நெடுக்காகவும் குறுக்காகவும் அறுத்து பலகைகள், சட்டங்கள் செய்வது எப்போதும் நடத்து கொண்டே இருக்கும். மர அறுவைகளின் ‘க்கிர்ர்ர்’ ‘க்றீச்ச்’ சத்தமும் மரத்தூள்களும் காற்றில் எப்போதும் மிதக்கும். அந்த மரவாடி இருந்த இடம்தான் பின்னாளில் கட்டிடமாக மாறி இன்றைய ‘அரசன் மளிகை’ ‘மணி ஜூவல்லரி’ என கடைகளாக உயிர்பெற்றன.

மரவாடியை ஒட்டிய பாதையில் வந்தால் வலதுபுறம் பேருந்து நிலையம், நேராகப் போனால் சாமுண்டீஸ்வரி கோவில் (இந்தக் கோவில் ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது புவனகிரி வட்டாரத்தில். அதை பிறகு பார்ப்போம்!), அதைக் கடந்து நேராகப் போனால் ஐயப்பன் கோவில், கீழமணக்குடி – குறியாமங்கலம் – ஆயிபுரம் போகும் பாதை. இது இன்னும் அப்படியே இருக்கிறது. இதில் நேராகப் போகாமல் பேருந்து நிலையத்திற்குள் போக வலதில் திரும்பி நிலைய கட்டிடத்தைக் கடந்து இடதில் திரும்பினால் தேவாங்கர் தெருவிற்குப் போகும் பெரிய பாதை ஒன்று இருந்தது.

தேவாங்கர் தெருவிலிருந்தும் பேருந்து நிலையத்திற்குள் வந்து அப்படியே கடலூர் மெயின் ரோடை தொட முடியும் என்றிருந்த அந்தக் கால புவனகிரி பேருந்து நிலையத்தில் இருந்த உணவகம் ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ ( ஆரிய பவனோ வேறு என்னமோ பெயரைக் கொண்டிருந்ததா நினைவில்லை, ஆனால் ‘நாராயண ஐயர் ஹோட்டல்’ என்றே அதை பெரும்பாலானோர் அழைப்பர்).
மாலையில் சூடு பறக்க காஃபி குடிக்கவே பலரும் வருவர். கிழக்கு மேற்காக அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகள் இருக்கும் அந்த உணவகத்தில் வயதான ஒரு சர்வர் இருப்பார்.

புவனகிரி பாலத்திற்கும் அரசமரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் டவுன் பஸ்கள் நம்பர் 7, 8 ஆகியவை நிற்கும் இடத்தில் இடப்புறம் இருந்தது ஓர் அசைவ ஹோட்டல். நீண்டு தொய்ந்து போன பனியன் மடித்துக் கட்டிய லுங்கி சகிதமாக தாடியோடு ஒருவர் துணி துவைப்பது போல் குமித்து குமித்து அடித்தும் வலை வீசுவது போல் பிரித்து வீசியும் ஒரு பெரிய கடப்பா கல்லில் பரோட்டாக்களை தயார் செய்து கொண்டிருப்பார். அதைப் பார்க்கவே ஆசையாக இருக்கும், பசியைக் கிளப்பும் ( நான் சைவ உணவு உண்பவன் என்பது வேறு கதை!)

நெஞ்சளவு உயரம் கொண்ட பெரிய இரும்பு ட்ரம் ஒன்றில் விறகுகள் போட்டு தீ மூட்டி மேலே பெரிய இரும்பு தோசைக்கல்லில் வெள்ளை ரப்பரைப் போல வளையம் வளையமாக இருக்கும் அந்த பரோட்டாக்களை பொன்னிறமாகும் வரை சூடாக்கிக் கொண்டிருப்பார் அவர். முட்டை தோசை, பரோட்டா, பாயா, ஆம்லெட் என பட்டியல் இடப்பட்ட பலகை வெளியில் இருக்கும்.

பாலத்திலிருந்து மேற்கில் திரும்பி விஆர்கே டாக்கீஸ், ரங்கராஜா திரையரங்கம் ஆகியவற்றின் சினிமா போஸ்டர்கள் வைக்கப்படும் தட்டிகளைக் கடந்து பெண்கள் பள்ளி, கோவில், ‘லால் அண்ட் கோ’வைக் கடந்து போனால் ராமலிங்க சுவாமி மடம், பழனி செட்டியாரின் ரோஸ்மில்க் கோலி சோடா கடையைக் கடந்து எதிர்ப்புறத்தில் ஒரு சிறு உணவகம் இருக்கும். முதலில் ‘கணேஷ் பவன்’ என்றும் பிறகு வேறு பெயருக்கும் மாறியது.

‘பூரி சாம்பார் – 50 காசு, பூரி – கிழங்கு – 60 காசு’ என்ற விவரங்கள் எழுதப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பலகையை பார்த்து ‘என்னைக்காவது ஒரு நாள் இதை சாப்புட்டு பாக்கனும்!’ என்று சொல்லிக்கொண்டே பள்ளிக்கு நடந்த பலரில் நானும் ஒருவன். அவ்வளவுதான் சாத்தியம் அப்போது. வீட்டில் தரப்படும் 5 காசு, 10 காசு, அதிகபட்சமான சிறு வட்டமான 25 காசுக்கு, உணவகத்தில் சாப்பிடவே முடியாது.  பள்ளிக்கு வெளியே பாட்டிகள் இருவரும் விற்கும் இலந்தை வடை, வற்றல், அவித்த சோளத்துண்டு, தேன் மிட்டாய், சூட மிட்டாய்தான் வாங்க முடியும். (கடைசி வரை அந்த உணவகத்தில் அவற்றை உண்ணவே முடியவில்லை! உணவகம் இன்று வேறு பெயரில் இயங்குகிறது என நினைக்கிறேன்!). ( இன்று நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட நேரும் போது கூட பூரியின் சில துண்டுகளுக்கு வித்தியாசமாக சாம்பாரை தொட்டு முயற்சிப்பதற்கு காரணம் புவனகிரி கடைவீதியில் இருந்த அந்த விலைப்பட்டியல் சிறுவயதில் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம்!)

இப்படியான சூழல் கொண்ட புவனகிரியிலும் சுற்று வட்டாரத்திலும் வெளி உணவகங்களில் உண்போர் என்பவர்கள் குறைவாகவே இருந்தனர். புவனகிரி பள்ளியின் பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவுடனேதான் வருவர் அல்லது வீட்டிற்குப் போய் உண்டு விட்டு வருவர்.

….

இந்த சூழலில்தான் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஒரு புதிய முடிவை இரண்டு திட்டங்களாக அறிவித்தார்.
அது புவனகிரி பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு கிழக்கே நிற்கும் ‘பேரலல் பார்’ ‘புல் அப்ஸ் பார்’ இடத்திற்கு அருகே செயல்படுத்தப் பட்டது.

அது…

(தொடரும்) 

ஈராயிரத்து இருபத்தியிரண்டு, புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
02.01.2022

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *