16: புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம்

புவனகிரி பள்ளி: புவனகிரியின் கத்தி வெட்டு ‘பெராக்கு’ வைபவம்

( ‘பரமன், புவனகிரியில் ஏதோ சமீபத்திய அதிசயம் என்று ஒரு பதிவில் குறிப்பிட்டு விட்டு அதை அப்படியே விட்டுவிட்டீர்களே?’

சரி, இந்த பதிவில் எழுதி விடுவோம்!)

சுமாராக 150 ஆண்டுகள் கொண்ட புவனகிரி சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் ஓர் அதிசயத்தை நிகழ்த்தினர் சமீபத்தில், தெரியுமா?

பக்திப் பரவசமாக வீதியில் வந்து, கைகளை, மார்பினை பெரிய கூரிய கத்தியால் வெட்டிக் கொண்டு மஞ்சளை அள்ளித் தூவி ‘பெராக்கு’ என்று உணர்ச்சி மயமாக கூவிச் செல்லும் புவனகிரியின் முக்கிய வைபவம் தெரியுமா உங்களுக்கு?

…..

புவனகிரி வெள்ளாற்றுப் பாலமும், புவனகிரி சாமுண்டீஸ்வரி ஆலயமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டவை என்றொரு செவி வழிச் செய்தி உண்டு. இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை (தெரிந்தவர்கள் சொல்லலாம்)

மைசூரில் சாமுண்டீஸ்வரி ஆலயம் உள்ளது. ‘அந்த சாமுண்டி ஹில்ஸ்ஸின் (மலையின்) காட்டு மரங்களில்தான் தொங்கித் திரிவேன். பாம்புப் பிடிப்பேன். அப்போதுதான் முதன்முதலில் சமாதி நிலை வரப் பெற்றேன்’ என்று ஜக்கி வாசுதேவ் எப்போதும் குறிப்பிடும் சாமுண்டீஸ்வரி ஆலயம் மைசூரில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். (பெங்களூரில் ஐடி இஞ்சினியராக இருந்த காலங்களில் மைசூருக்குப் பயணித்து, கீழிருந்து மேல் வரை நடந்தே சாமுண்டி மலைகளை அனுபவித்திருக்கிறேன்). கர்நாடகத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான ‘தசரா பண்டிகை’ சாமுண்டீஸ்வரி் வழிபாட்டை ஒட்டி நிகழ்வது என்பது நமக்கு தெரியும். ஆனால், இங்கே புவனகிரியில் எப்படி சாமுண்டீஸ்வரி? யார் கொண்டு வந்தார்கள்?
….

ஓர் ஊரில் என்ன வளம் இருந்தாலும் அந்த ஊரை நோக்கி மற்றவர்களை வரவைப்பதும் அவ்வூருக்கு வருவாயை பெருக்கித் தருவதும் அவ்வூரில் நடைபெறும் வணிகமும் தொழிலுமே. கண்ணதாசனும், கலைஞரும், எம்ஜியாரும் உருவானது சேலத்தில். சேலத்திற்கு அவர்களை இழுத்துப் போனது சேலத்தின் வளமல்ல, சேலத்தை மையமாக வைத்து அந்நாட்களில் இயங்கிய தமிழ்சினிமா தொழில். மாடர்ன் தியேட்டர்ஸ் உட்பட சினிமா நிறுவனங்களும் தொழிலும் சேலத்திலிருந்தன.

வீரப்பாரிலும், திருவாமூரிலும், கொளப்பாக்கத்திலும்தான் சிறந்த பலாவும் முந்திரியும் செந்நெல்லும் விளைகின்றன. ஆனால் அந்தப் பகுதியின் அந்த வணிகத்தை கொண்டிருப்பது பண்ருட்டி என்பதால் அதுவே வருவாய் ஈட்டும் முக்கிய ஊராக உயர்ந்து நிற்கிறது.

புவனகிரிக்கும் இது பொருந்தும். புவனகிரிக்கு வருவாய் சேர்த்து (செலாவணி) உயர்த்திய தொழில் மரபினர்களில் மிக முக்கியமானவர்கள் தேவாங்கர் மரபினர்.

இன்று குடியாத்தத்தில் செங்குந்த மரபினர்கள் நூற்கும் லுங்கிகள் எப்படி சுற்று வட்டாரத்தில் பெயர்பெற்று விளங்குகிறதோ, அதைப் போலவே அந்நாட்களில்
புவனகிரியில் நெய்யப்படும் லுங்கிகள் சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்றிருந்தன. எல்லா வீடுகளிலும் தறி நெய்தல் நடக்கும். ‘உமா பாலிகாட் கம்பெனி’ போன்ற பெயர்களில் வரிசையாக நிறைய, வீட்டுக்கு வீடு நெசவு நடைபெறும் சிறு தொழில்கள் செழித்திருந்தன.

ரவி, மோகன், கார்த்திக், ராஜேஷ் என இந்த மரபின் பிள்ளைகள் எங்களோடு புவனகிரி பள்ளியில் படித்ததைப் போலவே, உங்கள் காலத்திலும் உங்கள் வகுப்பிலும் இந்த மரபினர் படித்திருப்பார்கள்.

….

கொஞ்சம் புராண கதை:

தங்களுக்கு உடுத்த நல்லுடை வேண்டும் என தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் வேண்டினராம். சிவனின் இதயத்திலிருந்து ‘தேவலர்’ என்றொருவர் உருவாக்கப்பட்டாராம். ‘விஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து நூல் கொண்டு ஆடை நெய்து உலகிற்கு தருவாயாக. தேவலரே, உனது வழி வரும் மக்கள் தேவலரின் மக்கள் – தேவாங்கர் என அழைக்கப்படுவர்!’ என்று அருளாசி செய்தாராம் சிவன்.

பாற்கடல் பகுதிக்கு சென்று தவம் செய்து விஷ்ணுவின் அருள் பெற்று ‘பாவு’ நூல் பெற்ற தேவலரை அசுரர்கள் ஏமாற்றி கொல்ல நினைக்கையில், அம்மன் சிங்க வாகனத்தில் சாமுண்டீஸ்வரியாக எழுந்தருளி அசுரர்களிடமிருந்து தேவலரை காத்தாராம். தேவலரின் வழித்தோன்றல்களாகிய தேவாங்கர் மரபினர் சாமுண்டீஸ்வரியை தங்களது குலம் காக்கும் கடவுளாக வணங்கி வருகின்றனர்.

ஏழு பிறவிகள் எடுத்து பணிகள் செய்த தேவலர், ஏழாம் பிறவியில் தேவதாசமய்யன் என்ற பெயரில் வந்தாராம். சிவனுக்கு கோவில் எழுப்ப விரும்பிய தேவதாசமய்யன் சிவனை வேண்டி கேட்ட போது, ராமலிங்கமாக எழுந்தருள இசைந்தாராம். அன்னை சௌடாம்பிகையை உடனுறை தெய்வமாக எழுந்தருள வேண்டிப் பணிய, ‘அழைத்து விட்டு திரும்பிப் பாராமல் போ! வருவேன்!’ என்றாராம். அம்மனின் பாத சிலம்பொலியை வைத்து நடந்து வருவதை அறிந்த தேவதாசமய்யன், திடீரென்று சத்தம் வராமல் போகவே திரும்பி விட்டாராம். நீரில் நடப்பதால் சிலம்பொலி வரவில்லை என்பதை உணராமல் திரும்பிப் பார்த்தால் அன்னை நீரில் மறைந்து விட்டாளாம்.

நீண்ட கூரிய கத்திகளைக் கொண்டு தனது அங்கங்களை வெட்டி சிதைத்துக் கொண்டு ‘தாயே பெராக்கு! தாயே வருக! தாயே வருக!’ என்று வேண்டிப் பணிய, அன்னை சௌடாம்பிபையாக வந்து ஆலயத்தில் எழுந்தருளினாளாம்.

சாளுக்கிய நாட்டிலிருந்து பயணித்து பல ஊர்களிலும் பரவி வசிக்கும் தேவாங்கர் இனத்தினர், தாங்கள் போகுமிடங்களில் தங்களது இனத்தின் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்கும் சௌடாம்பிகைக்கும் சிவனுக்கும் ஆலயமெழுப்பி வழி படுகின்றனர்.

பேக் டு புவனகிரி:

இப்படி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரிக்கு வந்த தேவலரின் மக்களாகிய தேவாங்கர் மரபினர் தங்களை காக்கும் தெய்வமாகிய சௌடாம்பிகைக்கும்,
சாமுண்டீஸ்வரிக்கும் ஆலயமெழுப்பி வழிபடத் தொடங்கினர். அப்படி வந்ததே நம் புவனகிரி சாமுண்டீஸ்வரி கோவில். கோவிலின் உள்ளே சௌடாம்பிகை, சாமுண்டீஸ்வரி என இரு வடிவங்களும் உண்டு.

வெள்ளாற்றிலிருந்து புறப்பட்டு கைகளிலும் மார்பிலும் கத்தி வெட்டு போட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ‘தாயே பெராக்கு’ என்று பக்தியில் உருகும் வைபவத்தை புவனகிரி தேவாங்கர் மரபினர் தொடர்ந்து செய்கின்றனர்.

இப்படி150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்ட புவனகிரி சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு ஒரு சிக்கல் வந்தது. ஆலயத்தை சுற்றிலும் உள்ள சாலை கப்பி கருங்கல் ஜல்லி சாலை, தார்ச்சாலை என மாறி மாறி பல ஆண்டுகளாக வேயப்பட்டத்தில் சாலை மட்டம் உயர்ந்து விட, வழிபடும் கோவில் பல அடிகள் புதைந்து உள்ளே அமுங்கியது போல் ஆனது. சுற்றிலும் உள்ள சாலையை தோண்டுவதும் இயலாது இனி என்ற நிலையில் கோவிலை எப்படிக் காப்பது என்று பெருஞ்சிக்கல் வந்தது.

அப்போதுதான் இதுவரையில் இந்தப் பகுதி மக்கள் கேள்வியே பட்டிராத அறிந்தேயிராத அந்த அதிசயத்தை நிகழ்த்தினர் புவனகிரியில். 150 ஆண்டு கால கோவிலை அளந்து கணக்கிட்டு், மொத்த கோவிலையும் அப்படியே தூக்கி சில அடிகள் மேலே கொண்டு வந்து உயர்த்தி வைத்து விட்டனர். ‘என்னது! ஏற்கனவே இருந்த கோவிலை அப்படியே மொத்தமா அலேக்கா தூக்கி பல அடிகள் உயர்த்தி வச்சிட்டாங்களா?’ என்று அதிசயிப்போருக்கு… ஆமாம்! உயர்த்தித்தான் விட்டார்கள்! அடுத்த முறை புவனகிரி சாமுண்டீஸ்வரி கோவிலை கடக்கும் போது ஒரு நிமிடம் நின்று கவனியுங்கள்.

….

கால மாற்றம் எல்லாவற்றிலும் வருவதைப் போல புவனகிரியிலும் வரும்தானே. இறைவனுக்கு ஒரு தறி, வாழ்வாதார தொழிலுக்கு ஒரு தறி என ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தறிகள் வைத்திருந்த புவனகிரி தேவாங்கர் மரபினரின் வீட்டுத்தறிகள் லுங்கி நெய்வதை விடுத்து விட்டு பட்டுப்புடவைக்கு மாறி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது இப்போது.
….

புவனகிரி பள்ளியில் ஒரு தறி உள்ளது அதைப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கான தறி வாத்தியாரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    மணக்குடி
    15.01.2022

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *