சார்பதிவாளர் அலுவலகங்கள் அசத்தல்

குடும்ப சொத்து ஒன்றை முறைப்படி எங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்காக புவனகிரி சார் பதிவாளர் அலுவலகம் வந்தேன்.

வெளியில் பத்திரம் விற்பனையாளர், பத்திரம் எழுதித் தருபவர் என அந்த நிலை பணிகளும் பணியாளர்களும் அப்படியேதான் உள்ளனர். ஆனால், அரசின் பதிவாளர் அலுவலகம் அசத்துகிறது.

‘இந்த நேரத்திலிருந்து இந்த நேரம் உங்கள் வேலை, அப்போது வந்தால் போதும்!’ என்று முன்பே நேரம் தருவதோடு, செல்லிடப் பேசியில் டோக்கனும் வந்து விடுகிறது. இடது கைப் பெருவிரலில் மசியை நனைத்துத் தேய்த்து விரல் வைக்கும் வேலைகள் இல்லை. விரல் வைத்தால் ஆதார் எண்ணோடு பொருத்தி சரி பார்த்து, உட்கார வைத்து ‘வெப்கேம்’ வழியே படமெடுத்து, சில நிமிடங்களில் நம் படம், விவரம் என அனைத்து தகவல்களையும் ஒன்றாக்கி தாளில் இறக்கி கையெழுத்து வாங்க சொத்து – நிலப் பதிவு சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது.

(பத்திரம் எழுதுபவர் தேதி விவரம் போன்றவற்றை தவறாக எழுதியிருந்தால் அதனால் தாமதம் ஏற்படலாமேயொழிய, இயல்பாக பதிவு அலுவலகத்தில் குறித்த நேரத்தில் முடித்து விடுகிறார்கள்)

‘அன்புடையீர், உங்கள் புத்தகம் சொத்து / நிலம் எண் / 02.2022 தயாராக உள்ளது. 4 மணிக்கு வந்து பெற்றுக் கொள்ளவும்’ என்று குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது நமக்கு.

எல்லா விவரங்களும் தரவுகளும் அரசின் மேகக் கணிணி கிடங்குகளில் எண்மப் பதிவாய் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இது, எல்லாருக்கும் நல்லது. நாளைய பரிவர்த்தனைகளை எளிதாக்கி விடும். போலிகள், ஏமாற்றுதல்களை தவிர்க்க உதவும்.

‘3213’ சதுர அடி என்பதற்குப் பதிலாக ‘3231’ சதுர அடி என்று எழுதப்பட்டப் பத்திரத்தை, ‘தப்பா இருக்கு பாருங்க. சரி பண்ணிட்டு வாங்க!’ என்று உடனே திருத்துகிறார்கள் ஆன்லைன் தரவுகளின் உதவி கொண்டு என்பது அசத்தல்.

ஓர் அலுவலக உதவியாளர், இரண்டு பெண் அலுவலகர்கள் என எண்ம கணிணி மய உதவி கொண்டு மொத்த பணிகளையும் சிறப்பாக செய்கிறார்கள்.

ஐ ஆம் இம்ப்ரஸ்டு!

– பரமன் பச்சைமுத்து
10.02.2022
புவனகிரி

#RegistrarOffice
#Bhuvanagiri
#Registrar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *