கப்பக்காரத் தாத்தா : வெள்ளை முயல்

‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைலு ஓடனும்!’

கப்பக்காரத்தா சொல்லிதான் இதை முதன்முதலில் கேட்டேன். கப்பக்கார தாத்தா முயல் வளர்த்தார். பள்ளியிலும் கதைகளிலும் அறிந்திருந்த முயலை வாழ்வில் முதன் முறையாக சிறுவனாக பார்த்தது அவர் வீட்டில்தான்.

கப்பக்காரத் தாத்தா என்று என் வயது சிறுவர்களும், ‘கப்பக்காரர்’ என்று மொத்த மணக்குடியும் அழைத்த அந்த தாத்தாவின் உண்மை பெயர் எனக்கு மறந்தே போனது. என்னமோ ‘படையாச்சி’ என்று அவர் பெயரை யாரோ சொன்னதாக நினைவு.

பாப்பாக் குளத்து வடமேற்கு மூலையில் செட்டியாரின் நெல்லடிக்கும் களம், அதையொட்டி குளத்தின் உபரி நீர் வெளியேறவும் மேற்குவெளி வயல்களின் பாசனத்திற்கு நீர் வெளியேற்றவுமான வாய்க்கால், அடுத்து பூமாலையின் குடிசை, அதற்கு கிழக்கே எங்கள் மனை, எங்கள் வீட்டையொட்டி கிழக்கே இருந்தது கப்பக்காரரின் வீடு. வீடென்றால் மண் சுவறு, கீற்று வேய்ந்து மேலே வைக்கோல் வேய்ந்து, அதன் மேல் குறுக்கும் நெடுக்குமாக தாள் பிரிகளால் இழுத்துக் கட்டப்பட்டக் கூறை. அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் கூறை வீடுகளே. அன்று மணக்குடியின் பெரும்பாலான வீடுகள் அப்படியே இருந்தன. உடையார் தெரு, அக்ரகாரத் தெரு தவிர மேற்குத் தெருவில் தட்சிணாமூர்த்தி வீடு, சம்மந்தம் வீடு, நாகராஜ் மாமா வீடு, திமுக சுந்தரம் வீடு, ராஜசண்முகம் வீடு என சில தவிர மற்றவை கூறை வீடுகளே.

சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாக இருந்த பொன் மாணிக்க வேலின் மீசையைப் போலவே முறுக்கிய மேல்நோக்கிய வெள்ளை மீசை வைத்திருப்பார் கப்பக்காரத் தாத்தா.

கூறை வீடென்றாலும் சாணி போட்டு மெழுகிய தரையும் சுவரும் என சுத்தமாக இருக்கும் அவரது வீட்டு சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்ட, கோட்டு சூட்டு தலையில் தொப்பி சகிதமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் இளவயது கப்பக்காரரின் கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று இருக்கும். ‘பினாங்க்ல எடுத்தது!’ என்று சொல்லி மீசையை மேல் நோக்கி நீவி பெருமையாய் சிரிப்பார் கப்பக்காரத் தாத்தா.

தாத்தாவின் மனைவி எப்போதோ இறந்து விட, தனியாகவே இருந்தார் அவ்வீட்டில். வீடு மனை விவசாயம் என இருந்தாலும் தனியாகவே இருக்கும் இவருக்கு மேலத்தெருவிலிருந்த தங்கத்தை உதவியாளனாக நியமித்திருந்தார் ராயர் மாமா.

வெளிநாட்டுக்கு அந்நாட்களில் கூலி வேலைக்குப் போன பலரைப் போலவே, பினாங்கு துறை முகத்திலும் சில கப்பல்களிலும் கரி அள்ளிக் கொட்டும் வேலை செய்திருக்கிறார் தாத்தா. (பினாங்குதான் அந்நாட்களில் மலேசியாவின் முக்கிய நகரமாக இருந்தது. கப்பல் குறைந்து விமானம் அதிகரித்ததும் இலங்கையில் தலைமன்னார் பொலிவிழந்து கொழும்பு ஒளி வீசுவது போலவே, மலேசியாவிலும் பினாங்கு களையிழந்து கோலாலம்பூர் ஒளி பெற்றது. மூன்றாண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் பெந்த்தாங் நகரில் ஒரு பள்ளியில் மலர்ச்சி நிகழ்ச்சி முடித்து விட்டு கோலாலம்பூர் வழியாக செம்பனை தோட்டங்களைக் கடந்து சிங்கப்பூருக்கு காரிலேயே முகுந்தனோடு வரும் போது ‘அப்படியே திரும்பிப் போய் பினாங்கு, ராஜேந்திரன் இறங்கின கடாரம் எல்லாத்தையும் பாத்துட்டு வந்துருவோமா!’ என்று ஆசை வந்தது உண்மை)

பினாங்கில் அல்லலுற்றும் சம்பாதித்தும் தாத்தா ஊருக்குத் திரும்பிய போது, ‘கப்பலில் வேலை பார்த்தாராம் இவர்’ என்பது பரவி, வ உ சிக்குக் கூட கிடைக்காத அந்த பெயரை இவருக்கு சூட்டி விட்டார்கள் ‘கப்பல்காரர்’ என்று. அவரே சொந்தமாக கப்பல் வைத்திருந்ததைப் போல ‘கப்பல்காரர்’ என்றழைக்கப்பட்டு அது மருவி ‘கப்பக்காரர்’ ஆனார். மொத்த மணக்குடியும் அவரை அப்படியே அழைத்தது.

கப்பக்காரத்தாத்தாவின்
வீட்டுக்கு வெளியே இரண்டு மரச்சட்ட கூண்டுகள் திடீரென்று வந்தன. அதில் அடுத்த நாள் அவ்வயது அதிசயமான இரண்டு வெள்ளை வெளேர் முயல்கள் இருந்தன. வெள்ளை நிறத்தில் உடலும், நீள் காதுகளும், சிவப்பு போன்ற கண்களும், நம்மை சட்டையே செய்யாமல் அவை கிழங்குகளை உண்டதும், திடீரென்று தாவி ஓடியதும் அவ்வயதின் பெரும் அதிசயங்கள்.

பள்ளிக்குப் போகும் முன், பள்ளி விட்டு வந்து என விழித்திருக்கும் எந்நேரமும், உறங்கும் போது கனவுகளில் கூட வெள்ளை முயல்கள்தான் நமக்கு. புல்லின் பனி நீரை குடிக்கும் முயல்களை தொட்டுத் தடவி கொண்டாடி மகிழ்வோம் சண்முகமும் ஆளவந்தாரும் நானும்.

அமாவாசைக்கு அமாவாசை முயல் குட்டி போடும் என்பது (அன்று மட்டுமல்ல, இன்றும்) அறிவியல் உயிரியல் அதிசயம்தான் எனக்கு.

ஒரு மாலைக் கருக்கலில் மஞ்சள் நிற சீமை சரக்கை மிடறு மிடறாக குடித்து பல்லைக் கடித்துக் கொண்டிருந்த கப்பக்காரத்தாத்தா ‘முயல் ரத்தம் குடிச்சிட்டு மைலுக்கு மைல் ஓடனும்!’ என்றார். ஒன்று இறந்து விட, மற்றொன்றை தாத்தா சமைத்து உண்டு விட்டார் என்பது அன்று புரியவில்லை, அடுத்த நாள் காலையில் முயல்கள் இல்லாதது கண்டும் புரியவில்லை இனி முயல்கள் வராது என்று.

பின்புறத்து வயல்களில், களத்து புல்வெளிகளில், கப்பக்காரர் வீட்டு வைக்கோல் போரின் அருகில், மாட்டு வண்டியின் அடியில் என முயல்களைத் தேடி அலைந்தோம், சோகத்தில் வெதும்பினோம், கனவுகளில் முயல் வர அழுதோமாம். வரவேயில்லை வெள்ளை முயல்கள்.

சில ஆண்டுகளில் தாத்தாவும் இறந்து விட, நாங்களும் பாப்பா குளத்துக்கு தென்கிழக்கே இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு இடம் பெயர, முயல்களை மறந்தே போனேன். பெங்களூரில் மைக்ரோலேண்ட்டில் பணி புரிந்த போது, ‘ஹண்ட்டிங் நைஃப்’ தொப்பி, பேக் பேக் சகிதமாக ராமு, முகுந்தனோடு ஒரு முறை ‘மேக்கே தாட்டூ’ அருகிலுள்ள ஒரு மலையில் ஏறிய போது, புதரிலிருந்து மிரண்டு ஓடிய பழுப்பு காட்டு முயல்கள் கப்பக்காரத் தாத்தாவின் முயல்களை நினைவு படுத்தி ஓடி மறைந்தன.

‘மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தில், நாயகனுக்கு ‘ஃபாலோ த வொயிட் ராபிட்’ என்ற சமிக்ஞை வரும் அந்தக் காட்சியைக் கண்ட போதும் எனக்கு இதே கதைதான்.

இன்று சிதம்பரம் வந்த போது, நம் மலர்ச்சி மாணவர் வித்யாவின் மகள் ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு சீவிய கேரட்  முள்ளங்கி துண்டுகளை இரண்டு வெள்ளை முயல்களுக்குத் தந்த போது, பீறிட்டு வந்து விட்டன உள்ளிருக்கும் வெள்ளை முயல் நினைவுகள்.

அள்ளிக் கையில் எடுத்து விட்டேன். அருகிலேயே உரோமங்கள் இல்லாத எலிக் குஞ்சு அளவிலான புதிதாய்ப் பிறந்த முயல் குட்டி.

‘சிதம்பரம் கோயிலுக்கு போறீங்களா சார்?’

‘ஆமாம்! கொடி மரத்துகிட்ட விழுந்து கும்புட்டு வருவேன்!’

‘நானும் வர்றேன் சார்!’

‘சரி வாங்க!’

மேலக் கோபுர வாசலை நோக்கி நடக்கிறோம்.

‘வியாழக்கிழமை, குருவோட நாளு, குரு கூட கோயிலுக்கு போறேன் சார் நான்!’

‘அதிருக்கட்டும்! நீங்க முயல் வளக்கறீங்களா?’

‘ஆமாம் சார்! நல்லா இருக்கு சார்! சார்… அமாவாசைக்கு அமாவாசைக்கு குட்டி போடும் சார்!’

கால்கள் நடக்கின்றன, மனதில்
கப்பக்காரர் நினைவுகள் ஓடுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா? அமாவாசைக்கு அமாவாசை முயல் குட்டிகள் ஈனுமா? உண்மையா?

– பரமன் பச்சைமுத்து
11.02.2022
மணக்குடி

#Manakkudi
#VellaiMuyal
#WhiteRabit
#Rabit
#Kappakkaarar

Facebook.com/ParamanPage

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *