‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’17: ‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’


17

‘புவனகிரி பள்ளி – புவனகிரி பாலம் தொட்ட வெள்ளாற்று வெள்ளம்’

புவனகிரியில் ஓடுவது சுவேத நதி என்கிறார்களே? உண்மையா?
…..

புவனகிரி பள்ளியில் படித்த ஜெயக்குமாரை தெரியுமா உங்களுக்கு? மொத்த புவனகிரிக்கும் தெரியும் அவனை. நான் ஒரேயொரு முறை புவனகிரி பள்ளியில் அவனை பார்த்தாக நினைவு.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து ஆறாவதிலிருந்து ஏழாவதுக்கு வந்த இரண்டாம் நாள். ஆறாவதின் பல பிரிவுகளை களைந்து சேர்த்து ஏழாவதில் நான்கு பிரிவுகளாக மாற்றியிருந்தார்கள். அதனால்தான் முதல் நாள் ஆர் கே வாத்தியாரின் ‘செவன்த் எஃப்’ல் இருந்த நான், அடுத்த நாளிலிருந்து ஏடி ஐயாவின் ‘செவன்த் சி’யில் கொண்டு வந்து உட்கார வைக்கப்பட்டேன். மணக்குடியிலிருந்து என்னுடன் நடந்து பள்ளிக்கு வரும் பாலசரவணன் ‘செவன்த் பி’யில் உட்கார வைக்கப்பட்டான்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு வகுப்பு கூடிய போது, மண்தரையில் எனக்கு அருகில் வந்து அமர்ந்து, ‘நீ மணக்குடிதானே? நடேசன் செட்டியார் வயல்லாம் அங்கதான் இருக்கு. நான் அங்க வந்துருக்கேன். என் சொந்தம்தான்!’ என்று அறிமுகமானவன் ஆறுமுகம்.

‘உனக்கெப்படி தெரியும்?’

‘உங்க ஊர்லேருந்து உன் கூட வர்றானே பாலசரவணன். அவன் ‘செவன்த் பி’ல இருக்கான். அந்த க்ளாஸ்ல என் ஃபிரண்டு ஜெயக்குமார் இருக்கான். சாப்பிடும் போது அவனுங்களை பாத்தேன். அவன்தான் நீ இங்க இருக்கறத சொன்னான்!’

மதிய உணவிற்குப் பிறகு வரும் மாலை இடைவேளையில் அவனை இழுத்துக் கொண்டு எங்கள் வகுப்புக்கு அருகில் வந்திருந்தான் பாலசரவணன். ஆறுமுகம், பாலசரவணன் இருவருமே ‘பரமன், இவன்தான் ஜெயக்குமார்!’ என்று காட்டினார்கள்.

பாலசரவணனோடு கட்டிப்பிடித்து திமிறி மல்யுத்தம் போல ஏதோ ஒரு ‘ஜாலி’ சண்டை விளையாட்டு விளையாடிக் கொண்டே சில நொடிகள் நிறுத்தி என்னைப் பார்த்தான் ஜெயக்குமார். பலரும் பருத்தித் துணி வெள்ளை சட்டையில் இருக்க, பாலியெஸ்டர் வெள்ளை சட்டையில் பளிச்சென்று பார்க்க நன்றாக இருந்தான் ஜெயக்குமார்.

அதன் பிறகு அதே பள்ளியில் படித்தாலும் ஜெயக்குமாரோடு பழகும் நேரடி வாய்ப்பு வரவில்லை எனக்கு.

அந்த ஜெயக்குமார்…

அதற்கு முன்பு புவனகிரியின் முக்கிய வளம் ஒன்றை பார்த்துவிட்டு வந்து விடுவோம்.

……

‘நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்’ என்று பாடிய ஔவைக்கு புவனகிரி பட்டு சால்வை ஒன்றை போர்த்தி பூங்கொத்து தர வேண்டும்.

புவனகிரிக்கு வனப்பையும் வளத்தையும் தந்து பல நூற்றாண்டுகளாகக் காத்துக் கொண்டிருப்பது, வட வெள்ளாறு என்று அரசின் பதிவில் இருக்கும் வெள்ளாறு. (‘ஆடு தாண்டும் காவிரி’ என்ற தமிழின் பதத்திற்கு இணையான கன்னட ‘மேக்கே தாட்டூ’வை மடத்தனமாக ‘மேகதாது’ என்று தவறான சொல்லாக்கி அதையே மக்களையும் சொல்ல வைத்துவிட்ட ‘ஊடக மடையர்களை’ப் போலவே, ‘வெள்ளாறு’ என்பதை ‘வெள்ளார் Vellar’ என்று எழுதுகிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர். விவரம் தெரியாத சில அதிகாரிகளின் இவ்வகை செய்கைகளால் ஆற்றின் பெயரே மாறிவிடலாம், ‘அமைந்தகரை’ இப்போது அரசு இதழ்களில் ‘அமிஞ்சிக்கரை’ ஆனது போல.

புவனகிரி அரிமா / ரோட்டரி / இலக்கிய / சமூக சேவை அமைப்புகள், வெள்ளாற்றின் பெயரை குறிக்கும் அந்த பச்சைப் பலகையில் உள்ளூர் அதிகாரியோடு கலந்து பேசி ‘வெள்ளாறு Vellaru’ என்று ஸ்டிக்கர் ஒட்டலாம் என்பது என் பரிந்துரை.
இப்படித்தான் முல்லைப் பெரியாறு என்பதை ‘Mullai Periyar’ என்று 50% மாற்றி விட்டார்கள்)

புவனகிரியை அணைத்துக் கொண்டு ஓடும் வெள்ளாற்றை புனிதமாகவே கருதி வழிபட்டுள்ளனர் புவனகிரி வாழ் மக்கள் சென்ற தலைமுறை வரையில்.

‘வெள்ளாத்துல தண்ணி் இருக்கும் போதே முழுகி மூச்சப்புடிச்சிட்டு உள்ள போயி மண்ணெடுத்துட்டு வந்துதான் அந்த பாலத்தை கட்டினோம் நாங்க!’ என்று மணக்குடி ஆரிமுத்து உடையார் தன் பிள்ளைகளிடம் சொன்னதாக செவிவழிச் செய்திகள் உண்டு.

மழைக்காலங்களில் நீர் மிகும், மற்ற காலங்களில் வறண்டிருக்கும் என்று அரசுக்குறிப்புகள் இருக்கும் போதும், ‘பரமன், புவனகிரிகிட்ட மட்டும் அந்த பெல்ட்ல எப்பயும் வெள்ளாத்துல தண்ணி இருந்துகிட்டே இருக்கும். வரிசையாய் அத்தனை ஊற்று இருக்காம் பெரியவங்க சொல்வாங்க!’ என்று வெள்ளாற்றைப் பற்றி பகிர்கிறார் நாரயண ஐயரின் மகன் கண்ணன் துபாயிலிருந்து.

….

சேரர்களின் வசம் சில காலம் இருந்த மலைப்பகுதி என்பதால் ‘சேரளம்’ என்றழைக்கப்பட்டு, பிரித்தானிய கலெக்டரின் ஆட்சியில் ‘சேரளம்’ என்பது பிரித்தானிய உச்சரிப்பில் ‘சேழளம்’ ஆகி பிறகு ‘சேலம்’ என மறுவி பெயரிடப்பட்ட அந்தப் பகுதியின் மலைத் தொடரான சேர்வராயன் மலைகளில் உருவாகி
தமிழ்நாட்டின் மற்ற ஆறுகளைப் போல கிழக்கு நோக்கிப் பாய்ந்து பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் பாய்ந்து பரங்கிப்பேட்டையில் வங்காள விரிகுடாவில் கலக்கும் வெள்ளாறு புவனகிரி வழியே ஓடுகிறது.

‘பரமன், புவனகிரியில் ஓடுவது சுவேதா நதி என்கிறார்களே, வெள்ளாறு இல்லையா?’

சென்னை ஸ்டெர்லிங் ரோடு சிக்னலிலிருந்து நுங்கம்பாக்கம் சாலை என்ற பெயரில் போகும் அதே சாலை, குறுக்கிடும் அண்ணா மேம்பாலத்திற்கு அந்தப் பக்கத்திலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை எனப்படுகிறது. சேத்தியா தோப்பு பாலத்திலிருந்து வரும் பாதை ஓஎன்ஜிசி, பெருமாத்தூர், புவனகிரி பள்ளி எல்லாம் கடந்து ஊருக்குள் வந்ததும் ‘புவனகிரி கடை வீதி’ என்றாகிறது, புவனகிரி கடை வீதி என்பது புவனகிரி பாலம் சந்திப்பிலிருந்து கடலூர் மெயின் ரோடு என்று ஆகிறது. இல்லையா? ஒரே சாலைதானே! அதே கதைதான் வெள்ளாற்றிலும்.

ஆத்தூருக்கருகில் உருவாகும் வசிட்ட நதி, மணிவிழுந்தான், பட்டுத்துறை, தலைவாசல் என பயணித்து, கிழக்குத் தொடர்ச்சி மலையின் பச்சைமலையில் உருவான ‘சுவேதா ஆறு’ (சுவேத நதி) என்ற ஆற்றில் கலந்து, தொடர்ந்து பாய்ந்து அயன் பேரையூர் அருகே ‘கல்லாறு’ என்னும் ஆற்றில் கலந்து வெள்ளாறு என்ற பெயராகி தொழுதூர் அணை, விருத்தாசலம் அணை, சேத்தியாதோப்பு அணை கடந்து புவனகிரிக்கு வந்து வளப்படுத்தி பரங்கிப்பேட்டையில் வங்காள விரிகுடாவில் விழுந்து கலக்கிறது.

….

1992ல் கிழக்குத் தொடர்ச்சி மலை, சேர்வராயன் மலைகளில் பெய்த பெருமழையால் அது வரையில் இல்லாத அளவிற்கு ஒரு பெருவெள்ளம் வந்தது வெள்ளாற்றில். வெள்ளமென்றால் அப்படியொரு வெள்ளம். சிதம்பரம் வண்டி கேட் தாண்டி கஞ்சித் தொட்டி போகும் வழி வரையில் நீர் ஏறி் நிற்குமளவிற்கு வெள்ளம்.

சுழித்துக் கொண்டும், நுரைத்துக் கொண்டும் பெருவேகமெடுத்தும் ஓடிய நீர் அப்போதிருந்த புவனகிரி வெள்ளாற்றுப் பாலத்தை கிட்டத்தட்ட தொட்டுக் கொண்டு போனது என்றால் வெள்ளத்தின் அளவையும் அதன் வேகத்தையும் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம் (பார்க்க படம்).

குளிக்க, குடிக்க, புழங்க, மகிழ, மனமாற என எல்லாவற்றுக்கும் வெள்ளாற்றோடே கலந்திருந்த அந்நாளைய புவனகிரி மக்களுக்கு, வெள்ளாற்றின் பெரும்பிரவாகமும் ஆர்ப்பரிப்பும் அளவிடமுடியா ஆர்வத்தையும் உற்சாகத்தையும் உண்டாக்கி விட, பாலத்தின் இம்முனையிலும் அம்முனையிலும் சிறியவர் பெரியவர் என மக்கள் கூடி கூடி பார்த்து வியந்து மகிழ்ந்தனர். செல்ஃபோன்கள் வராத படமெடுக்க புவனகிரியில் ‘சேகர் ஸ்டியோ’ மட்டுமே இருந்த அந்நாட்களில் நேரடியாக கண்களால் வெள்ளாற்றின் பொங்கும் புனலை ரசித்து விழுங்கினர்.

புவனகிரியின் பதின்ம வயதினர்கள் சிலர் கீரப்பாளையம் முனையில் கூடினர். உற்சாகம் கொண்டனர். நாம் முற்பகுதியில் குறிப்பிட்ட ஜெயக்குமார், கார்த்தி, கணேசன் ஆகியோரும் அங்கிருந்தனர். ‘ஏய்… இந்த வெள்ளத்துல இங்க பாலத்திலேருந்து குதிச்சி அங்க பட்டுத்துறையில போய் ஏறினா எப்படி இருக்கும்?’ யாரோ உற்சாகமூட்ட. காய்ச்சலில் இருந்த ஜெயக்குமார் உட்பட மூவரும் அந்த சாகசத்தை செய்ய உந்தப்பட்டனர்.

புவனகிரி முனைக்கு வந்து பார்த்து தெரிந்தவர்கள் இருப்பதால் மறுபடியும் கீரப்பாளையம் முனைக்கே சென்றனர். தங்கள் செருப்புகளை நண்பனொருவனிடம் கொடுத்து விட்டு கணேசன், ஜெயக்குமார், கார்த்தி என மூவரும் குதித்தனர்.

ஆறு அழகானதுதான், வளம் சேர்க்கும்தான். ஆனால் அதே ஆறு பொங்கும் புனலும் சுழியும் கொண்டு வெள்ளமாய் அடித்துப் போகும் போது உள்ளே இறங்கினால் என்ன செய்யும்? நீரோட்டத்தில் முதலில் மாட்டி தன் கட்டுப்பாட்டை இழந்த கணேசன் குதித்தது தவறு என்று அறியும் வேளையில் ஆறு அவனை எடுத்துக் கொள்ளத் தொடங்கியது. அந்த நேரத்தில் கணேசன் எழுப்பிய மரண ஓலம் கார்த்தியையும் ஜெயக்குமாரையும் உலுக்கியது.

ஏற்கனவே காய்ச்சலில் இருந்த ஜெயக்குமார், நீரில் சிக்கி கைகளாலும் கால்களும் உதைத்து உதைத்து ஓய்ந்து போய் பயத்தில் கதறத் தொடங்கினான். அடித்துக் கிழித்துக் கொண்டு போகும் நீரின் அசுர வேகத்தில் ஜெயக்குமாரின் லுங்கி அவிழ்ந்து கால்களில் சிக்கிக் கொள்கிறது. ‘ஐயோ… கார்த்தி…’ என்று கதறல் வருகிறது.

செய்தது பெருந்தவறு என மூவரும் உணர்ந்த வேளைக்குள் நிறைய நடந்து விட்டது. நீரோட்ட போக்கிலே தன் உடலை விட்டு மிதந்து சென்ற கார்த்தி ஒரு கையால் ஜெயக்குமாரை பற்றிக் கொண்டு தொடர்ந்து நீரின் ஓட்டத்தில் உயிரோடே மிதக்க முயற்சிக்கிறான்.

‘ஈசனருள் இருந்தால் இடி விழுந்தவனும் எழுந்து போவான். ஈசனருள் இல்லையென்றால் இடறி விழுந்தவனும் இறந்து போவான்!’ என்று ‘பாண்டவர் பூமி’ காவியத்தில் எழுதியிருப்பாரே கவிஞர் வாலி, அது அங்கு நடக்கிறது. சரியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் விதியோ, காலனோ, வெள்ளமோ எதுவோவொன்று அங்கு வந்து கார்த்தியின் லுங்கியை அவிழ்த்து விட்டது. கார்த்தியின் கால்கள் சிக்குகின்றன. விரிந்து தடுக்கும் லுங்கியால் உடல் திரும்புகிறது. ‘ஐயோ… இது பிரச்சினை!’ என்று உணர்ந்து ‘லுங்கியை கழற்றி நீரில் விட்டுவிடுவோம்!’ என்று மின்னல் வேக முடிவெடுத்த கார்த்தி லுங்கியை அவிழ்க்க சில விநாடிகள் ஜெயக்குமாரின் கைகளை விடுவித்த போது மொத்தமும் மாறிப்போனது. ஜெயக்குமார் நீரில் வெகுதூரம் போய் விட்டான். கணேசனின் குரலும் தேய்ந்து காற்றில் அடங்கியே விட்டது.

சௌராஷ்ட்டிரா துறையருகில் களைத்து நடுங்கி அதிர்ச்சியில் உறைந்து கார்த்தி மட்டும் கரையேறினான். கரையேறியவனை கைகொடுத்து முதலுதவி செய்யாமல் காவல்துறை கொத்தாக அள்ளிக் கொண்டு போனது.

எங்கு தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. நண்பர்களின் கடைசிக் குரலும் கடைசிக் காட்சிகளும் கார்த்தியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தன பல நாட்களுக்கு.

கீரப்பாளையம் சைக்கிள் கடை ஆளவந்தாரும் இப்படித்தான் வெள்ளாற்றில் குதித்து கரையேறினான் என்றும் மேல் புவனகிரி பன்னு ராமலிங்கம் குதித்து, சுடுகாட்டு கொட்டகையின் கூரையில் ஒட்டிக் கொண்டு ஒதுங்கி இருந்தான், கயிறு போட்டு காப்பாற்றப்பட்டான் என்றெல்லாம் பிறகு செய்திகள் வந்தன.

புவனகிரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த போது பாலசரவணன் கூட கட்டிப்பிடித்து ‘ஜாலி’ சண்டை போட்டுக் கொண்டு என்னைப் பார்த்த அந்த ஜெயக்குமாரை நான் அதன் பிறகு பார்க்கவே இல்லை.

ஐந்து நாட்களுக்குப் பிறகு பெரியபட்டு பகுதியில் கடற்கரையில் ஜெயக்குமாரின் ஒதுங்கிய உடல் கண்டெடுக்கப்பட்டது. கணேசன் உடல் கிடைக்கவே இல்லை. ஆழி மீன்களுக்கோ ஊழிக்கோ உணவாகிப் போனான்.

கார்த்தி இரண்டாம் வாழ்க்கை பெற்று புவனகிரியில் பட்டு வணிகம் செய்து கொண்டிருக்கிறான். புவனகிரி மாந்தர்களின் நினைவுகளில் ஜெயக்குமாரின் பெயரை ஆழமாக எழுதிவிட்டு எதுவுமே நடக்காதது போல ஓடிக்கொண்டிருக்கிறது வெள்ளாறு.

(அடுத்த அல்லது அதற்கடுத்த வாரத்தில் நிறைவடையும்)

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    23.01.2022

[email protected]

..



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *