ஆசிரியரிடம் அடி வாங்கினேன் நேற்று

முப்பத்தியேழு ஆண்டுகள் கழித்து உங்கள் தமிழாசிரியரை ஒரு மேடையில் சந்திக்கிறீர்கள். அங்கேயே மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி அடிக்கிறார். எப்படியிருக்கும் உங்களுக்கு. எனக்கு பெரும் மகிழ்ச்சி!

மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி ஓங்கி அடிக்கிறார். வலித்து இழுத்து விடுவேன் என்று நினைத்து அடித்தவருக்கு அதிர்ச்சி, ‘வலிக்கலியா உனக்கு?’ என்று மறுபடியும் அடிக்கிறார்.

இத்தனையாண்டுகள் கழித்து நமக்கு தமிழ் போதித்தவரை காண்பது ஒரு பேறல்லவே. அவரை அடிக்கச் சொல்லி கையை காட்டி அடி வாங்குவது இன்னும் பெரும் பேறல்லவா? ‘அடிங்க ஐயா!’ என்று விரும்பித்தானே காட்டுகிறேன். எப்படி வலிக்கும்!

அவரின் முதல் நூலான ‘நெருப்பில் மலர்ந்த பூக்கள்’ வெளியீட்டு விழா, இணையத்தில் ஒரு தளத்தில் அவரைப் பற்றி நாம் எழுதிய எழுத்து அந்த நூலில் அணிந்துரையாக சேர்க்கப் பட்டுள்ளது. வேறென்ன தவம் வேண்டும்! (நாம் உண்மையாகவே நன்றாகத்தான் எழுதுகிறோம் போல!)

ஏனோதானோவென்று இருந்த என் போன்ற மாணவர்களுக்கு கல்வியில் ஒரு குவியம் கொண்டு வந்தவர் இந்த தமிழாசிரியர் த ஜெயராமன் ஐயா. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் என் தமிழாசிரியர் இவர்.

(மேடையில் தமிழாசிரியரை நாம் சந்தித்த தருணங்களை எவரோ ஒரு புன்னியவான் பதிவு செய்து, ‘பரமன் சார் அதே மஞ்சள் உடையில் புவனகிரி விழாவில், நூலாசிரியரின் மாணவனாம் அவர்’ என்ற குறிப்போடு சிதம்பரம் தன்னார்வலர்கள் க்ரூப் ஒன்றுக்கு அனுப்ப, அது சொக்கங்கொல்லை அரசுப்பள்ளி ஆசிரியர் அருணாச்சலம் மூலமாக நமக்கு வர… அசந்தே போனேன்! ‘நமக்காகவே யாரோ பதிவு செய்திருக்கிறார்கள் அந்தத் தருணங்களை!’ )

புவனகிரி அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி, தமிழாசிரியரான இவரைப் பற்றி எழுதும் போது அவரை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பழைய நாட்களை உணர்வின் அடர்த்தியோடு எழுதினோம். எழுதும் போது உள்ளெழுந்து உருவான உணர்வு என்னை அவர் முன் இழுத்துக் கொண்டு போய் நிறுத்திவிட்டது.

‘ஆசிரியரிடம் அடிவாங்கியிருக்கிறாயா? எப்போது?’ என்று எவரேனும் கேட்டால், ‘ம்.. நேற்று, பொதுமேடையில் மகிழ்ச்சியாய்!’ என்று சொல்வேன்

  • பரமன் பச்சைமுத்து
    03.01.2022
    சென்னை

NerppilMalarnthaPookkal

Bhuvanagiri

BhuvanagiriSchool

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *