19: புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’புவனகிரி – பள்ளி : அடிக்கும் வாத்தியார்’

19

புவனகிரி – பள்ளி : ஆசிரியர் நினைவுகள்’

🌸

புவனகிரி பள்ளியில் அடிக்கும் வாத்தியார் எவரையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா? அடி வாங்கியிருக்கிறீர்களா அல்லது எவனாவது அடி வாங்குவதை பார்த்து ஒடுங்கி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறீர்களா?

‘கொசகொச’வென்று பேசிக் கொண்டிருக்கும் வகுப்பில், ஒருவனுக்கு ‘பொளிச்’சென்று அடி விழுந்தால், மொத்த வகுப்பும் சப்தநாடிகளும் ஒடுங்கி முதுகின் முள்ளந்தண்டு ‘சர்க்’கென்று விறைத்து நிமிர்ந்து உட்காரும்தானே. ஆசிரியர் அடித்தற்கெல்லாம் அதிகம் பிரச்சினைகள் வராத காலம் அவை. ஆசிரியர்களுடம் அப்படி அடி வாங்கியதாலேயே நாங்கள் வார்க்கப்பட்டு இன்று நன்றாக வாழ்கிறோம் என்று அழுத்தமாக சொல்லும் தலைமுறைகளும் உண்டு. ‘கண்ண மட்டும் வுட்டுட்டு தோலை உறிச்சிடுங்க இவனை!’ என்று சொல்லியே ஆசிரியரிடம் விட்டனர் பெரும்பாலான பெற்றோர்கள் போன தலைமுறையில்.

சில ஆசிரியர்களைப் பார்த்தாலே ஹரி படத்து வில்லன்களைப் போல பயங்கரமாக இருப்பார்கள், ஆனால் பழகினால்தான் தெரியும் ‘மெல்லின’மானவர்கள், பயப்படத் தேவையில்லை என்று. சில ஆசிரியர்கள் ‘தனி ஒருவன்’ வகை, ‘மெல்லின’மாகத் தெரியும், இறங்கி்’வல்லின’மாக மாறி பொளக்கும். பார்த்தால் ‘இவரெல்லாம் அடிக்கவே மாட்டாரு!’ என்று எண்ணத் தோன்றும், ஆனால் இறங்கினால் ‘சுரீர்’ ‘சுரீர்!’ என்று இறக்கி மொத்த வகுப்பின் ஈரக் குலையையும் நடுங்க வைப்பார்கள்.

அப்படியோர் ஆசிரியர் இவர்.

நிறத்திலும் தலை முடியமைப்பிலும் குண்டு முகம் ஆனால் சின்ன கண்கள் என எல்லா வகையிலும் ‘வெயிட் போட்ட ரஜினி’ என்று சொல்லும் படி தெரிவார் ஒரு சாடையில் (சரிங்க, அந்த வயதில் எங்களுக்கு அப்படி தோன்றியது போல!)

சென்ற வாரக் கேள்விக்கு நிறைய பேர் ‘ஜெனார்த்தனன் சார்!’ என்று சரியாக பதில் அனுப்பியிருந்தீர்கள். ஆமாம், ‘ஏ ஜெ’ எனப்படும் ஜனார்த்தனன் சார், அவரைத்தான் குறிப்பிடுகிறோம் இங்கே.

தோள்பட்டையிலிருந்து இடுப்பு வரை ஒரே அளவு எனும்படியான உடலைக் கொண்டிருப்பார். அவ்வளவு பெரிய உருவம், ஆனால் மிகச்சிறிய ‘லஞ்ச் பாக்ஸ்’ எடுத்துக் கொண்டு சிதம்பரத்திலிருந்து பஸ்ஸில் வருவார்.

மேல் நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் அவர் என்றாலும் ஜெனார்த்தனன் ஐயா போலவே சில உயர் நிலை வகுப்புகளுக்கும் பாடம் எடுத்தவர் இவர். பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களால் கொண்டாடப்படும் இவர், எங்களுக்கு ‘டென்த் பி’யில் ஆங்கிலம் எடுத்தார், எடுத்தார் என்பதை விட கூடவே சிலரை கை சிவக்க அடித்தார் என்று சொல்லலாம்.

மேலக்குறியாமங்கலத்திலிருந்தோ, சாத்தப்பாடியிலிருந்தோ வரும் உதயகுமார், தேர்வு விடைத்தாளில் ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதத் தெரியாமல் தவறாக எழுதி விட, அந்த ‘ஸ்பெல்லிங்க்’கில் பெயரே இல்லாமல் குழம்பி தவித்து எரிச்சலடைந்து வகுப்புக்கு வந்தவர், அது உதயகுமாரின் தாள் என்று தெரிந்து கை நீட்டச் சொல்லி, அட்லீ படத்தில் ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று சொல்லி சொல்லி விஜய் அடிப்பது போல, ‘ஊத்துக்குமார், ஊத்தாகுமார்… என்ன ஊத்தாக்குமார்… பேரு கூட எழுதத் தெரியாம டென்த் வந்துட்ட!’ என்று அவன் கையில் சுரீர் என்று இறங்கிய பெரம்பால் இன்னும் நினைவுகள் கூட சிவந்தே இருக்கின்றன.

அவர் உருவத்துக்கு சம்மந்தமே இல்லாத அளவுக்கு அத்தனை சுறுசுறுப்பு கொண்டவர் ஜெனார்த்தனன் சார். அதிராமல் பேசுவார், ஆனால் அடிக்கும் போது மட்டும் ‘பீட்டர் பார்க்கர்’ ‘ஸ்பைடர் மேன்’ ஆக உருமாறுவதைப் போல குபீர் ஆற்றல் பெற்று காடு கொள்ளா மிரண்ட சாதுவாக அடித்தாடுவார்.

எங்களையெல்லாம் அடிக்க மாட்டார் என்பதற்காக மட்டுமில்லை, நிறைய மற்ற சங்கதிகளுக்காக அவரை பிடிக்கும் எங்களுக்கு. சபரி மலைக்கு மாலை போட்டிருந்த போது நீல நிற வேட்டியில் அவரை பார்த்தாக நினைவு. ஜனார்த்தனன் சாரை மறக்க முடியவில்லை.

சிதம்பரத்தில் ஏதோ கடை வைத்து வணிகம் செய்கிறார் என்று யாரோ சொன்னார்கள். சிதம்பரத்தில் அவரை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஒரு வகுப்புத் தோழனிடம், ”பரமன் எங்கிருக்கான்?’ என்று விசாரித்தார் ஜனார்த்தனன் சார்’ என்று கேள்விப்பட்டதும் உண்டான வியப்பு இன்னும் அடங்கவில்லை. ‘நம்மள எல்லாம் தெரியுமா, நினைவில் வச்சிருக்காரா?’ என்று முதலில் வியந்தேன். இன்று வேறு தெளிவு கொள்கிறேன்.

நேரில் போய் நின்றால் உருமாறி நிற்கும் நம்மை ஆசிரியர்களால் அடையாளம் காண முடியாமல் போகலாம். ஆனால், அன்று நாம் கொண்டிருந்த அந்த உருவத்தையும் நிகழ்வுகளையும் அப்படியே தங்களது நினைவுகளில் உறைய வைத்துக் கொண்டு உலாத்துகிறார்கள், வாழ்கிறார்கள் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு ஆசிரியருக்குள்ளும் ஓராயிரம் மாணவர்களின் நினைவுகள், ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் ஓராயிரம் நினைவுகள். ஒரு வகையில் நினைவுகள்தானே வாழ்க்கை. வரலாறு என்பதே நினைவுகள்தானே, நிகழ்ந்த நிகழ்வுகளின் நினைவுகள்தானே! தீயில் காயம்பட்ட ஷகனாரோவை ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை செய்து அப்பன் ஷாஜகானிடம் இலவச வியாபார உரிமம் பெற்றான் கோழிக்கறிக்கு மிளகு வாங்க கப்பலில் வந்த கிழக்கிந்திய வணிகன் மைக்கேல் பௌட்டன் என்பது அன்றிருந்தவர்களின் நினைவுதானே, அது பதியப் பெற்றதும் வரலாறு ஆனது.

இதோ இன்று காலை ஹைதராபாத்தில் மோடி திறந்து வைத்தாரே 216 அடி உயரத்திற்கு ஒரு சிலை, அந்த ராமானுஜரின் கதையும் அதுதானே. சுல்தானின் மகள் திருவரங்கம் பெருமாள் சிலையை டெல்லிக்குக் கொண்டு போனதும், மல்லன் உறங்கா வில்லிதாசனோடு டெல்லிக்கே போய் சிலையை அவர் மீட்டு வந்ததையும், சிலையைப் பிரிந்த காதல் துன்பத்தில் டெல்லியிலிருந்து திருவரங்கத்தில் வந்து உண்ணாமல் உறங்காமல் தவித்த அந்த ராஜகுமாரி கடைசியில் இங்கேயே இறந்து போய் ‘ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார்’ ஆனதையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயணித்துப் போய் நம்மில் எவர் பார்த்தார்? அன்றிருந்த, கண்ட, கேட்டவர்களின் நினைவு பதிவாகி வரலாறாகி இதோ 216 அடி உயர சிலையாக குறியீடாக நிற்கிறது.

எனக்கு எல்லாமுமாக இருந்த என் தந்தை மு பச்சைமுத்து, பூசையில் கலந்து கொள்ளப் போகும்போதெல்லாம் ‘இடுப்பில் துண்டு கட்டு’ என்பார். தந்தை இறந்து இரண்டாண்டாகியும் ஒவ்வொரு மாத அமாவாசை மதியம் இலையிட்டு அன்னம் படைக்கும் போதெல்லாம், ‘சிவா! இடுப்புல துண்டு கட்டு!’ என்று அவர் குரல் என் மண்டைக்குள் ஒலிக்கிறது. என் தந்தை உடல் விட்டு பிரிந்து சிவபுரம் போய் சிவனிடம் சேர்ந்துவிட்டாலும், என் நினைவுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார். நான் வாழும் வரை என் நினைவுகளில் என்னோடு என் தந்தையும் வாழ்வாரே.

வாழ்ந்த வாழ்க்கை என்பது நினைவுகள்தானே. நினைவுகள்தான் உண்மையில் வாழ்க்கை. புவனகிரி பள்ளி, நீங்கள், நான், நாம் படித்த வகுப்புகள், அந்த ஆசிரியர்கள், அந்த விளையாட்டு மைதானம், தமிழ் ஐயா, வாங்கிய அடி, வாங்கிய மதிப்பெண், புவனகிரி வெள்ளம், வெள்ளாற்றில் குதித்த சின்னு ஜெயக்குமார் என எல்லாமே நினைவுகள்தான். ‘நினைவே ஒரு சங்கீதம்’ என்ற தலைப்பை திரைப்படத்துக்காக சிந்தித்தானே அவனுக்கு ஒரு பூங்கொத்து தர வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவனை, அவன் பற்றிய நிகழ்வுகளை உள்ளே பொதித்து வைத்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள். பெயர் மறந்து போயிருக்கலாம், ஊர் மறந்து போயிருக்கலாம், இன்று எதிரில் போய் நின்றால் முற்றிலும் தெரியாத வேறொரு நபராய் தோன்றலாம். ஆனால், அந்நாளைய அந்த நம் முகங்களும் உருவங்களும் நிகழ்வுகளும் அவர்களின் உள்ளே இருக்கவே செய்கின்றன. மூளையின் ஏதோவொரு மடிப்பிலோ நெஞ்சுக்கூட்டிலோ அதை வைத்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள். ஆழ்ந்த அவர்களது உறக்கங்களில் அடையாளம் தெரியா அந்த நம் அந்நாளைய முகங்கள் வரலாம். அவர்களை கட்டியணைத்து நாம் விளையாடுவதாய் வாஞ்சையோடு வருடுவதாய் அவர்கள் கனவில் மகிழலாம். ( ‘ப்ரெய்யின் ந்யூரோ ரெஜிஸ்டர் ரீடிங்’ என்றொரு துறை நாளை வரலாம், ‘ஹேய், அவருக்குள்ள ரெஜிஸ்ட்டர் ஆயிருக்கற அந்த உருவத்தின் ஆர்எஃப்சி கோடும், இதோ இன்று வளர்ந்து உருமாறி நிற்கும் இந்த இமேஜில் இருப்பவரின் ஆர்எஃப்சி கோடும் ஒன்றாயிருக்கிறது. இரண்டும் ஒரே மேக் அட்ரஸ். ஓ மை காட், தட் பர்சன் அண்ட் திஸ் பர்சன்… போத் ஆர் சேம்!’ என்று கண்டறியும் நிலை வரலாம்!)

நினைவுகளை சுமந்து கொண்டு எங்கள் நினைவுகளில் எப்போதும் இருக்கும் ஆசிரியர்கள் வாழ்க! பிறவி பெற்று வந்தாலும் நீங்கள் ஆசிரியர்களாகவே இருக்க பிரார்த்தனைகள்!

வாழ்க! மலர்ச்சி வணக்கம்!

(தொடரும்)

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    04.02.2022

[email protected]

🌸🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *