18 : ‘புவனகிரி பள்ளி : தறி கூடம்’

*18*

*’புவனகிரி பள்ளி : தறி கூடம்’*

புவனகிரி பள்ளி அரசுப் பள்ளிதான், ஆனால் அதில் இங்கிலீஷ் மீடியம் இருந்தது தெரியுமா உங்களுக்கு?

(சென்ற பதிவைப் படித்து விட்டு ‘பன்னு ராமலிங்கம் கூரை மேல உட்கார்ந்தது, இந்த ரெண்டு பேரு இறந்து போனது பத்திதான் அப்ப மொத்த புவனகிரியும் பேசிச்சு பரமன்!’ என்று இ கே சரவணன் எழுதியிருந்தார்.

ஜெயக்குமார், கணேசனோடு ஆற்றில் குதித்துப் பிழைத்த மயில் பட்டு கார்த்தியும் உணர்வுகளை பகிர்ந்திருந்தார்.

‘புவனகிரி பற்றிய உங்கள் தொடரைப் படிக்கும் போது பழைய நினைவுகளும் ஆனந்தமும் வருகிறது’ என்று ‘D Natural’ என்ற பெயரிலிருந்து மின்னஞ்சல் ஒன்றும் வரப் பெற்றேன்)

….

*18*

*’புவனகிரி பள்ளி : தறி – ஓவியம்’*

முந்தைய பதிவொன்றில் – ‘புவனகிரி பள்ளியில் ஒரு தறி உள்ளது அதைப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கான தறி வாத்தியாரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்டிருந்தோம்.

பெருமாத்தூர் சாலை, பெரிய ஆலமரம், அதையொட்டி நுழைவாயில், வலது புறம் பதினொன்றாவது பன்னிரெண்டாவதற்கான வகுப்புக்கள் கட்டிடம் கடந்தால் எதிரில் புவனகிரிப் பள்ளியின் மெயின் கட்டிடம், அதைக் கடந்து வடக்கு நோக்கி நகர்ந்தால் முதலில் வேல்முருகன் போன்றோர் படித்த ‘இங்கிலீஷ் மீடியம்’ கொட்டகை, அதைக் கடந்தால் வடகிழக்கில் இருக்கும் நீண்ட கட்டிடத்தில் இருந்தது அவரது தறி கூடம்.

வாசலுக்கு நேரே மர நாற்காலியும் மர மேசையும் போட்டு தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார் தறி வாத்தியார். அரைக்கை சட்டை, ‘காலா’ படத்தில் ரஜினி அணிவது போல காவி வண்ணத்திலோ கறுப்பு வண்ணத்திலோ வேட்டி சகிதமாக (சபரிமலை போற நேரத்தில பாத்துட்டு உள்ள பதிய வச்சிட்டமோ நாம!) இருப்பார். அகன்ற நாசி, சராசரி உயரம், தடிமனான உடல்வாகு, நல்ல தலைமுடி என்ற தோற்றத்தில் இருப்பார் தறி வாத்தியார்.

உயரமான வாட்டசாட்டமான உடல்வாகும் ஸ்டெப் கட்டிங் வகை காது மூடிய சிகையும் கொண்டு ‘ட்ராயிங் மாஸ்டர்’ எனப்படும் ஓவிய வாத்தியாரும் தறி வாத்தியாரும் வகுப்புகளை பங்கிட்டுக் கொள்வர்.

திருவள்ளுவரை அநாயசமாக சில கோடுகளில் வரைந்து காட்டி அசர வைப்பார் ஓவிய வாத்தியார் (நாகராஜன்!?).

சட்டையை கழற்றி வைத்துவிட்டு கை வைத்த வெள்ளை பனியனோடும் இடுப்பு வேட்டியோடும் தறிக்குழிக்குள் இறங்கி, மேலே தொங்கும் அந்த குமிழைப் பிடித்து ஆட்டி கால்களால் ஏதோ செய்து கொண்டு ‘ஸ்ட்டாக் க்ளாக்டாக்!’ என சத்தம் வரும்படி தறியை இயக்கிக் காட்டினார் தறி வாத்தியார் (‘தறி அடிச்சாரு!’). ஒரேயொரு முறை அதை பார்த்திருக்கிறேன் படித்த மொத்த காலத்திற்கும்.

அவர் தறிக்குழியில் இறங்கி தறி அடித்ததும், அந்த்த் தறி ஏற்படுத்திய அந்த சத்தமும்…
அந்த வயதில் அதுவொரு பெருவியப்பு, நாமே இறங்கி தறியை நெய்து துணியாக்கி பெருமாத்தூர் ஈசுவரன் கோவில் சிவனுக்கு சார்த்தியது போலொரு மகிழ் உணர்வு.

( ‘உமா பாளையகாட்’ ரவி போல தேவாங்கர் தெருவிலிருந்து வருவோர் ‘இதெல்லாம் எங்களுக்கு தெரியும். இண்ட்லயே தறி உந்தி!’ என்று நிற்பர்.  மற்ற எங்களுக்கு தறி ஒரு புது அனுபவம்)

சில பீரியட்கள் போவதே தெரியாமல் திடீரென்று முடிந்து விடும். சில வகுப்புகள் நகரவே நகராது. சாயப்பு வாத்தியார் வகுப்பு முதல் வகை. ஒரேயொரு முறைதான் அனுபவித்திருந்தாலும் தறி வகுப்பும் அப்படியே.

தறி அடித்ததைப் பார்த்து விட்டு 
வாயெல்லாம் பல்லாக வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

….

இந்த காலகட்டத்தில் யாதவத் தெருவிலிருந்து புது ‘ஹீரோ’ சைக்கிளில் வரும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அடர்த்தியான தலைமுடியை இடதில் வகிடெடுத்து வலது பக்கமாக தள்ளி வாரியிருப்பார். புவனகிரி பள்ளியில் எல்லாருக்கும் தெரியும் அவரை, ஆனால் எந்த வகுப்பிற்குமானவர் அல்ல அவர்.

பள்ளியின் வடகிழக்கு பக்கத்தில் ( தறி கூடத்திற்கு அடுத்து) ஓர் அறையிலிருந்து இயங்குவார் அவர். இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்… ஆமாம்! ‘புக் பைண்டிங் வாத்தியார்!’  ‘என்னது புக் பைண்டிங் பன்றதுக்கு ஒரு வாத்தியாரா? ஒருவேளை லைப்ர்ரியனைத்தான் அப்படி குறிப்பிட்டாங்களோ!’ என்று இன்றைய பக்குவத்திலிருந்து அன்றைய நாளை திரும்பிப் பார்த்துக் கேட்கலாம். அன்று அதெல்லாம் நமக்குத் தெரியாது, ‘புக் பைண்டிங் வாத்தியார்!’ அவ்ளோதான்.

புவனகிரி பள்ளியில் படித்து முடித்து பொறியியல் படித்துக் கொண்டிருந்த காலங்களில், கட்டம் போட்ட லுங்கி தரித்தபடி புவனகிரி கடைத்தெருவில் அவர் சைக்கிளில் போவதை சில முறைகள் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.

சில மாதங்களுக்கு முன்பு புவனகிரி அரிமா சங்கத்தினரின் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஒன்றில் மணி ஜூவல்லரி ஜெகனுக்கு பக்கத்தில் நின்று அட்டகாசமாய் சிரித்தபடி இருக்கும் அவரின் படம் ஒன்றை ஒரு பகிர்வில் பார்க்க நேர்ந்தது. அப்படியே இருக்கிறார், கருகரு மீசை முற்றிலும் மழிக்கப்பட்டுள்ளது, தலைமுடி  வெளுத்து விட்டது என்பவை தவிர.

உங்களுக்கு அவரை நினைவில் இருக்கிறதா?

….

நல்ல குண்டாக, ஆனால் அந்த உருவத்திற்கு சம்மந்தமேயில்லாத சூப்பர் சுறுசுறுப்பாக இருந்த புவனகிரி பள்ளியின் ஓர் ஆங்கில வாத்தியாரை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

(தொடரும்)

– பரமன் பச்சைமுத்து
சென்னை
29.01.2022

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *