15: புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

15

புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

(சென்ற பதிவில் நாராயண ஐயர் ஹோட்டல் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு ‘கணேஷ் பவன்’ ‘துர்கா பவன்’ என வேறு வேறு காலகட்டங்களில் அவ்வுணவகம் கொண்டிருந்த வேறு பெயர்களையும் இயங்கிய வேறு வேறு இடங்களையும் குறிப்பிட்டு நெகிழ்ந்து எழுதியிருந்தார்கள் நாராயண ஐயரின் வாரிசுகளான பாஸ்கரும், கண்ணனும் துபாயிலிருந்து.

‘அந்த அசைவ உணவகம் பெயர் மதீனா ரெஸ்ட்டாரண்ட்’ என்றும், ‘அது மகபூப்கான் வீடு அல்ல உமர்கான் வீடு’ என்று குறிப்பிட்டும் அனுப்பியிருந்தார் உமர்கானின் மகனான இலியாஸ் பாஷா.

புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஒரு சினிமாவைப்போல் கண் முன்னே விரிவதாகவும் மகிழ்ந்து அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்திருந்தார் கடலூர் சிப்காட்டிலிருந்து சிவகுமார். ‘புவனகிரி பால்ய நண்பர்கள் குழு’வின் முக்கிய தன்னார்வலராம்.)

…..

15

புவனகிரி பள்ளி : காமராசரின் திட்டம் – எம்ஜிஆர் திட்டம் – கீரப்பாளையம் பி.டி வாத்தியார்

🌸

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த, தமிழகத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்திய காமராஜர் மதிய உணவுத் திட்டம் முடிவுக்கு வந்த நேரம் அது.

மிக அருமையான திட்டம் என்றாலும் அதில் நிர்வாகிகளின் செயல்பாடுகளால் குறைபாடுகள் பெருகிய நேரம் அது. ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை தேர்ந்தெடுத்து மொத்தமாக ஒரே இடத்தில் மதிய உணவு சமைத்து, கருப்பு வண்ண கேன்களில் அடைத்து ஜீப்பில் வந்து பள்ளிகளில் சேர்ப்பர். அது பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு மதிய உணவாக பரிமாறப்படும்.

மஞ்சள் மஞ்சேளென்று இருக்கும் கோதுமை உப்புமா, பருப்பு – கதம்ப – சாம்பார் சாதம் போன்றவை காமராசர் மதிய உணவுத் திட்டத்தில் அதிகம் இடம் பெற்ற உணவு வகைகள். பஞ்சாயத்து யூனியன் / மதிய உணவு ஏற்பாட்டாளர்களின் அசிரத்தையால், நாளடைவில் மாணவர்கள் நெளிவது நடக்கத் தொடங்கியது. கோதுமை ரவா பொட்டலங்களை அப்படியே பிரித்து கொட்டி கொதிக்கும் அண்டாத் தண்ணீரில் கொட்டி உப்புமாவாக்கியிருப்பார்கள் போல, பள்ளிகளில் மாணவர்களுக்கு அது வழங்கப்படும் போது அதிலிருந்து பெரிய புழுக்களும் அப்படியே வெந்து பாடமாகி உப்புமாவில் மாணவனின் தட்டில் வந்து சேரும். கவனிக்காமல் உண்டவர்களும் உண்டு (சீனர்கள் உண்பதைப் போல!), கவனித்து ‘உவ்வே!’ என்று எதுகளித்து கூச்சலிட்டவர்களும் உண்டு.

இந்த நேரத்தில்தான் அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார், மாணவர்களுக்கு பல் துலக்கப் பல்பொடியும், மதிய உணவுத் திட்டத்திற்குப் பதில் அந்தந்த பள்ளிகளில் அங்கங்கயே சமைத்து வழங்கும் ‘முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்’ என்ற இரண்டு திட்டங்களை கொண்டு வந்தார். (இதன் அடுத்த நிலையாக ஆரம்பப் பள்ளிகளுக்கு முந்தைய நிலை குழந்தைகளுக்கு உணவளிக்க ‘பால்வாடிகள்’ அதற்கென ‘பால்வாடி டீச்சர்’ எனப்படும் பெண் ஊழியர்கள் எல்லாமும் நியமிக்கப்பட்டதும் நடந்தது).

இந்த சத்துணவு திட்டம் ஆரம்பப் பள்ளிகளிலிருந்து உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கும் அறிமுகப் படுத்தப்பட்டது. அப்படித்தான் புவனகிரி பள்ளிக்குள் வந்தது சத்துணவு. (அடுத்தடுத்து வந்த முதல்வர்கள் அடுத்தடுத்த சங்கதிகளை சேர்த்து ஊட்டச்சத்து மிகுந்த உணவாக வழங்கினர் என்பது நமக்குத் தெரியும்தானே!).

‘பேரலல் பார்’ ‘புஷ் அப்ஸ் பார்’ இருக்கும் இடத்திற்கு அருகில் ஓர் உயரமான ஸடூலில் வைக்கப்பட்டிருக்கும் அலுமினிய / ஈய அண்டாவில் கொதிக்கக் கொதிக்க இருக்கும் சத்துணவு மாணவர்களுக்கு அள்ளி வழங்கப்படும். அதிலிருந்து எழும் வெந்த சோற்றின் மணமும் பருப்பு மணமும் காற்றில் பரவி நிற்கும்.

கீரப்பாளையத்திலிருந்து வரும் உடற்கல்வி ஆசிரியர் நாராயணன் சாரின் மேற்பார்வையில்தான் சத்துணவு வழங்கப்படும் (செந்திலின் அப்பா!).

பி.டி வாத்தியார் கருப்பானவர் ஆனால் காரியங்களால் நம்மை கவர்ந்திழுத்தவர். புவனகிரிப் பள்ளியில் சாயப்பு வாத்தியாருக்கு அடுத்து முழுப் பாதங்களையும் மூடும் வகையிலான ‘ஷூ’ அணிந்தவர் பி.டி வாத்தியார்தான் என்பதாக ஒரு நினைவு. வெள்ளை டி ஷர்ட், வெள்ளை பேண்ட், வெள்ளை ஸ்போர்ட்ஸ் ஷூ என ‘நீட்’டாக வந்து அசத்தும் அவரது கழுத்தில் எப்போதும் ஒரு விசில் தொங்கிக் கொண்டிருக்கும்.
என்சிசி வாத்தியாரின் விசில் உலோகத்தால் செய்யப்பட்டு நீள் வடிவில் இருக்கும். பி.டி வாத்தியாருடையது வேறு வகை, பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட நீலம், கருப்பு வண்ணம் கொண்ட விசில். வாயில் வைத்து ஊதும் போது, அதனுள்ளே இருக்கும் சிறு குண்டு ஒன்று அசுரகதியில் சுழன்று ஊதும் சத்தத்தை சிறப்பாக்தித் தரும். பள்ளியின் எந்த மூலையில் எந்த மாணவன் திரிந்தாலும் இவரது ‘ப்பீய்ய்ர்ழ்ழ்!’ விசில் சத்தத்தில் ‘சுரீர்’ என்று திரும்புவான்.

பி.டி வாத்தியாரோடு பெரும்பாலும் பீட்டர், ஜான் போன்ற மாணவர்கள் சூழ்ந்திருப்பார்கள். சத்துணவை அவரது மேற்பார்வையில் இவர்களே பரிமாறுவர். பிறகு தங்களது தட்டில் போட்டிக்கொண்டு தூங்கு மூஞ்சி மரத்தடியில் அமர்ந்து உண்பர். பீட்டரையும் ஜானையும் சிறப்பாக விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் செய்வார் பி.டி வாத்தியார். (இன்று அவர்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டாவின் மூலம் அரசுப் பணியில் இருப்பதாக சொல்லப்பட்டேன்).

எங்கள் வாழ்வில் அந்த வயதில் முதன்முதலில் ‘ஸ்டாப் வாட்ச்’சை நாங்கள் பார்த்தும் பி.டி வாத்தியாரால்தான். கழுத்து விசிலைப் போல, கை உபகரணம் அது அவருக்கு.

மரத்தடியில் எங்களுக்கு விபிஎஸ் சாரோ, ஜிடி வாத்தியாரோ, ஆர்கே வாத்தியாரோ, சுவாமிநாதன் சாரோ, ஏடி ஐயாவோ வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அந்தப்பக்கம் திடீரென்று சில மாணவர்களை அழைத்து வந்து பாரில் தொங்க வைத்து ‘புல் அப்ஸ்’ எடுக்கச் சொல்லி ‘ஸ்டாப் வாட்ச்’சில் நேரம் கணக்கிட்டுக் கொண்டிருப்பார். எவரையாவது கிரவுண்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஓட விட்டு கையில் இருக்கும் ‘ஸ்டாப் வாட்ச்’சில் நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். இங்கு நடக்கும் வகுப்புகளை விட அங்கு அவர் நடத்துவது சுவராசியமாக இருக்கும் அவ்வேளைகளில்.

பீட்டர், ஜான் போல இன்னும் எத்தனை எத்தனை ஏழை மாணவர்களுக்கு விளையாட்டுகளைப் புகட்டி உருவாக்கியிருப்பார்! ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ மூலம் அவர்கள் உதவியவர் அதிகாரிகளாக உயர்ந்து விட அதன் மூலம் அந்தக் குடும்பத்தின் நிலையே மாற்றம் பெற்றிட எப்பேர்ப்பட்ட உதவிகளை புரிந்திருக்கிறார்!

கீரப்பாளையத்திலிருந்து வந்த அந்த பி.டி வாத்தியார் இன்று எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. உண்மையான உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்த அவர் இன்றும் கண்களில் நிற்கிறார்.

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    07.01.2022

[email protected]

🌸🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *